மக்கள் அதிகாரத்துவ இயக்கங்களை அழித்த போல்ஷ்விக், பாசிஸ்ட் அமைப்புகள்!
அரசியல் இயக்கமாக மக்கள் அதிகார அமைப்புகளை பார்ப்பது சுவாரசியமானது. அதன் செயல்பாடு, அமைப்பின் கட்டமைப்பு, உள்ளே நடக்கும் செயல்பாடுகள் என அனைத்துமே வேறுபட்டவை. வெளிப்படைத்தன்மை கொண்டவை.
1848-1914 காலகட்டத்தில் மக்கள் அதிகார அமைப்புகள் தீவிரமாக இயங்கின. அமைப்பிற்குள் மக்களை இழுக்க பிரசாரம் செய்தன. ஆனால், உலகப்போர் நிறைவடைந்தபிறகு, அமைப்புகள் பலரும் அறியாமல் காணாமல் மறையத் தொடங்கின. இதற்கு போல்ஷ்விக், பாசிஸ்ட் இயக்கங்களே முக்கியப் பங்காற்றின. ஐரோப்பாவில் மக்கள் அதிகார இயக்கங்கள் அழிவதற்கு, அதைவிட வலிமையான கருத்தியல் அமைப்புகள் அரசு அதிகாரத்தை கைப்பற்றியதே முக்கியக் காரணம். 1945ஆம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பாவில் சில மக்கள் அதிகார அமைப்புகள் மெதுவாக இயங்கத் தொடங்கின. தனது கருத்தியல் சார்ந்து சில நூல்களை வெளியிட்டன. லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, உருகுவே ஆகிய நாடுகளில் சர்வாதிகாரம் காரணமாக மக்கள் அதிகார அமைப்புகள் செயல்பாடு தேக்கமடைந்தன.
பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, மக்கள் அதிகார அமைப்புகளின் செயல்பாடு முழுக்க நின்றுபோய், அதன் நிழல்தான் மிச்சமிருந்தது. பனிப்போர் காலத்தில் மேற்கில் உள்ள அமெரிக்கா அல்லது கிழக்கில் உள்ள ரஷ்யா என்றே அரசியல் நிலைமைகள் இருந்தன. அதாவது, வாஷிங்டன்னா அல்லது மாஸ்கோவா என விவாதங்கள் உருவாயின. தென்பகுதியில் காலனித்துவத்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வந்தன. அந்த வகையில் மக்கள் அதிகாரத்தை அடியொற்றி மகாத்மா காந்தி, ஜூலியஸ் நியாரெ ஆகிய தலைவர்கள் உருவாகி வந்தனர்.
1960ஆம் ஆண்டுக்குப்பிறகு மேற்கு நாடுகளில் மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும் சந்தித்துப் பேசி மக்கள் அதிகார அமைப்புகளை திரும்ப கட்டமைக்க முயன்றனர். இவர்கள் தங்களை மக்கள் அதிகாரத்துவர்கள் என்று வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், இவர்களது செயல்பாட்டின் அடிப்படையாக இருந்தது, மக்கள் அதிகார தத்துவம்தான்.
பொருளாதார நீதி, அமைதி, பெண்ணியம், சூழல் என குறிப்பிட்ட மையப்பொருள் சார்ந்து இயங்கும் அமைப்புகள் ஏராளமாக உருவாயின. 1973ஆம் ஆண்டு கருப்பின பெண்கள் இயக்கம், பெண்களுக்கான சுதந்திர செயல்பாடுகளை பிரசாரம் செய்து இயங்கத் தொடங்கியது. இனம், வர்க்கம், பாலினம் சார்ந்து கருத்தியல் ரீதியாக களத்தில் நி்ன்று போராடத் தொடங்கினர். 1980ஆம் ஆண்டு தொடங்கி, பால்புதுமையினருக்கான இயக்கங்கள் உருவாயின. இவை, அரசால், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர முயன்றன.
தொண்ணூறுகளில் நவ தாராளமய செயல்பாடுகளை மேற்குலக நாடுகள் தொடங்கின. இதன் வழியாக, நாடுகளில் வாழ்ந்த ஏழை, விளிம்பு நிலை மக்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். பொருளாதார மேலாதிக்கத்திற்கு எதிராக மக்கள் அதிகார அமைப்புகள் மீண்டும் எழத் தொடங்கின. இதற்கு மக்கள் மீது அரசு காட்டிய புறக்கணிப்பு, அலட்சியம், மேலாதிக்க மனப்போக்கு முக்கிய காரணம் எனலாம்.
இதைப்பற்றி இஸ்ரேல் நாட்டின் விசா சோரா என்பவர், ராணுவ சர்வாதிகாரம் கொண்ட நாட்டில், சமூகத்தில் பால்புதுமையினர், வெளிநாட்டு தொழிலாளர்கள், பெண்கள், அராபியர்கள், பாலஸ்தீனியர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் இடம் கிடையாது என திட்டவட்டமாக எழுதியிருக்கிறார்.
பழக்கவழக்கம் என்று சொல்லி தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் விடாத மனிதர்கள் இன்றும் உண்டு அல்லவா? அதேதான். அமைப்பு, விதிகள், பகுதி என ஏதாவது காரணம் சொல்லி ஏழைகள், பலவீனமானவர்கள் மீது செல்வாக்கு செலுத்த முனைவார்கள். இதை அப்படியே தொடர்ந்தால் வேலைவாய்ப்பில் கிடைக்கும் சம்பளத்தில் கூட சாதி, மதம், இனம் முக்கியப் பங்காற்றுவதைக் காணலாம். வெளிநாடுகளில் வெள்ளையர் இனத்திற்கும், கருப்பினத்தவருக்கு்ம ஒரேவிதமான சம்பளம் கிடையாது. இன்று நவீன தொழில்நுட்பம் வளர்ந்தால் கூட அதிலும் இனவெறி, நிறவெறியை அப்படியே தொடர்ந்து வருகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக