நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு கருத்துகளை கூறுகிற கட்டுரை நூல்!

 

 

 

 

 


உறைப்புளி
செல்வேந்திரன்
கட்டுரை நூல்

இந்த நூல் கிண்டிலில் வெளியானது. மொத்தம் எழுபத்தாறு பக்கங்கள். மொத்தம் பத்து கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே வாசகர்களுக்கு வாசிப்பு பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி நிறைய விஷயங்களைக்கூறுகிறது. நூலின் இறுதியாக இடம்பெற்றுள்ள கட்டுரை, நவீன கால இளைஞர்கள் தினசரி வாழ்க்கையைக் கூட அணுக முடியாமல் இருக்கிறார்கள். அதேசமயம் அவர்கள், சமூகத்தின் அனைத்தையும் மொக்கை என்ற ஒற்றைச் சொல் மூலம் எப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விமர்சனமும் கண்டனமுமாக பேசியுள்ளது. அக்கட்டுரை இறுதியாக இடப்பெற்றது சிறப்பானதுதான். வாசிப்பு ஏன் முக்கியம் என்பதை மறக்கமுடியாதபடி காட்டமாக கூறுகிறது. கல்லூரியொன்றில் ஆற்றிய உரை, எழுத்தாக்கமாக மாற்றப்பட்டு இந்து தமிழ் திசையில் வெளியாகியுள்ளது.

நடப்பு விஷயங்களோடு நூலின் தொடர்பு பற்றி தேடினால், இயக்குநர் மிஷ்கின் அகப்பட்டுவிடுகிறார். நூலில் அறம் புத்தகம் வெளியிடப்பட்டபோது அந்த விழாவுக்கு அவர் வருகை தந்தபோது நடந்த விஷயங்களைப் பற்றி விவரிக்கிற கட்டுரை ஒன்றுள்ளது. அந்தக்கட்டுரை, மிஷ்கினின் எளிய மனிதர்கள் மீதான அன்பைப் பற்றிய நடைமுறை எடுத்துக்காட்டைக்கூறுகிறது. அவர் பயணிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானபோதும் கூட அதை ஓட்டியவரின் சூழலைப் புரிந்துகொண்டு அவருக்கு சோறிட்டு பணம் கொடுத்து வழியனுப்பி வைக்கும் இயக்குநரின் மனம் சாதாரணமானது அல்ல. ஏனெனில் அந்த இயக்குநரின் பின்னணியும் நிறைய வலிகள் கொண்டது. இதை வாசிக்கும்போது, சில நாட்களுக்கு முன்னர் மதுபானம் அருந்துவது பற்றி தனது கருத்துகளைப் பேசி சர்ச்சைக்குள்ளாகி பின்னர் மன்னிப்பு கேட்டார் என்ற செய்தியும் வெளியானது. மேடைப்பேச்சு என்பது மிகைத்தன்மை கொண்டதாக இருந்தால்தான் கவனம் ஈர்க்கும். மிஷ்கின் தனது இயல்பில் கருத்துகளை வெளியிடும் கருத்து கொண்டவர். இன்று அவரைச் சுற்றியுள்ளவர்கள் கருத்துகளில் கவனம் வைக்காமல் அவரை எப்படியாவது இழிவுபடுத்துவது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். ஏனெனில் இணையம் முழுக்கவே சகிப்பின்மை நச்சாக பரவிவிட்டது. கருத்துகள் அல்ல பேசவே கூடாது என்கிறார்கள்.

பொங்கல் பற்றிய கட்டுரை, எழுத்தாளரின் பொங்கல் பண்டிகை பற்றிய நினைவுகளை வாசிக்கும் வாசகர்களுக்கும் ஊட்டுகிறது. பசி பொறுக்காமல் காராபூந்தியை பொங்கலில் தூவி காக்கையை அழைக்கும் இடம், யோசிக்கவே முடியாத சாமர்த்தியம் என்றுதான் சொல்லவேண்டும். பண்டிகை என்பது உறவுகள், நண்பர்கள் சூழ கொண்டாடுவதுதான். காலப்போக்கில் உறவுகள், நண்பர்கள் தவறும்போது ஏற்படும் தவிப்பும், பெருகும் கண்ணீரையும் எதாலும் அளவிட முடியாது. கட்டுரையின் இறுதிகூட எழுத்தாளரின் தந்தை இறந்துபோனதைக் கூறி நிறைவுபெறுகிறது. பொங்கல் பண்டிகை, அதைச்சார்ந்த சம்பவங்கள், மாட்டுப்பொங்கலுக்கு இறைச்சி எடுத்து பொங்கலோடு சேர்த்து உண்பது என நிறைய நினைவுகளை நமக்குள் ஊட்டுகிற கட்டுரை.

உறைப்புளி கட்டுரை, க.சீ.சிவக்குமார் அவர்களின் மறைவு பற்றியது. அந்த தகவல் நூலாசிரியருக்கு கிடைக்கிறது. அதற்குப் பிறகு அவருக்கு நேரும் தவிப்பு, அழுகை அதன் வழியாக அவருக்கும் எழுத்தாளருக்குமான உறவு வெளியாவது என கட்டுரை நீள்கிறது. சிவக்குமார் அவர்களுக்கு தெரிந்தவர் என்று நினைக்காவிட்டாலும் கூட அவரின் வாசகர் என்ற நிலையிலும் கட்டுரையை வாசிக்க முடியும். அதிலும் அவர் கொடைக்கானலில் உள்ள தற்கொலை முனைக்கு வைக்கும் பெயர் ஒரே நேரத்தில் புன்னகையையும், வலியையும் தருவதாக உள்ளது.

சார் பேப்பர் என்ற கட்டுரை, நூலாசிரியரின் பணி தொடர்பானது. நாளிதழை விநியோகம் செய்யும் சிறுவனைப் பற்றியது. தோற்றம் கண்டு எப்படி உலகம் எள்ளி நகையாடுகிறது. ஆனால், அதன் பின்னே உள்ள உண்மையை உணர்ந்தபிறகு தன்னை எப்படி மாற்றிக்கொள்கிறது என்பதை புகார் கொடுத்த பெரியவர் வழியாக புரிந்துகொள்ளலாம். கட்டுரை, நாளிதழ் போடும் தொழிலாளர்கள் பற்றி இந்தியா கடந்து பேசுகிறது. அதுதொடர்பான ஆங்கில நூல் ஒன்றையும் பரிந்துரை செய்கிறது. எழுத்தாளர் செல்வேந்திரனின் உறைப்புளி கட்டுரை நூலை வாசிப்பவர்கள், உறுதியாக இரண்டு மூன்று ஆங்கில நூல்களை தரவிறக்கி வாசிக்கும் உத்வேகம் கொள்வார்கள் என உறுதியாக நம்பலாம். அந்தளவுக்கு வாசிப்பு, நூல்களைப் பற்றி அக்கறையாக நிறைய கருத்துகள் எழுதப்பட்டுள்ளன.

செல்வேந்திரன் பயன்படுத்தும் தமிழ் சொற்கள், வார்த்தைப் பயன்பாடு வாசகர்களை பெரிதும் ஊக்கப்படுத்துகின்றன. மதுபானத்தைக்கூட அவர் நேரடியாக கூறுவதில்லை. ஒன்றைச் சொல்லி அதன் வழியாக மற்றொன்றை உணர்த்த முனைகிறார். அதில் வெற்றியும் அடைந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இச்சிறுநூல் நமக்கு வாசிப்பு வழியாக கொடுக்கும் விஷயங்கள் அதிகம். விற்பனை இலக்கியம் சார்ந்தும் நிறைய விஷயங்களைக் கூறுகிறது.

நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் ஆதரிக்கும் நூல்.  


https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.amazon.co.jp/%25E0%25AE%2589%25E0%25AE%25B1%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25BF-Uraippuli-Tamil-%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D-Selventhiran-ebook/dp/B087PKBZ9T&ved=2ahUKEwjLo4ai6sSLAxWerlYBHYB1L30QFnoECBwQAQ&usg=AOvVaw10Q_pbI0Kg9kanhZEhoSyH

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்