அபினியால் அழிந்த தேசம் மீண்டெழுந்த வரலாறு! - சீனாவின் வரலாறு - வெ.சாமிநாதன்

 

 

 




சீனாவின் வரலாறு
வெ சாமிநாதன்
பிரபஞ்ச ஜோதி பதிப்பகம்
பதிப்பு 1962
தமிழ் இணைய கல்விக்கழகம்
நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பு

சீனாவைப் பற்றி அன்றைய காலத்தில் 81 ஆங்கில நூல்களை படித்து அதிலுள்ள விஷயங்களை எடுத்து சேர்த்து 564 பக்கத்திற்கு நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலில் அடிக்குறிப்புகளே நிறைய உள்ளன. அதுமட்டுமல்லாமல் அனுபந்தம், நூலின் முக்கிய பகுதிகள், குறிப்புகள், நூலை எழுத உதவிய மேற்கோள் நூல்கள் என அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு கூட இப்படியான தெளிவான நூலை ஒருவர் எளிதாக எழுதிவிட முடியாது. அந்தளவு நூல் சிறப்பாக தெளிவாக உள்ளது.

இன்றைக்கு சீனா, தரைவழியாக, நீர் வழியாக தன்னை விரிவுபடுத்திக்கொள்ள முயன்று வருகிறது. எதற்கு இந்த கோபம், ஆக்ரோஷம் என பலரும் நினைப்பார்கள். அதற்கான விடை அதன் வரலாற்றில் உள்ளது. குறிப்பாக ஜென்ம எதிரியான ஜப்பான், சீனாவை அழித்து மக்களை வேட்டையாடிய வரலாற்றை இன்றும் சீன டிவி தொடர்களில் நீங்கள் பார்க்க முடியும். பெரும்பாலான வரலாற்றுத் தொடர்களில், திரைப்படங்களில் ஜப்பானியர்கள்தான் தீயவர்கள், வில்லன்கள். அதற்கான காரணங்களை நீங்கள் வெ சாமிநாதன் எழுதிய நூலில் அடையாளம் காணலாம்.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா,ஜப்பான் ஆகிய நாடுகள் சீனாவை அதன் பலவீனமான காலத்தில் ஆக்கிரமித்து வளங்களை சுரண்டி மக்களை அடிமைப்படுத்தி சித்திரவதை செய்து செழிப்பு கண்டன. குறிப்பாக ஜப்பான். இன்றும் கூட ஜப்பான் மீதான துவேஷம் சீன மக்களுக்கு உள்ளது. அயலார் என்றாலே அருவருப்பு கொள்ளும் மனம் அப்படித்தான் அவர்களுக்கு வந்திருக்க வேண்டும். வரலாறு அவர்களுக்கு அதைக் கற்பித்திருக்க வேண்டும்.

யூட்யூபில் ஷாமா என்ற சீனமொழி கற்றவரை தொடக்கத்தில் அயலார் என அலட்சியமாக அணுகுபவர்கள், அவர் பேசும் சீனமொழி வட்டாரவழக்கு, அதன் தெளிவு கண்டு மெல்ல அயலார் என்பதை மறந்து அணுகி வருகிறார்கள். அவரது மனைவி சீனத்தை சேர்ந்தவர் என்றவுடன் சொந்தக்காரர் போல பேசி வாங்குகிற பொருளின் விலையைக் கூட பெரிதும் குறைத்துக்கொள்கிறார்கள்.

சீனாவின் வரலாறு என்ற நூல் கிறிஸ்து பிறப்பதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, மக்கள் சீன குடியரசு உருவானபிறகு நிறைவுபெறுகிறது. அதுவரையிலான மன்னர் வம்சங்கள், அதில் இடம்பெற்ற கவிஞர்கள், ராஜதந்திரிகள், அரசியல் போராட்டங்கள், வல்லரசு நாடுகள் உள்ளே வருவது, சீனாவை சுரண்டுவது, அதை எதிர்த்து போராடும் மக்களின் போராட்டம், கோமிண்டாங் கட்சியின் உருவாக்கம், பொதுவுடைமைவாதிகளின் பிரசாரம் என நூல் பல்வேறு விஷயங்களை விளக்கமாக பேசுகிறது.

சீனாவில் அனைத்து பொருட்களுக்கும் இரண்டு பெயர்கள் உண்டு. ஒன்று வெளியுலகிற்கானது. இரண்டாவது, சீனமொழிப்பெயர். அங்குள்ள மனிதர்களுக்கே வெளியுலகில் கூற ஆங்கிலப்பெயரும், சீனமொழியில் தனிப்பெயரும் உண்டு. அந்த வகையில் சீனா என்பது வெளிநாட்டினருக்கான பெயர். அந்த நாட்டிற்கான பெயர் சுங்குவோ. இதுபோன்ற சுவாரசியமான நிறைய தகவல்களை நூல் வாசிப்பு வழியாக வழங்கிக்கொண்டே வருகிறது. அதுதான் ஐநூறு பக்கங்களுக்கும் மேலான நூலை நிதானமாக பொறுமையுடன் வாசிக்கவைக்கிறது.

சீனாவை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நான்காயிரம் ஆண்டுகளுக்கு நீடித்தது. ஷியா வம்சம் தொடங்கி மஞ்சூ வம்ச காலத்தில் சீனா, மெல்ல தன்னை குடியரசுக்காக மாற்றிக் கொள்கிறது. மன்னராட்சியா, ஜனநாயகமா என்று தெரியாத குழப்பமான காலத்தில்தான் கோமிண்டாங் கட்சியின் சியாங்க் என்பவன் சொந்த நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து ஜப்பானுக்கு ஆதரவாக இருக்கிறான். இவன் புகழ்பெற்ற தலைவன் என்பதால் பொதுவுடைமைக் கட்சியும் மக்களைப் புரிந்துகொண்டு தன்னோடு இணையக் கோருகிறது. ஆனால், இவனோ அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு ஒழித்துக்கட்ட நினைக்கிறான். இறுதியாக தைவானுக்கு தப்பி ஓடிவிடுகிறான். சீனா, பொதுவுடைமைக்கட்சி ஆளும் நாடாக மாறுகிறது.

இதில் சன் யாட் ஸென் என்பவர் கோமிண்டாங் கட்சியை உருவாக்குகிறார். இவரது சிஷ்யனான சியாங், நேர்மையான தேசப்பற்று கொண்டவனாக இருப்பதில்லை என்பதுதான் பரிதாபமாக மாறுகிறது. தன்னை தலைவனாக வைத்துக்கொள்ள முயல்கிறானே ஒழிய நாட்டு மக்களின் கருத்துகளைப் பற்றி கவலைப்படாமல் ஜப்பானை எதிர்த்து நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொரில்லா படையையே ஒருமுறை ஒழித்துக்கட்ட முயல்கிறான். பிறகுதான் கம்யூனிஸ்ட் கட்சி சுதாரித்துக்கொண்டு அடித்து விரட்டுகிறது.

ஏகாதிபத்திய நாடாக ஜப்பான் மாறி சீனாவில் செய்த அட்டூழியங்கள், அரசியல் சதிகள்தான் சீனாவை பெரிய இக்கட்டில தள்ளின. மக்கள் வெகுண்டு எழுந்து போராடவும் அதுவே காரணம். கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு போராடி வென்றது. தொடக்கத்தில் ஜப்பானுடன் போரிட்ட கம்யூனிஸ்ட கட்சி, பிறகு கோமிண்டாங் கட்சியுடன் உள்நாட்டுப் போர் செய்து ஆட்சி அதிகாரத்தைப் பெறுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி செய்த தியாகம், பல்லாயிரம் கி.மீ கால்நடையாக நடந்து செல்வது, கட்சிக்காக பலர் செய்த தியாகங்கள் என்பது குறைவாக நூலில் கூறுகிறார் நூலாசிரியர். ஒருதரப்பு வாதமாக மாறிவிடக்கூடும் என நம்பியிருக்கலாம். எனவே, மாவோ, சூ என் லாய், சூ டேஹ் ஆகிய தலைவர்கள் சிலவரிகளில் மட்டுமே இடம்பெறுகிறார்கள்.

துரோகிகளான சியாங், வாங் சிங் தாய் பற்றி நிறைய கருத்துகளை கூறும்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பற்றி குறைவாக எழுதியிருப்பது ஏன் என்று புரியவில்லை. சீனா இன்றைய சூழலில் ஆக்ரோஷம் கொள்வது ஏன் என்ற கேள்விக்கு தெளிவான பதிலை அளிக்கிற நூல். நூல் முடிவுற்றபிறகு, முக்கிய சீன கவிஞர்களைப் பற்றியும் கூட நூலாசிரியர் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதை அந்நாட்டு இலக்கியத்திற்கான மரியாதை என்று புரிந்துகொள்ளலாம்.  
கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்