அதிகாரத்தை, பலவந்தத்தை அழிப்பதன் மூலம் உருவாக்கும் மாற்றங்கள்!

 



 

ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றது. மக்களின் ஆதரவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த புரட்சி என்பது மக்களுக்கு பெரிய நியாயத்தை செய்துவிடாது. ரஷ்ய நிலத்தில் ஏராளாமான புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை எப்படி தோற்றுப்போயின என்று அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கட்சிகள். அதற்கு பிறகு மக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் அதிகாரத்தை ருசிப்பதில் தங்களுக்குள் அடித்துக்கொண்டன. இதனால் அவர்கள் பெற்ற வெற்றியை எதிரிகளுக்கு தாரை வார்த்தனர்.

ஒரு நாட்டிற்கு அடிப்படையானது உணவு. மக்களின் ஆதரவோடு வென்றவர், திடீரென சர்வாதிகார பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கினால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சியைப் பெற முடியாது. வெற்று சட்டங்கள் தொழில்துறையை இயங்க வைக்காது. உள்நாட்டு உற்பத்தி அதிகம் என்ற கூவல்கள், பசியோடு காயும் மக்களுக்கு வயிறார சோறு இட்டுவிடாது. அதற்கு சிந்தனை, செயல்திட்டம் என இரண்டும் தேவை.

அரசின் வானொலி, நாளிதழ் விளம்பரங்கள், அறைகூவல்கள், கைக்கூலி ஊடகங்கள் சேர்ந்து உழைத்தாலும் கூட நாட்டை முன்னேற்ற ஆக்கப்பூர்வ செயல்திட்டம் தேவை, மக்களைப் பற்றி புரிந்துகொள்ளாதவர்கள் இயற்றும் மசோதா, சட்டம் இவற்றுக்கு எல்லாம் என்ன மதிப்பு? இப்படியான சூழலில் எப்படிப்பட்ட புரட்சிகர சுதந்திர போராட்ட வெற்றியும் பெரிய பயனைக் கொடுத்துவிடாது.

அரசின்மை, மக்கள் அதிகாரம் என்பது பெட்ரோலை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி தீவைத்து கட்டிடங்கள் மீது எரிவதல்ல. அதிகார சக்திகள், கைக்கூலி ஊடகங்கள் தங்களுடைய சுயநலன்களை தக்க வைத்துக்கொள்ள மேற்சொன்னபடி மக்கள் அதிகாரம் என்றால் வன்முறை, பேரழிவு என பொய்களை, வதந்திகளை பரப்பி வருகிறார்கள். உண்மையில் மக்களின் சொத்துக்களான சாலை, போக்குவரத்து, பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை அழித்துவிடுவதால், என்ன நன்மை கிடைத்துவிடும். இனவாத அரசு, இன்னொரு இனத்தை முழுக்க அழித்துவிட வேண்டுமென்றால், சொத்துகளை அழிக்கும் வேலையை செய்யலாம். செய்தும் வருகின்றன. இஸ்ரேல், பாலஸ்தீனத்தை மெல்ல அழித்து வருவதை அனைவரும் கண்டுதானே வருகிறோம். புதிதாக ரஷ்யா, தனது சோவியல் கால கூட்டமைப்பு நாடுகளை ஆக்கிரமிக்க போரிட்டு வருகிறது.

மக்கள் அதிகார தத்துவவாதிகளில் ஒருவரான பாகுன், இதைப்பற்றி அழித்தல் மூலம் உருவாக்குதல் எனும் கருத்தை கூறியுள்ளார். அதாவது, அரசை, வலுக்கட்டாயத்தை ஒழிப்பதன் வழியாக மக்களுக்கும் உதவும் ஆக்கப்பூர்வ விஷயங்களை உருவாக்க முடியும். இதை புரிந்துகொள்ள முடியாத மூடர்கள், அழித்தல் என்றால் கட்டிடங்களை, பேருந்துகளை, மனிதர்களை அழிப்பது என புரிந்துகொண்டதோடு, தங்கள் அறியாமையை பெரிய கண்டுபிடிப்பு போல கூறிக்கொண்டும் சுற்றிவருகிறார்கள். அப்படியே அவர்கள் கூறுவது போல அழிப்பு நடந்தால், அதன்பிறகு அந்த புரட்சி அல்லது போராட்டம் என்ன ஆகும். திரும்ப அழித்த அத்தனையும் உருவாக்கித்தானே மக்களின் நலத்தை பேண முடியும்? முற்றிலும் அழிப்பு, எந்த காரண காரியமும் இல்லை.

தனியுடைமை, சொத்து, நான் என்ற கருத்துகளிலிருந்து ஒருவர் விடுபட்டால் மட்டுமே சமூக மாற்றங்களைப் பற்றி யோசிக்க முடியும். பொதுவாக அரசு, தான் நம்பும் மதிப்பீடுகளை நேரடியாக அல்லது மறைமுகமாக பிறருக்கு கடத்தும். அதாவது, நிர்பந்தம் செய்யும். கட்சிக்கான அரசியல், அரசின் செயல்பாடு வழியாக வெளியே தெரியும். அதை மறைக்க முடியாது. இப்படியான விஷயங்களை ஒருவர் தானாக மாறும் என்று விட்டுவிட முடியாது. அப்படி மாறிய விஷயங்களை வரலாற்றில் பார்க்கவே முடியாது.

சமத்துவத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். அதில் யாரும் எதையும் ஏகபோகம் செய்யமுடியாது. மனிதர்களை கட்டாயப்படுத்துவது, ஆக்கிரமிப்பு செய்வது நடக்கக்கூடாது. சுதந்திரம் என்பது மனிதருடன் எப்போதும் இருக்கிறது, தனிநபரோ, அரசோ அதை தடுக்காமல் இருந்தாலே போதும். சமூக மாற்றங்களை முன்வைத்து கட்சி போரிட்டு வென்றபிறகு, அதை முறையாக செயல்படுத்தவில்லையெனில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. இப்படியான மாற்றங்களை நிதானமாக செயல்படுத்தவேண்டும். அப்படி செயல்படுத்தாதபோது, முந்தைய ஆட்சியின் சங்கிலியில் இருந்து மக்களை அகற்றிவிட்டு, புதிய ஆட்சியில் வாங்கிய புத்தம் புதிய சங்கிலியில் பிணைப்பதாகவே சிரிப்புக்கு இடம் தருவதாக செயல்கள் மாறிவிடும்.

சமூக புரட்சி என்பது மெதுவாகவே நடைபெறும். மிகவேகமாக நடைபெறாது. அப்படி நடக்கவும் சாத்தியமில்லை. இந்த வகையில் சமூகத்தில் மாற்றங்கள் ஆழமாக நடந்தால் மட்டுமே மாற்றங்கள் வெற்றி பெறும். இதில் அடிப்படையாக ஒருவர் தெரிந்துகொள்ளவேண்டியது, புத்திசாலித்தனம், கூட்டுறவு, நேர்மை ஆகிய அம்சங்கள் இருந்தால் மட்டுமே மாற்றங்கள் வெற்றி பெறும். அப்படியல்லாதபோது, ஆட்சியாளர்கள் மாறுவார்களே ஒழிய எந்த மாற்றமும் வராது. ஒரு குப்பைத்தொட்டிக்கு பதில் இன்னொரு குப்பைத்தொட்டி நாற்காலியில் இருக்கும். நிறம் மட்டும் மாறியிருக்கலாம். ரஷ்யா, இத்தாலியில் அரசே மிகப்பெரிய பலமாக அமைந்து, மக்களைக் கட்டுப்படுத்தியது.

சிலர் வரலாற்றில் செய்யவேண்டிய செயல்பாடுகளை கண்டுபிடிக்கிறார்கள். வரலாறு என்பது நடந்த விஷயங்களின் தொகுப்பு. அது எதிர்காலத்தைக் காட்டும் கண்ணாடி அல்ல. அதிலிருந்து எதையும் அடையாளம் கண்டு மக்களுக்கு செய்யவும் முடியாது. அப்படி கண்டெடுத்து செய்யும் செயல்கள் பெரும்பாலும் மக்களுக்கு உதவாது.




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்