திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன்?
திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன்?
ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி சமூகமாக இருந்தபோது உணவுக்கான தேடுதலை முடித்துவிட்டு குகைக்கு திரும்பி வருவதில் பிரச்னைகள் எழவில்லை. அப்போது, மக்கள் தாம் கடந்து சென்ற வழித்தடத்தை மறந்துவிடவில்லை. அப்படி மறந்தால் உயிரை இழக்க வேண்டி வரும். இன்று முன்பை விட வசதிகள் கூடியுள்ளது.
புதிய இடங்களுக்கு சென்று வர, செயற்கைக்கோளோடு இணைந்த வரைபட வசதிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தியும் கூட மக்கள் வழிதவறி விபத்துகளை சந்தித்து வருகிறார்கள். கிராமங்களில் வாயிருக்க வழி கிடைக்காமலா போகப்போகிறது என்பார்கள். ஆனால் இன்று, மக்கள் பிறருடன் உரையாடுவதை விட தொழில்நுட்பத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய இடங்களுக்கு செல்வது என்றால் காரிலோ, இருசக்கர வாகனங்களோ உடனே அலைபேசியில் உள்ள வரைபட வசதியை சொடுக்கி இயக்குகிறார்கள். அதில் கூறும் பரிந்துரைகளை மாறாமல் பின்பற்றுகிறார்கள். இந்த வசதி பெரும்பாலான நேரம் சரியாக வழி காட்டுகிறதுதான். மறுக்க முடியாது. ஆனால் சில சமயங்களில் தவறாக வழிகாட்டி விபத்து ஏற்படவும் காரணமாக அமைகிறது.
மேற்குநாடுகளில் குறிப்பாக கார்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், மக்களுக்கு திசையறியும் திறன் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். மங்கோலியாவில் உள்ள கால்நடை மேய்ச்சல்காரர்கள், திசை அறியும் கருவிகள் ஏதுமின்றி நிலப்பரப்பு, ஆறுகள், செடி, கொடிகள் இவற்றை வைத்தே சரியான இடங்களை அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
ஒருவர் கிராமம் அல்லது நகரத்தில் கால்நடையாக அலைந்து திரியாமல் கார்களில் அல்லது அலைபேசியில் உள்ள வரைபட வசதிகளைப் பயன்படுத்தும்போது அவருக்கு இயல்பாகவே திசை கண்டறியும் திறன் குறைந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். திசைகளை அறிந்து இடங்களை தேடி வெற்றி பெறுவதில் கிராமத்தினர் முந்துகிறார்கள். நகரத்தினர் பின்தங்கியுள்ளனர்.
ஆய்வகத்தில் திசை அறியும் சோதனைகள், குறிப்பிட்ட கட்டமைப்பை நிறுவி செய்யப்படுகின்றன. ஆனால், உண்மையாக களத்தில் அதாவது சாலையொன்றில் குறிப்பிட்ட இடத்தை தேடிச்செல்வதோடு ஒப்பிட்டால் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
எனவே, ஆய்வக ஆய்வுகள் பெரிதாக பயனுடையவை அல்ல என ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் நவம்பர் இதழில் எழுதிய கட்டுரையில், லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹியூகோ ஸ்பியர்ஸ் கூறியுள்ளார்.
பொதுவாக, ஒருவர் ஓரிடத்தை தேடிச் சொல்லும்போது சுற்றியுள்ள சூழல்கள், ஒலி, வாசனை, காலச்சூழல் என நிறைய அம்சங்கள் உள்ளன. திசையறிவதில் அவையும் தாக்கம் செலுத்துகின்றன. வெளிப்புற தாக்கம் இன்றி, ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. எனவே, கிடைக்கும் ஆய்வு முடிவுகள், உண்மையான சூழலுக்கு அருகில் வருவதில்லை.
2021ஆம் ஆண்டு, லண்டன் பல்கலைக்கழகத்தில் பியர்ல் என்ற ஆய்வகம் (PEARL) உருவாக்கப்பட்டது. நான்காயிரம் சதுர மீட்டருக்கு திரைப்பட அரங்குகள் போல வீடு, நடைபாதை, சாலை, மருத்துவமனை என உருவாக்கப்பட்டது. இதில், பங்கேற்பாளர்களை நடக்கவிட்டு நிஜ உலகை போல சூழல்களை உருவாக்கி சோதனைகள் நடத்தப்பட்டன.
2016ஆம் ஆண்டு தொடங்கி சீ ஹீரோ குயிஸ்ட் (Sea hero quest)என்ற இணைய விளையாட்டை பல லட்சம் விளையாடி வருகின்றனர். படகில் சென்று மாய விலங்குகளைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு, மனிதர்களின் திசை அறியும் ஆய்வு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வு வழியாக, பார்வை மட்டுமல்லாமல் வேறு அம்சங்களையு்ம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மலேசியாவில் உள்ள பாடெக் பழங்குடி மக்கள், மழைக்காடுகளில் இடங்களைக் கண்டறிய பறவைகளின் பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். இதுபோல பல்வேறு இனக்குழுவைச் சேர்ந்த மக்களில் பலர் நட்சத்திரம், பனி, கடலை அடையாளமாக கொண்டு வருகிறார்கள்.
உணவு, கல்வி என குறிப்பிட்ட தேவையைப் பொறுத்து நடந்து சென்று பெறுபவர்களுக்கு, அச்செயலின் வழியாக திசையறியும் திறன் கூடுகிறது. அப்படி செல்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் திசையறியும் திறன் குறைந்து கொண்டே வருகிறது என அரிசோனா பல்கலைக்கழக சூழல் மானுடவியலாளர் ஆய்வாளர் ஹெலன் எலிசபெத் டேவிஸ் கூறியுள்ளார்.
மனிதர்களுக்கு வயது அதிகரிக்கும்போது திசையறியும் திறன் குறையும். முடிந்தவரை பல்வேறு இடங்களுக்கு நடந்து செல்வதன் வழியாக திசையறியும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்பது நம்பிக்கையளிக்கிற ஆய்வு முடிவாகும்.
source
Secrets of human navigation -sujata gupta(science news)
- ச.அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக