நாம் கண்காணிக்கப்படுகிறோமா?
நிச்சயமா என்கிறார் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாயா வாங். இவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் பணிபுரிகிறார்.
மக்கள் முகத்தை ஸ்கேனிங் செய்யும் கருவி மட்டும்தான் தம்மைப் பற்றிய தகவல்களை சேகரிக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளில், மால்களில் நிறுவியுள்ள பாதுகாப்பு கதவுகள் கூட உங்களைப்ப ற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றன என்று கூறி அதிர்ச்சியூட்டுகிறார்.
சீனா தற்போது உலகிலேயே மிகப்பெரியளவிலான வீடியோ கண்காணிப்பு அமைப்பை உருவாக்கிவிட்டது. அரசுக்கு எதிராக சுண்டுவிரலை அசைத்தால் கூட சாலை, விமானநிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் உங்கள் முகம் ஒளிபரப்பாகத் தொடங்கிவிடும். செலிபிரிட்டியாக அல்ல தேடப்படும் குற்றவாளியாக.
கூகுள் எப்படி தன் சேவைகளை இலவசமாக கொடுத்து பயனர்களின் தகவல்களை சேகரித்து விளம்பரங்களை அளித்து காசு பார்க்கிறதோ இதுவும் அதேபால்தான். போனின் ஐஎம்இஐ எண், வைஃபை முகவரி ஆகியவை அனைத்தைப் பயன்படுத்தியும் மக்களை பின்தொடர்ந்து உளவு பார்க்க முடியும் என்கிறது பிங்டெக் நிறுவனம்.
பீஜிங்கில் உள்ள ஸ்மார்ட் சிட்டியில் இந்த வகை தகவல் கொள்ளை நடைபெறுகிறது. அந்நகரில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் ஒரே சர்வரில் இணைக்கப்பட்டு ஐஎம்இஐ எண், வைஃபை எண் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இதற்கான தகவல்தளத்தை சரியான கடவுச்சொல் இன்றி அணுகவே முடியாது.
தகவல்களை சேகரிப்பது எதற்கு? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிவதற்குத்தான் என்று பளிச்சென பேசுகிறார் சைபர் பாதுகாப்பு ஆலோசகர் கிரெய்க் வால்டன்.
இப்போது உதாரணத்திற்கு, ஒருவரின் போன் நம்பர், ஐஎம்இஐ எண் ஆகியவற்றை ட்ராக் செய்தால் அவரின் சமூக வலைத்தளம், அவர் சார்ந்த கருத்து, எங்கு செல்கிறார், என்ன வாங்குகிறார் என அனைத்தையும் எளிதாக கண்டறிய முடியும். அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் உங்கள் போன் நம்பர் கேட்கிறார்கள். நீங்களும் ஜபர்தஸ்தாக கொடுத்து விடுகிறீர்கள். என்ன ஆகிறது? விளம்பரங்களை, ஆபர்களை அனுப்புவார்கள்.
ஆதார் எண்ணை வைத்து நம்முடைய பயோமெட்ரிக், வங்கி கணக்கு, வண்டி நம்பர்பிளேட் எண் வரை எடுத்துவிட முடியும். அதேநேரம் போன் எண்ணை வைத்தும் இதே விஷயங்களை செய்யமுடியும். என்ன சில மால்வேர்கள் தேவைப்படும்.
நன்றி: அபாகஸ்