இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதே ஒரே வழி!
மக்கள் அதிகாரத்துவர்கள், ஒரு விஷயத்தில் நீதி கிடைக்கவேண்டுமென்றால் எந்த தரகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும் நாடுவதில்லை. அதில் அவர்கள் பெரிதாக நம்பிக்கை கொள்வதில்லை. நேரடியாக களத்தில் இறங்கி நடைபெறும் செயலை உடனே தடுக்க முயல்வார்கள். அதனால், இதை பார்ப்பவர்களுக்கு வன்முறை இயல்பு கொண்டவர்கள் போல தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படியானவர்கள் இல்லை. செயலை உடனே தடுக்கவேண்டும் என நினைப்பார்கள். உடனே களத்தில் குதித்துவிடுவார்கள். இந்தியாவில் உள்ள மரங்களை வெட்டாமல் தடுத்த சிப்கோ இயக்கத்தை அறிவீர்கள். மரங்களை கட்டிப்பிடித்து தடுத்து இயற்கையைக் காத்தவர்கள். அதுபோலத்தான். இவர்களும் செயல்படுகிறார்கள்.
புல்டோசர்களைக் கொண்டு காடுகளை அழிக்கிறார்களா, அவர்களது வண்டியின் பெட்ரோல், டீசல் டேங்கில் சர்க்கரையைப் போட்டுவிடுவார்கள். அப்புறம் என்ன முழு எஞ்சினும் பழுதாகிவிடும். நாம் கவனிக்கவேண்டியது எதிர்தரப்பு எந்த மெக்கானிக்கிடம் செல்வார்கள் என்பதல்ல. நடைபெற்ற செயல் நின்றுபோனதல்லவா, அதுதான் மக்கள் அதிகாரத்துவர்களின் வெற்றி.
இயக்கமாகவும் அவர்கள் மேலிருந்து கீழ் என ஆணையிட்டு செயல்படுகிறவர்கள் அல்ல. குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்கள் தேவையான நடவடிக்கைகளை தானே எடுத்துக்கொள்ளலாம். பௌத்தம், பாகன் என பல்வேறு மதங்களிலிருந்து கருத்துகளை எடுத்துக்கொண்டு சமூகத்தில் உள்ள நடைமுறைக்கு எதிராக செயல்படுவது மக்கள் அதிகாரத்துவர்களின் குணங்களாக மாறி வருகிறது. இந்த வகையில் பால்புதுமையினர் உரிமை, வீகன் உணவு என பல்வேறு விதமாக போராட்ட உத்திகள் மாறுபட்டு வருகின்றன
போராட்டத்தின் ஆயுதமாக உடலையே மாற்றுவதையும் கூட சிலர் செய்து பார்க்கிறார்கள். தோற்றமும் கூட பிறருக்கு ஏதோ ஒருவித செய்தியை கடத்துகிறதுதானே? பெரியாரிய ஆட்கள் கருப்பு உடை அணிவது கூட பொது சமூகத்தில் பிறர் அணியும் வெள்ளை உடையின் புனிதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தானே? கருப்பு என்ற ஆடையின் பின்னே சென்றால், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்று இயங்கும் சமூகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு அடையாளம். ஆண், பெண்களுக்கான வித்தியாசம் இல்லாத பெயர்களை சூட்டுவது, பாலின பாகுபாடு இல்லாத ஆடைகளை அணிவது என நிலைமை மாறிவருகிறது. முழுமையாக அல்ல. குறிப்பிட்ட அளவில்..
மக்கள் அதிகாரம் என்பது அதனளவில் அது ஒரு அரசியல் கருத்தியல். அவர்களுக்கான செய்தியை எழுத்து, பேச்சு, நடனம், பாடல் என பல்வேறு வடிவத்தில் பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுக்கென தனி கூட்டமே உள்ளது. உலக மக்கள் செயல்பாட்டு வலையமைப்பு என்ற அமைப்பு, தனது செயல்பாடுகள் பற்றிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு அமைப்பு.
முதலாளித்துவம், முடியாட்சி, நிலக்கிழார் ஆகிய தத்துவங்களுக்கு எதிராக இயங்குகிறது. உலகமயத்தை ஊக்குவிக்கும் அமைப்புகள், நிறுவனங்கள், அரசு ,வணிக ஒப்பந்தங்கள் அனைத்தையும் எதிர்க்கிறது.
மேலாதிக்கம், இனவாதம், சாதி அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிரானது. பாகுபாடான ஜனநாயகத் தன்மை இல்லாத அமைப்புகள் ஒழிக்கப்படவேண்டும். வெளிப்படைத்தன்மை உருவாக வேண்டும்.
தன்னாட்சி, மையப்படுத்தாத செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.
ஆசியா, லத்தீன் அமெரிக்காவிலுள்ள நிறைய வேளாண்மை அமைப்புகள் இதே கருத்துகளின் திசையில்தான் இயங்குகின்றன. ஆனால், அவை தம்மை மக்கள் அதிகாரம் என்ற தத்துவத்தில் இயங்குவதாக அறிவித்துக்கொள்ளவில்லை. மேற்குலகில் இயங்கிய மக்கள் அதிகாரத்துவ போராட்டங்கள், அமைப்புகள் பல்வேறு நாட்டிலுள்ள மக்களையும் பாதித்துள்ளது. அதாவது இங்கு நான் கூறுவது ஆக்கப்பூர்வமான வகையில்தான். இந்தியாவில் தொடங்கப்பட்ட சர்வோதயா இயக்கம் கூட மக்கள் அதிகாரத்துவம் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுதான். அதன் ஊக்கம் பெற்றதுதான்.
நெஸ்டர் மக்கானோ என்பவர், 1926ஆம் ஆண்டு, சுதந்திர கம்யூனிசவாதிகளுக்கான அமைப்பைத் தொடங்கினார். இதுவும் கூட மக்கள் அதிகார அமைப்புகளை கருத்தியல் ரீதியாக ஒன்றாக இணைப்பதற்காகத்தான்.
1968ஆம் ஆண்டு சர்வதேச மக்கள் அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, ஒன்பது நாடுகளிலுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை ஒன்றாக இணைத்தது. இதில் இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளடங்கும். பல்வேறு அமைப்புகள், பன்மைத்துவமான உறுப்பினர்கள், யார் செய்வது, சரி, தவறு என நிறைய சிக்கல்கள் இருந்தன. இப்படி பல்வேறு மக்கள் அதிகார அமைப்புகள் பல்வேறு நாடுகளில் இயங்கின.
இரண்டாம் உலகப்போருக்கு முன்னதாகவே மக்கள் அதிகார அமைப்புகள் தீவிரமாக இயங்கி வந்தன. இவற்றில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விவாதம், வாக்கு என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பழையது, புதியது என்ற வேறுபாடு அனைத்து இயக்கங்களிலும் உண்டு. அதுகூட கால இடைவெளியை புரிந்துகொள்ளாத உறுப்பினர்களிடம்தான் வேறுபாடுகள் இருக்கும். வேறுபாடுகளை புரிந்துகொண்டால் எந்த பிரச்னையுமில்லை.
புக்சின் என்பவர், மரபான மக்கள் அதிகாரத்துவ நபர். அவருக்கு புதிய கலாசார மாற்றங்கள், அதில் இயங்குபவர்கள் பற்றிய ஒவ்வாமை இருந்தது. அதை அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எழுத்தில் கசப்பாக வெளிப்படுத்தினார். அதை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவரது கருத்துகளை பிளாக் பாப் என்பவர் எதிர்த்து எழுதினார். புக்சின், பழைய காலத்திலேயே இருக்கிறார். அவர் கூறும் சரி, தவறு என்ற கருத்துகளை இன்றைய காலத்தில் உள்ளவர்கள் பின்பற்றவில்லை என்றதும், அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார் என்று எழுதினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக