நாயகனுக்கும் உதவும் துணைப்பாத்திரம், இறுதியில் கதையின் நாயகனாக மாறினால்....

 

 

 

 



ஐயம் போசஸ்டு ஸ்வார்ட் காட்
மங்கா காமிக்ஸ்
குன்மங்கா.காம்

நகரில் உள்ள சிறுவன், காமிக்ஸ் ஒன்றை படித்துக்கொண்டிருக்கிறான். திடீரென அந்தக் கதையில் வரும் துணைப்பாத்திரமாக மாறி தொன்மைக் காலத்திற்குச் செல்கிறான். பத்தாண்டுகளுக்குள் தீயசக்தி இனக்குழுவோடு போர் நடக்கவிருப்பது அவனுக்கு முன்னமே தெரியும். அதாவது காமிக்ஸை படித்த காரணத்தால். அதற்கேற்ப நாயகனைக் கண்டுபிடித்து அவனுக்கு உதவி சண்டை போட வைப்பதுதான் கதை.

நாயகன் மோ மோயங். நாம்கூங் குலத்தைச் சேர்ந்தவன். சரக்கு அடித்துவிட்டு பிறரை ஒரண்டு இழுப்பதுதான் அவனது வேலை. நகரில் உள்ள சிறுவனின் ஆவி, அவனது சுயநினைவு இல்லாத உடலில் புகுந்தபிறகு மாற்றம் ஏற்படுகிறது. அவனது காலை வெட்ட வந்த நாயகனிடம் மன்னிப்பு கேட்டு உயிர் பிழைக்கிறான். அதேநேரம், அவனுக்கு உதவி நெருக்கமாகிறான். அதேநேரம், வாள் பயிற்சியில் ஈடுபட்டு மெல்ல வலிமை பெறத் தொடங்குகிறான். அவனைப் பற்றி பெற்றோருக்கு பெரிய நம்பிக்கை இல்லை. மாமா, மாமா பையன் என யாருக்குமே இவன் உருப்படுவான் என்ற எண்ணமில்லை. இந்த அவநம்பிக்கையை மோ முயோங் மெல்ல மாற்றி துணைப்பாத்திரத்தில் இருந்து மையப் பாத்திரத்திற்கு மாறுகிறான்.

மு மோயங், நவீன கால சிறுவனின் ஆவி காரணமாக காமிக்ஸ் புத்தகத்தில் உள்ள பாத்திரங்கள், கதையின் போக்கு என அனைத்துமே தெரியும் என்பதால், புத்திசாலித்தனமாக முடிவெடுக்கிறான். அது, அவனைச் சுற்றியுள்ளவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. தற்காப்புக்கலை கற்று சண்டை போடுவது, அதில் சாதிப்பது எல்லாம் அவனது திறமை. இதில் எதிர்காலத்தை முன்னமே அறிந்திருப்பது உதவுவதில்லை. கதையின் நாயகனை தீயசக்தி போருக்கு தயார்படுத்துவது அவனது பணி. விலைமதிப்பே இல்லாத உடலை வலுவாக்கும் மருந்து,

கூலிக்கொலைகாரர்களிடம் இருந்து பெற்ற வாள் என இரண்டு பரிசுகளை நாயகனுக்கு வழங்குகிறான். நாயகன், டைகாங் எனும் அழிந்துபோன இனக்குழுவைச் சேர்ந்தவன். அவனுக்கு நாம்கூங் இனக்குழுத்தலைவர் ஆதரவு தெரிவித்து பராமரித்து வருகிறார். முக்கியக் காரணம், அவனது துல்லியமான வாள்வீச்சு திறமை. மு மோயங்கிற்கும் நாயகனுக்கும் நட்பு உருவாகிறது. கூடவே, தவறான செயல்களைச் செய்யும் ஒருவனுக்கு கையாளாக உள்ளவனையும் கடன்தொகையை அடைத்து தனது பாதுகாவலனாக வைத்துக்கொள்கிறான் மு மோயங். மோயங் நாயகனுக்கு அழகான சக்தி மிகுந்த வாளைக் கொடுத்துவிட்டு, துருப்பிடித்த குறுவாள் ஒன்றை தேர்ந்தெடுக்கிறான். மூன்பீஸ்ட் எனும் அந்த வாள், ஆன்ம சக்தியை செலுத்தும்போது மட்டும் அதிலுள்ள கத்தி கூர்மையாகும். மற்ற நேரங்களில் காயலான் கடை இரும்பு போலவே தோற்றமளிக்கும்.
காமிக்ஸ் கதையில் மு மோயோங்கிற்கு பெரிய வலுவான பாத்திரமில்லை. நாயகன், அவனைப் பின்பற்றும் மோயோங்கின் பாதுகாவலன் ஆகிய இருவருக்கும்தான் முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் மோயோங்கின் புத்திசாலித்தனம் அனைத்தையும் மாற்றுகிறது. அவன் நாயகனாகி, உண்மையான நாயகனின் முக்கியத்துவத்தைக் குறைக்க வைக்கிறான். இறுதியாக எதிரிகளை வென்று முரிம் கூட்டணி தலைவராக வாள்வீச்சு வீரன் நாயகன் பதவியேற்கிறான். மு முயோங் அந்த விழாவிற்கு செல்வதில்லை. அவன் மெல்ல நவீன காலத்திற்கு திரும்புகிறான். அங்கு அவனை தொன்மைக்கால நண்பனாக இருந்த நாயகன் சந்திக்கிறான் என்பதோடு கதை நிறைவுபெறுகிறது. டெம்பிளேட்டான கதை முடிவு பெரிதாக ஈர்க்கவில்லை. நல்ல நட்பு காலத்தைக் கடந்தது என்று புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தக்கதையில் தற்காப்புக்கலை, சண்டை என்பதை விட மு மோயோங்கின் அபாரமான புத்திசாலித்தனம்,சமயோசித புத்திதான் ஆச்சரியப்படுத்துகிறது. அதிலும் அவன் கடத்தப்பட்ட வேறொரு இனக்குழுவைச் சேர்ந்த இளம்பெண்ணை மீட்க செய்யும் முயற்சி... அதில்தான் அவனுக்கு தீயசக்தி வாள் கிடைக்கிறது. அதில் ஒரு பொக்கிஷம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதைப்பெற பலரும் அடித்துக்கொள்கிறார்கள். அதாவது, ஒருங்கிணையாத உதிரி அமைப்புகள், தீயசக்தி ஆட்கள். அவர்களை ஒன்றாக திரட்டி தன்னை நோக்கி வரவைக்க மோயோங் போடும் திட்டம் அசாதாரணமானது. உயிருக்கு ஆபத்து தருவதும் கூட..

தீயசக்தி இனக்குழுவோடு போராடும் பெருமை காமிக்ஸில் நாயகனுக்கு மட்டும உண்டு. மோயேங்கிற்கு அவனுக்கு உதவும் துணைப்பாத்திர வேலைதான். ஆனால், நவீனகால சிறுவன் ஆவி உள்ளே நுழைந்து மோயேங்கை மாற்றி அவனை வடக்கு சூரியனாக நாயகனாகவே மாற்றுகிறது. இதிலும் நாயகன் ஒரு குறுவாள், இரு நீண்ட வாட்களோடு சண்டைபோடுகிறான்.

தவறான பழக்கங்கள் கொண்ட, பிறரால் மோசமான செயல்களைச் செய்ய தூண்டிவிடப்பட்ட ஒருவன், அதிலிருந்து வெளியேறி இனக்குழு தலைவனாகும் தகுதிக்கு அருகில் வருவதோடு, உலகைக் காக்கும் ஒப்பற்ற வீரன் என்ற பெருமையும் பெருமளவு உயர்கிறான். இதற்கு முக்கியக்காரணம். அவனது மனவலிமை மட்டுமே.

தற்காப்புக்கலை சார்ந்த மங்கா காமிஸ்களை படிக்க பிடிக்குமா, தாராளமாக இந்த காமிக்ஸ் தொடரைப் படிக்கலாம். இது நிறைவுபெற்ற கதை.
கோமாளிமேடை குழு





 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்