புகையிலை அளவுக்கு சர்க்கரையும் ஆபத்தான பொருள்தான் - ஆராய்ச்சியாளர் டேவிட் சிங்கர்மேன்
டேவிட் சிங்கர்மேன்
ஆராய்ச்சியாளர், வர்ஜீனியா பல்கலைக்கழக பேராசிரியர்
சர்க்கரை, தொடக்கத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரின் பொருளாக இருந்து பிறகே அனைத்து மக்கள் பயன்படுத்தும் பொருளாக மாறியது. அதைப்பற்றி விளக்கி கூறுங்களேன்.
வரலாற்று ரீதியாக பார்ப்போம். தொடக்கத்தில் சர்க்கரையை ஒருவர் பயன்படுத்தினால், அதில் செய்த உணவை சாப்பிடுகிறார் என்றால் அது, அவரின் செல்வ வளத்தைக் குறிப்பதாக இருந்தது. கடந்த ஐநூறு ஆண்டுகளாகத்தான் சர்க்கரை என்பது அனைவரும் பயன்படுத்தும் விதமாக விலை குறைந்து கிடைக்கிறது. தொடக்கத்தில் கரும்பில் தயாரிக்கும் சர்க்கரை எளிதாக அனைவருக்கும் கிடைப்பதாக இல்லை.
ஐரோப்பியர்கள், சர்க்கரை விலையில் கிடைத்த லாபத்தை பேராசையோடு அடையாளம் கண்டனர். லாபத்தை அதிகரிக்க அதை பெருமளவு தோட்டமாக போட முடிவெடுத்தனர். இப்படித்தான் ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்கா, லூசியானா, அட்லாண்டிக் தீவுகளான மெடெய்ரா ஆகியவற்றில் கரும்பு தோட்டங்களை அமைத்தனர். இதில் வேலை செய்ய அடிமைகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர். இவர்கள் அங்கு நடத்தப்பட்ட விதமும் கொடூரமாக இருந்தது. மனித தன்மையோடு அடிமைகள் நடத்தப்படவில்லை. கரும்பு சாற்றை கொதிக்க வைக்க பெருமளவு ஆற்றல் அதாவது எரிபொருள் தேவைப்பட்டது. இதற்காக காடுகள் அழிக்கப்பட்டன. ஒருமுறை கரும்பை அறுவடை செய்தபிறகு முதலாளிகள் வேறு வேறு இடங்களில் காடுகளை அழித்து பயிர் செய்யத் தொடங்கினர். இதனால் காடுகள் வேகமாக அழியத் தொடங்கின. உலகம் முழுக்க சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விலை குறைவாக அதை தயாரிக்க முடிந்தது மகிழ்ச்சி. ஆனால், பதிலுக்கு நாம் இழந்தது அதிகம்.
பிரிட்டிஷார் முதலில் சர்க்கரை தொழில் உள்ள மனித உரிமை மீறலை அடையாளம் கண்டு எதிர்ப்புக் குரலை எழுப்பினர். இன்று அமெரிக்காவில் நியூயார்க்கில் கூட சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மனித உரிமை மீறல்களை செய்ததை கட்டுப்படுத்த சில அமைப்புகள் இயங்கி வருகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்க அரசு சர்க்கரை உற்பத்தியில் செய்த ஊழலைப் பற்றிக்கூட எழுதியிருக்கிறீர்கள். அதை விளக்கி கூறமுடியுமா?
அமெரிக்க அரசு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் சர்க்கரைக்கு விதித்த வரியில் ஏராளமான தொகையை சம்பாதித்த்து.சர்க்கரையின் தரத்தைப் பொறுத்து வரி விகிதம் அமைக்கப்பட்டது. எனவே, சர்க்கரையின் தரத்தை சோதிக்கும் வேதியியல் வல்லுநர்களுக்கு அதிகளவு லஞ்சம் தரப்பட்டது. அவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்திடம் கையூட்டு பெற்று, அதன் விளைவாக எதிர்தரப்பிற்கு அதிக வரி விதிக்குமாறு செய்த சம்பவங்கள் கூட நடந்தன.
பதினாறாம் நூற்றாண்டில் வெவ்வேறு விதமான சர்க்கரை உற்பத்தி பற்றிய கையேடுகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. தொழில்நுட்பங்களும் மேம்பட்டன. வேதியியல் வல்லுநர்களுக்கு தனி ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்பட்டது. எந்திரங்கள் இரும்பு, ஸ்டீலில் உருவாயின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, க்யூபா, பிலிப்பைன்ஸ், ஹவாய் ஆகிய நாடுகளில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தனிநபர் அளவில் ஆண்டுக்கு எண்பது பவுண்டுகள் சாப்பிடத் தொடங்கிவிட்டோம். சர்க்கரையை ஜாம், பிஸ்கெட், நொறுக்குத்தீனிகள் என பலவகையிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். ஆனால், அது ஏற்படுத்தும் நீரிழிவு, இதயநோய், உடல் பருமன் பிரச்னைகளைப் பற்றி கவலையே படவில்லை. சர்க்கரை இந்த வகையில் புகையிலை ஏற்படுத்திய அபாயங்களை விட அதிகமாக ஏற்படுத்தக்கூடியது. அதை அடையாளம் கண்டுவிட்டோம். சர்க்கரையை பற்றி இன்னும் அப்படி எச்சரிக்கை பரவவில்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா - ஶ்ரீஜன மித்ர தாஸ்.
கருத்துகள்
கருத்துரையிடுக