அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள்
அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள்
மாவோ காலத்தில் நான்கு நபர்கள் அரசியல், சமூக, பொருளாதார பலம் பெற்றவர்களாக வலம் வந்தனர். அவர்கள்தான் கட்சியில் செல்வாக்கு பெற்றவர்கள். 1976ஆம் ஆண்டு மாவோ மறைந்தபிறகு டெங் ஷியாவ்பிங் தலையெடுத்தார். அவர், மாவோ தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கென உருவாக்கிய தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களை மாற்றியமைத்தார். இரும்பு அரிசிக் கிண்ணம் எனும் திட்டம் இந்த வகையில் ஒழித்துக்கட்டப்பட்டது. அரசு நிறுவனத்தில் வேலையில் இருந்த பணியாளர்களுக்கு சலுகை கட்டண வீடு, மருத்துவம் இலவசம், காப்பீடு உண்டு, இன்னும் நிறைய சலுகைகள் கிடைத்தன. குறிப்பாக அவர் தம் பிள்ளைகளுக்கு கல்வி இலவசம். ஆனால், டெங் தனிநபர்கள் அனைவரும் செல்வந்தர்களாகுங்கள் என்ற கோஷத்துடன் சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.
அதற்குப் பிறகுதான் எட்டு குடும்பங்கள், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளே நுழைந்தனர். சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள், உறுப்பினர்களிடையே வினோத வாழ்க்கை முறை உண்டு. அதாவது, பொதுவாழ்க்கை, தனிவாழ்க்கை, ரகசியவாழ்க்கை என மூன்று வாழ்க்கை உண்டு. சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு அரசில் வகிக்கும் பதவியைப் பொறுத்து சம்பளம் உண்டு. ஆனால், இந்த சம்பளத்தைக் கடந்து அவர்கள் அரசு பணத்தை முதலீடாக கொண்டு ஆரம்பிக்கும் தனியார் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் பணம், வெளிநாட்டில் வாங்கும் சொத்து என ஏகபோகமாக முதலாளித்துவ கொள்கைகளால் செழிக்கிறார்கள். அமெரிக்கா எதிரி என சீனாவும், சீனாவை எதிரி என அமெரிக்கா கூறினாலும் கூட வணிகம் என்று வந்துவிட்டால் இருதரப்பும் கிடைக்கும் லாபத்தில் மட்டுமே கருத்தாக இருக்கிறார்கள். சீனாவில் எட்டு குடும்பங்களின் இளவரசர்களிடமிருந்து, பிள்ளைகளிடமிருந்து வரும் பணத்தை மடைமாற்றி பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, சொத்துக்களை வாங்க உதவுவது ஆகியவற்றில் அமெரிக்காவின் பிரபல வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்களும் உதவியுள்ளன. இதைப்பற்றிய பல்வேறு புலனாய்வு கட்டுரைகளை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இப்படி எட்டு குடும்பத்தில் வென் என்பவர் பற்றி கூறிய செய்திக்காக, அந்த நாளிதழ் நிருபர்கள் சீனத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் எல்லாம் உண்மை மறைந்துவிடுமா என்ன?
அமைப்பு ரீதியான ஊழல்கள் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாக செய்கிறது. யாரும் எதையும் எளிதாக கண்டுபிடிக்கவே முடியாது. ஊழல்களை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம். சீனாவில் ஒருவர் முன்னேற வேண்டுமென்றால், அவருக்கு உறவுகள், அரசியல் தொடர்புகள், நட்புகள் தேவை. இவையெல்லாம் இருந்தால் சீன அதிபர் ஷி ச்சின்பிங் இடும் உத்தரவுகளைக் கூட புறக்கணிக்க முடியும். அதிபர் 2012ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு பிரசாரங்களை செய்தார். அதை கட்சி உறுப்பினர்களிடமிருந்து நீக்க முயன்றார். இதெல்லாம் பெரிய பயன் அளிக்கவில்லை. இப்படியான பிரசாரத்தால் அதிபர் ஷி, பலமுறை படுகொலை செய்யப்பட இருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மாஃபியா குழு. அதன் தலைவராக இருப்பவர் காட்ஃபாதர் ஷி ச்சின்பிங். அவருக்கே இந்த நிலை. அமரத்துவம் வாய்ந்த எட்டுப்பேர் பற்றி பேசினோம் அல்லவா? இவர்களுக்கும் ஒரு ஒப்பந்தம் இருந்தது. அறுபத்தைந்து வயதுக்கு மேல் கட்சியில் பதவி வகிக்க கூடாது. சுழற்சி முறையில் அரசு அதிகாரம் என்பதை பேசி வைத்துக்கொண்டனர். இதில் முதன்மையாக இருந்தது. டெங் ஷியாவ் பிங் குடும்பம்.
பெற்றோர் அரசு பதவியில் இருப்பார்கள். பிள்ளைகள் வணிகத்தில் இருப்பார்கள். அரசு சொத்துக்களை மடை மாற்றி அல்லது அரசு நிறுவனங்களில் இருந்து பணத்தை மோசடி செய்து பிள்ளைகளின் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். இதை வைத்து தொழில் செய்து பிள்ளைகள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்குவார்கள். ஊழல் பிரச்னை தலைதூக்கியபிறகு, இளம் தலைமுறை இளவரசர்கள், வெளிநாடுகளுக்கு பறந்து சென்று தங்கிவிட்டனர். அவர்களின் பெற்றோர் கட்சிப் பணியை விட்டு விலகியபிறகு இளையோரோடு சேர்ந்துகொள்வதாக திட்டம் வகுத்துக் கொள்கிறார்கள்.
அதிபர் ஷி ச்சின் பிங், எப்படி கட்சியில் முன்னேறி நிரந்தர அதிபராக தன்னை ஆக்கிக்கொண்டார்? அவரது குடும்பம் கனிமச்சுரங்கங்கள், நில விற்பனை, தொலைத்தொடர்பு கருவிகளை விற்று லாபம் பெற்று செல்வாக்கான குடும்பமாக மாறியது. பிறகுதான், ஷி ச்சின்பிங் கட்சியில் வலுவானவராக மாறினார். அதிகாரத்தை கைப்பற்றுவது, அதை தக்க வைத்துக்கொள்வது, தனக்கு எதிரான விமர்சனங்களை முடக்குவது ஆகியவற்றில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றுபோல்தான். பதவி என்பது விக்கிரமாதித்தன் அரியணை போன்றதுதான். சீனாவின் சிசிடிவி காட்டுவது அரசியல் தலைவர்களின் பொதுவாழ்க்கையை மட்டுமே. அதையும் கடந்து தனிவாழ்க்கை, ரகசிய வாழ்க்கை என நிறைய கசடுகளும், அழுக்கும், துரோகங்களும் நிறைய பாதைகள் நிறைய உண்டு. அதிபர் ஷி பற்றிய விமர்சனங்களைக் கொண்ட நூல்கள் இரண்டை எழுத்தாளர் ஒருவர் எழுதினார். அதை வெளியிட ஹாங்காங்கைச் சேர்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒப்பு்க்கொண்டது. பின்னர், அதன் உரிமையாளர் திடீரென கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இதேபோல இன்னுமொரு பதிப்புநிறுவனமும், நூலை வெளியிடக்கூடாது என மிரட்டப்பட்டது. அதன் வெளியீட்டாளர், அரசு தொலைக்காட்சியில் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் தரவைக்கப்பட்டார்.
அதிபர் ஷி ச்சின்பிங், ஊழலுக்கு எதிரான பிரசாரம், மாசுபாட்டைக் குறைக்கவேண்டும் என்று கூறுவது எல்லாம் பெரிதாக எடுபடவில்லை. காரணம், கட்சிக்குள் உள்ளவர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் ஆட்கள், அவர்களுக்குள் உறவு, தொடர்பு என இரண்டுமே உண்டு. இந்த காரணத்தால்தான் அரசு, நிலக்கரி உற்பத்தியை மாசுபாடு காரணமாக குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட அப்படி குறைக்க முடியாது என நிலக்கரி உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் வெளிப்படையாக பேட்டி அளிக்க முடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அனைவருக்குமே வரி சலுகை கொண்ட கரீபியன் தீவுகள், கனடா, அமெரிக்காவில் ஏராளமான சொத்துக்கள் உண்டு. நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள், கனடாவில் வட்டியில்லாத கடன்களை அளிக்க ஒப்புக்கொண்டு, விசா வாங்கிக்கொண்டு வசிக்க தயாராக இருக்கிறார்கள்.
பனாமா பேப்பர்ஸ் என்ற ஊழல் வெளியீடு பற்றி நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். அதில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே ஆயிரம் பணக்கார சீனர்கள் என முழுமையான புலனாய்வு கட்டுரைகள் வெளியானது. அப்போதுதான் ஊழல் பற்றிய விஷயமே மக்களுக்கு தெரிய வந்தது. கட்சித்தலைவர்கள் பலரும், அவர்களது மனைவி, மகன், மகள், தாயார் பெயரில் பினாமி சொத்துக்களை வைத்துக்கொண்டு கமுக்கமாக ஒழுக்க வாழ்க்கை வாழ்கிறார்கள். ஊழலை நேரடியாக செய்யாமல் மறைமுகமாக செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சீனாவை இனியும் ஒருவர் சோசலிச நாடு என சொல்லமுடியுமா என்றே தெரியவில்லை. கம்யூனிசம், கம்யூனிஸ்ட் என்பதெல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கான முகமூடிகளில் ஒன்று.
டெங் ஷியாவ்பிங் நாட்டை தனியாருக்கு அளித்துவிட்டு வரும் லாபத்தில் பங்கு பிரித்துக்கொண்டு லாபமடையும் முறையை உருவாக்கினார். அந்த முறையில் சீனா நாடு சென்றுகொண்டிருக்கிறது. கட்சியில் உள்ள தலைவர்கள், அவர்களின் அடிப்பொடிகள், மேயர்கள், நீதிமான்கள், காவல்துறை தலைவர்கள் என பலருமே லாபம் சந்திக்கவே திட்டங்களை செய்கிறார்கள், லாபம் அடைகிறார்கள். இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைகின்றன. பொதுத்துறை வ்ங்கிகளில் வாராக்கடன்கள் கூடுகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக