ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது
ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது
ஒருவரின் அப்பா, நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியவர். வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்டு செய்யும் கடமையில் கவனம் செலுத்தவேண்டும் என நினைத்தவர். ஆனால், அவரது மகன்களோ செய்யும் அனைத்து விஷயங்களிலும் லாபத்தையே எதிர்பார்க்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? அப்படியான சூழலில், அப்பா தனது மகன்களை ஆமை முட்டைகள். அவர்களை எனது மகன்களாகவே நினைக்க முடியவில்லை என்றார். இப்படி கூறியவர் கமாண்டர் வாங் ஸென்.
சீனாவின் தொடக்க கால கட்ட தலைவர்கள் உடுத்தியுள்ள ஆடை எளிமையானது. ஃசபாரி சட்டை பேண்ட் அல்லது ராணவ சீருடையை உடுத்தியிருப்பார்கள். பெரும்பாலும் அழகான சட்டை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. ஆனால், அவர்களது மகன்களது வாழ்க்கை மிகவும் சொகுசானது. எளிமையான மனிதர்களிடமிருந்து வேறுபட்டது. திகைப்பூட்டும் அளவுக்கு பகட்டானது. தொண்ணூறு இரண்டாயிரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வாரிசுகள் வளம் பெற்றுவிட்டார்கள். தொடக்க கால கல்வியை பெய்ஜிங்கில் பெற்றவர்கள், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லத் தொடங்கினர்.
அதிபர் ஷியின் அப்பா, ஷி ஸாங்சுன்,உள்நாட்டிலேயே வேதி பொறியியல் படிப்பைப் படித்தவர். புரட்சியில் ஈடுபட்ட தலைவர்களில் ஒருவர்.இதெல்லாம் இரண்டாம் தலைமுறையின் கதை. மூன்றாவது தலைமுறை, தாத்தா பாட்டியை,அவர்களது கருத்துகள் என எதையும் பெறவில்லை. பெறவும் விரும்பவில்லை. இவர்கள் படிக்கும் பள்ளிகள் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளன. அனைவருமே பேராசை நல்லது எனும் ஒரே கொள்கையில் வாழும் வால்ஸ்ட்ரீட் பங்குச்சந்தை தரகர்கள் போன்றவர்கள். அவர்களுக்கு லாபம் என்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமல்ல. ஆமை முட்டை என கமாண்டர் கூறியது, போ குவாகுவா என்று அவரது மகனைப் பற்றித்தான். இன்று சீனாவில், பெற்றோர் வகித்த அரசியல் பதமவிகளை காசு கொடுத்து வாங்கிக்கொள்ளும் போக்கு உருவாகியுள்ளது.
சீனாவில் ஒருவர் பணக்காரர் ஆவதற்கு முக்கியமான வழி, அரசு அதிகாரியாக உயர்வது. அப்போதுதான் எளிதாக ஊழல் செய்து சம்பாதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். பரிசுகள் அளிப்பது, காரியங்களை நிறைவேற்றிக்கொள்வது, கையூட்டுகளை வழங்குவது என்பதெல்லாம் அங்கு இயல்பான விஷயங்களாகிவிட்டது. ஆனால், மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்று சிலர் கேட்கலாம். மக்கள் சிந்தனை முழுக்க நுகர்வு கலாசாரத்தில் இருக்கிறது. அவர்களுக்கு பெரு நிறுவனங்கள் இணையத்தில் அறிவிக்கும் தள்ளுபடி விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். நுகர்வு கலாசாரத்தைப் பொறுத்தவரை அவர்கள் அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டு இயங்கி வருகிறார்கள். அதனால், அரசியல் வட்டாரத்தில் அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படுவதில்லை. அப்படி கவலைப்பட்டாலும் யாரிடம் புகார்களை அளிப்பது? ஏனெனில் ஊழல்களை முறைப்படுத்தி செய்ய வைப்பதே கம்யூனிஸ்ட் கட்சியாக உள்ளது. பணம்தான் அல்டிமேட்டான விஷயம், மற்ற மதிப்பீடுகள் எல்லாம் பிறகுதான் என அங்குள்ள ஒட்டுமொத்த சமூகமே மாறி இயங்கி வருகிறது.
ஒரு செயலை செய்ய வேண்டுமா? உனக்கு என்ன லாபம், எனக்கென்ன லாபம் என்றுதான் நிலைமை உள்ளது. வேகமாக பணம் சேர்த்து செல்வந்தர்களாக மாறுங்கள் என்று முன்னாள் அதிபர் டெங் கூறியதை, புதிய தலைமுறை ஆட்கள் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
சீன சமூகத்தில் ஒருவர் பிழைத்திருக்க கடுமையாக உழைத்து நேர்மையான அணுகுமுறையை எல்லாம் கைக்கொள்ள வேண்டியதில்லை, உங்களுக்கு செல்வாக்கான ஆட்களை தெரியுமா, அவர்களை பின்னணியாக கொண்டு உழைத்தால் போதும் முன்னேறிவிடலாம். சீனாவின் அறிவியல் ஆராய்ச்சிகளை கணக்கில் கொள்வோம். சீன கண்டுபிடிப்புகள், ஏராளமான காப்புரிமைகளைப் பெறுகின்றன. ஆனால் அவை எந்தளவுக்கு மக்களுக்கு உதவுகின்றன, அதில் ஏதாவது பயன் உண்டா, அவை உண்மையா, போலியா என ஆராய்ந்தாலே தலை சுற்றிப்போகும். இப்படித்தான் பெரிய அறிவியல் திட்டங்களை உருவாக்கி அதை நிர்வாகம் செய்யமுடியாமல் தடுமாறுகிறார்கள். எடுத்துக்காட்டாக ரேடியோ டெலஸ்கோப். அதை உருவாக்கிவிட்டு நிர்வாகம் செய்ய முடியாமல் தீம்பார்க் போல மாறிவிட்டது. தகுதியான அறிவியலாளர்கள் இல்லாததே இதற்குக் காரணம்.
கல்வி நிறுவனங்களின் அடிப்படையான நோக்கம், கண்டுபிடித்து உண்மைகளை மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதாக இருக்கவேண்டும். ஆனால், சீனாவில் நிறைய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டாலும் அவை, தனிப்பட்ட சிறந்த சிந்தனையை கொண்டவையாக இல்லை. கட்சியும் அரசும் கூட்டாக இணைந்து மக்களின் சுதந்திர சிந்தனைகளை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
எழுத்து - அருளையா தீசன்
மூலம் சீனா என்ஜின் ஆப் என்விரோன்மென்டல் கொலாப்ஸ் - ரிச்சர்ட் ஸ்மித்
கருத்துகள்
கருத்துரையிடுக