ரோனி சிந்தனைகள் - பொற்கால ஆட்சியை விரும்பாமல் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடும் மக்கள்
தொடக்கத்தில் கல்லடி பட்ட நாய் போல ஓரிடத்தில் நுழைபவர்கள்தான் பின்னாளில் போடா மயிரே என்று கூறும் அளவுக்கு தந்திரக்காரர்களாக, ஆணவம் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
முட்டாள்தனத்தை ஒருமுறை நீங்கள் அடையாளம் கொண்டுவிட்டால் போதும். முட்டாள்கள் அப்படியே இருப்பார்கள், முட்டாள்தனம் மட்டுமே வீரியமாக மாறிக்கொண்டே வரும்.
ஒரு நாட்டை அழிக்க எதிரிகள், உளவுப்படை, கூலிக்கொலைகாரர்கள் எதுவுமே தேவையில்லை. இவை செய்யும் அனைத்தையும் மதமும், மூடநம்பிக்கைகளுமே செய்துவிடும்.
ஒருவருக்கு சலுகை கொடுப்பது வேறு. அந்த சலுகையை பயன்படுத்துமாறு அவரின் வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது வேறு.
வெட்டப்பட்ட கிராப் தலையை சீவ உயர்தர சீப்பு, விற்றுவிட்ட வாட்சிற்காக அழகிய உயரிய உலோக பட்டை என ஓ ஹென்றியின் கதை மனிதர்கள் போலவேதான் அர்த்தமே இல்லாத அவலங்கள் நம் வாழ்க்கையில் சில சமயங்களில் நடந்து தொலைக்கின்றன.
ஆட்டு எலும்பு கடினமோ இல்லையோ, கடித்தே தீருவேன் என்று தின்ற நாய்க்கு கடைவாய் பல் விழுந்துவிட்டது.
ஆபீஸ்ல வேலை செய்யறவங்கெல்லாம் எப்படி என்று கேட்டதற்கு, பரவாயில்லைங்க, ஒரு பிகர் தேறும் என்று பதில் சொல்லுவதெல்லாம் விதியல்லாமல் வேறு என்னவாம்?
நான் நினைப்பதை நீ சொல்லியாகவேண்டும். அது சொல்லும்வரை கேள்விகள் நீளும் என்றுதான் பெரும்பாலான நேர்காணல்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.
காற்று மாசைப் பற்றி கவலையில்லையா? எங்களுக்கு மக்களைப் பற்றியே கவலை கிடையாது. நீ வேறு காற்று, மாசு என்று கதறிக்கொண்டு....
இந்த வாரம் தெருநாய்க்கு சோறுபோட்ட மனிதநேயம். அடுத்தவாரம், தெருநாய்கள் கடித்து குதறிய சிறுவர்கள். அதற்கடுத்த வாரம், நாய்களை முனிசிபாலிட்டி பிடித்ததா இல்லையா என தொடர்கிறது வார இதழ் கட்டுரைகள்.
படிப்பு, வேலை, சாதனை இதெல்லாம் விடு. நான் ஒரு பைத்தியக்காரத்தனத்தை நம்புகிறேன். அதை உலகிற்கே பகிரங்கமாக கூறவும் கூட எனக்கு கூச்சமில்லை. நீ நம்பவில்லை என்றால் உன்னைத்தாக்குவேன் என்றுதான் படித்த மூடர்கள் மல்லுக்கட்டுகிறார்கள்.
மூத்திரம் பெய்யும் பால்மாட்டைக் கூட நாட்டின் அடையாளமாக அறிவிக்கலாம். மூத்திரத்தை நாங்கள் குடிக்கிறோம். அப்போ நீங்க என்று கூட விளம்ப வாசகம் எழுதலாம். உலக மக்களுக்கு ஞானத்தை அளிக்க எந்தளவு ஊனை உருக்கிக்கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதிகாரம் குறைந்த பதவிக்கு மாற்றப்பட்டுவிட்டால் சகாக்கள் உடனே ஆறுதல் சொல்லும் சகிக்க முடியாத முகமூடியை மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். நாட்டுப்பால் டீ நான் கேட்டேனா என்ற தருணம்தான் அது.
பொற்கால ஆட்சிதான். ஆனால் அதில் வாழமுடியவில்லை என்றுதான் தப்பித்து ஓடி வந்தோம். தாய்நாடு வாழ்க தாய்த்தலைவர் வாழ்க என வன்மத்தோடு புன்னகைக்கிறார்கள் தப்பித்து ஓடிய புண்ணியாத்மாக்கள்.
சம்பாதித்து சேர்த்த பணத்தில் சிறிதளவு பழிவாங்குவதற்கு பயன்படுத்தலாம் என வெளிநாட்டில் உள்ள தாய்நாட்டு மக்கள் முடிவெடுத்ததற்கு என்ன காரணமாக இருக்க முடியுமோ தெரியவில்லை.
உறவுகளோ, நண்பர்களோ பெரும்பாலும் அறிந்த தகவல்களை உறுதிப்படுத்தவே கேள்விகளை கேட்கிறார்கள். இரண்டுமுறை சோதிப்பது எப்போதும் சிறந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக