சமூக மாற்றங்களை அடிப்படையாக கொண்ட புரட்சி போராட்டம்!
மக்கள் அதிகார தத்துவத்தில் கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்டவர்களும் உண்டு. அதில் நம்பிக்கை இல்லாதவர்களும் உண்டு. இதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். சமூகத்தில் உள்ள செல்வம், விடுதலை, நீதி, நலவாழ்வு அனைத்து மக்களுக்கும் புறக்கணிப்பின்றி கிடைக்கவேண்டுமென கம்யூனிச தத்துவம் வலியுறுத்துகிறது. இதில் நம்பிக்கை இல்லாதவர்களை தனித்துவவாதிகள் என்று கூறலாம். அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசு என்பது ஆக்கிரமிப்பு உணர்வு கொண்டது. மக்களை அழுத்தி நசுக்குவது, அநீதியை அடிப்படையாக கொண்டது என ஒப்புக்கொள்வர். தனிமனித வளர்ச்சியை அரசு அழித்தொழிக்கிறது. ஒரு சமூகத்தில் மனிதர்கள் மீது எந்த வித அழுத்தமும் உந்துதலும் இருக்கக்கூடாது. எனவே, அடிப்படையாக அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசை ஒழிப்பது என்ற கருத்தில் ஒன்றுபடுகிறார்கள்.
மியூசுவலிஸ்ட் என்ற பிரிவினர், மக்கள் அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள், அரசு என்ற அமைப்பை அடியோடு அறவே ஒழிக்க நினைப்பவர்கள். பிரெஞ்சு தத்துவவாதி ப்ரவுட்தோன் என்பவரை பின்பற்றுகிறார்கள். அரசு இல்லாத அமைப்பில் லாபநோக்கு இருக்காது என்பவர்கள். வட்டி இல்லாத கடன்களை அனைவரும் ஒருவருக்கொருவர் வழங்கிக்கொண்டு வறுமையை ஒழிப்பதோடு வருமானத்தை சமம் செய்துகொள்ளலாம். இந்த வழியில் செல்வந்தர்களும் குறைவார்கள் என்று விளக்குகிறார்கள். இக்கருத்துகளை கேட்கும்போதே இதை எப்படி சாத்தியப்படுத்துவது என கேள்வி எழுகிறது. இதில் கேள்விகள் எழுந்தால் இணையத்தில் நீங்கள் தேடிப்பார்த்து பதில்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
புரட்சி என்பதில் மாற்றம் வரும் என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் தனித்துவவாதிகள். சோசலிச தத்துவத்தை ரஷ்யா முன்னே பின்பற்றியது. இன்று நிலைமை மாறிவிட்டது. தொடக்கத்தில் ஜார் மன்னருக்கு எதிராக போல்ஸ்விக்குகள் போராடி வென்றனர். இதில் மக்களின் பங்களிப்பும் முக்கியமானது. அதாவது, சோசலிச கருத்துக்கு ஆதரவான பிரசாரத்தால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். அதன் காரணமாக அனைத்தும் எளிதாக இருந்தது. சோசலிச கருத்தை மக்கள் ஏற்காதபோது, இன்னொரு தத்துவம், சிந்தனை கொண்டவர்களின் குழு வென்றிருக்கலாம். ரஷ்யா சோசலிச நாடு ஆனதை, தொண்ணூறுகளில் கோர்ப்பசோவ் தனியார்மய கொள்கை மூலம் உடைத்து அதை முதலாளித்துவ நாடாக மாற்றினார். சோசலிச கருத்து அதிக பெரும்பான்மை பெற்றாலும் மாற்றுக் கருத்துகளைக் கூறி இயங்கியவர்களும் ரஷ்யாவில் இருந்தனர். அதை தொடர்ச்சியாக பிரச்சசாரம் செய்யும் அமைப்புகளும் இருந்தன. அனைத்துக்குமே சிந்தனைகள்தான் அடிப்படை. கார்ல் மார்க்ஸ், மார்க்சிய சிந்தனையை வகுத்தார். அதை நடைமுறையில் அரசு அதிகாரத்தில் லெனின் செயல்படுத்திக் காட்டினார்.
அரசு என்பது அதிகாரிகள் குழு. அதை மக்கள் நம்புகிறார்கள். இப்போது ரூபாய் நோட்டு உள்ளது. அதை தயாரிக்கும் மதிப்போடு ஒப்பிட்டால், அதை யாருமே பொருட்டாக மதிக்கவேண்டியதில்லை. நூறு, ஐநூறு என அரசு உறுதியிட்டிருக்கிறது. அதை மக்கள் நம்புகிறார்கள். எனவே, அதன் மதிப்பு உயர்வாக உள்ளது. மக்களின் நம்பிக்கை இல்லாதபோது, அரசு ஒரு நாள் கூட தாங்காது.
அமைப்புகளைப் பொறுத்தவரை அது மக்களுக்குத் தேவை, ஏதோ ஒரு பயனை தன்னை உருவாக்கியவர்களுக்கேனும் அளிக்கிறது என்கிற பட்சத்தில் அவை நிலைபெற்றிருக்கின்றன. இதற்கு டிவி சேனல்களைச் சுட்டிக்காட்டலாம். தொழிலாளர் அமைப்புகளைப் பொறுத்தவரை அனைத்து முதலாளித்துவ பன்னாட்டு நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்து பணியாளர்களுக்கான நலன்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல. நயாபைசாவை கிள்ளிக்கூட கொடுக்கமாட்டோம் என்று கூறியவைதான். ஆனால் போராட்டங்கள் வெடித்து போட்ட முதலீடே கைக்கு வராது என்ற நிலைக்கு வரும்போதுதான் சமரசம் செய்துகொள்கிறார்கள். அடிப்படையாக தொழிலாளர்களை நசுக்குவதே, உழைத்து பிழிந்து தூக்கி எறிவதே பெருநிறுவனங்களின் அடிப்படை லட்சியம். சந்தைக்கு ஏற்றபடி புதிய ஆட்களை குறைந்த கூலியில் அமர்த்துவதற்கு எந்த தொழிலாளர் சட்டங்களும் பிரச்னையாக இருக்கக்கூடாது என அரசுக்கு நிபந்தை போடுகிறார்கள். அரசும் அதை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்கிறது. அரசுக்கு வேலைவாய்ப்பின்மை தீரும் என்ற நம்பிக்கை. தங்களுடைய சாதனை என அதைக்கூறிக்கொள்ளலாம்.
அமெரிக்கா, வியாபாரிகளுடைய நாடு. அங்கே ஒருவர் கல்வியாளராக இருப்பதைவிட வெங்காயம் விற்கும் வியாபாரியாக இருப்பது மதிப்புக்குரியது. நவீன காலத்தில் கணினி பொருட்கள், சமூக வலைத்தளங்களை நடத்துவது, மெய்நிகர் நாணயங்களை விற்பது என வியாபாரம் மாறியுள்ளது. அதில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. அங்குள்ள தொழிலாளர்கள், சீஸூம் பர்கரும், மாட்டிறைச்சியும் பெருகியோடும் வாழ்க்கையை வாழ்கிறார்களா? அங்கு அவர்களுக்கு பிரச்னையே இல்லையா என்று கூட ஒருவர் யோசிக்கலாம். அனைத்துமே இருக்கிறது. ஆனால், அவர்கள் தங்களுடைய நிறுவனத்தை நம்புகிறார்கள். அதனால் அங்கு மின்வாகன பேட்டரி எதிர்ப்பு போராட்டம் கூட ஃபோர்டுக்கு எதிராக நடப்பதில்லை. சீன நிறுவனத்திற்கு எதிராக நடைபெறுகிறது. விசுவாசம் அப்படி.
நம்பிக்கை பெரிய அறிவியல் உண்மைகள் தேவையில்லை. அவர்கள் ஒன்றை நம்புகிறார்கள். அவ்வளவுதான். நிறுவனம் எப்போதுமே லாபம் சம்பாதிக்கும் நிறுவனம், உங்களால் முடியவில்லையா இன்னொருவரை கண்டுபிடித்து இயக்குநராக்கி, மேலாளர் ஆக்கி போய்க்கொண்டே இருப்பார்கள். விசுவாச அடிமைகள் கூட ஒருகட்டத்தில் தாம் தவறான கருத்தை கைக்கொண்டோமோ என வருந்துகிறார்கள். புகையிலையை வாயில் அதக்கிக்கொண்டே ஆரோக்கியமாக வாழ்வோம் என நம்புவதற்கு நிகரான மூடநம்பிக்கைதான், நிறுவனம் நம்மைக் காப்பாற்றும் என்பது...
நிறுவனம் ஒருவரைக் காப்பாற்றுகிறது என்றால் அது அவர்களின் நல்ல குண இயல்புக்காக அல்ல. அவர்களால் தங்களுக்கு பயனுள்ளது என்பதற்காக மட்டுமே. இதை நிறைய பணியாளர்கள் புரிந்துகொள்வதில்லை. அரசு அதிகாரம் என்பது எந்த தத்துவத்தில் நின்றாலும், தன்னை எதிர்க்கும் சிந்தனைகளை எதிர்த்து போராடும். வெல்வதற்கு ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதாக என இறுதிவரை பார்க்கும். அதிகம் யோசிக்காத, யோசிக்கவே பழகாத மக்களின் பெரும்பான்மை ஆதரவு, உருப்படாத அரசுக்கு, அரசியல் சித்தாந்தத்திற்கு கிடைக்கிறது. அவர்கள் நாட்டை பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அப்போதும் மக்கள் இனிமையாக ரசிக்க போலியான கடந்த கால பொய், புரட்டு, கனவுகள் ஏகமாக உண்டு.
கலகம் குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதை இலக்காக கொண்டது. புரட்சி என்பது குறிப்பிட்ட சமூக மாற்றங்களை லட்சியமாக கொண்டது. இதுவே, அதுவரையிலான ஒட்டுமொத்த சமூகத்தையும் மொத்தமாக மாற்றி அமைத்து திரும்ப இயங்க வைக்கிறது.
புரட்சி என்பது செடியில் பூ மலருவதைப் போலவே நிதானமாக மலர்கிறது. அது விபத்தல்ல. திடீரென நிகழும் ஆச்சரியமும் அல்ல. சமூக மாற்றங்களைப் பொறுத்தவரை செயலில் உள்ள மேம்பாடு கூட புரட்சிகரமானதுதான். புரட்சியை அமைதியாக, நிதானமாக நிறைவேற்றுவதும் உண்டு. அடித்து, உதைத்து, ரத்தக்களறியாகி, பொதுச்சொத்துக்களை எரித்துக் கூட புரட்சி நடைபெற்றிருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக