கல்வியை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்! - செய்திக்கட்டுரை




school fist bump GIF

கல்வியை சிறப்பாக்கும் தொழில்நுட்பங்கள்!


இந்தியாவிலுள்ள பள்ளிகள், தொழில்நுட்ப நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் செய்து கல்வி தொடர்பான சேவைகளைப் பெற்று வருகின்றனர்.

கரும்பலகையில் சாக்பீஸ் வைத்து எழுதும் பழக்கம் ஒழிந்து,  அரசுப்பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறை சாதனங்கள் அறிமுகமாகி வருகின்றன. புரஜெக்டர் மூலம் வகுப்பு எடுக்கப்படுவது, பாடத்திட்டங்களை டிஜிட்டல் முறையில் படிக்க அளிப்பது என பல்வேறு கல்வி தொடர்பான புதிய முயற்சிகள் உருவாகி வருகின்றன.

1995 முதல் 2010 காலகட்டத்திற்குள் பிறந்தவர்களை ஜென் இசட் என்று அழைக்கின்றனர். இத்தலைமுறையினர், முழுக்க டிஜிட்டல் உலகில்தான் வாழ்கின்றனர். இவர்களின் கல்வியும் அதைச்சார்ந்தே அமைகிறது. இணைய வகுப்புகள், பாட்காஸ்ட்கள், வி.ஆர். கருவிகள் என இவர்களின் வாழ்க்கையில் கற்றல் முறைகள் மிகவும் நவீனமாகி உள்ளன. பள்ளிகளின் டெக் தேவைகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் தீர்த்து வைக்கின்றன. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில்  உள்ள வகுப்புகளில் 26 சதவீதம் மட்டுமே கணினிகள் இருந்தன. ஆனால் இன்று வகுப்பறை மட்டுமல்ல பள்ளிகளே  டிஜிட்டல் வடிவில் மாறியுள்ளன.

2013 ஆம் ஆண்டு மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் 2.5 லட்சம் மாணவர்களுக்கு, சாம்சங் ஸ்மார்ட் வகுப்பறை மூலம் கற்றல் தொடங்கியது. இத்துடன் அரசு ரைஸ் (Revitalising infrastructure and syestems in education), ஸ்வயம் (Study webs of active learning for young aspiring Minds) எனும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கியது. இதனுடன் மேக கணினியகம், செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் சாதனங்கள் ஆகியவற்றையும் பயன்படுத்தி கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்க அரசு முயன்று வருகிறது. இப்படி படித்த மாணவர்கள் வேலைக்குச் செல்லும்போதும் பயன்படுத்தும் ஆப்கள் அனைத்தும் எதையும் கணினியில் இன்ஸ்டால் செய்ய அவசியமில்லை. கூகுள் டாக்ஸ், ஜோகோ டாக்ஸ் என அனைத்து விஷயங்களையும் இணைய வசதி இருந்தாலே பயன்படுத்தி தம் பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.  மேற்சொன்ன வசதிகளை பெருநகரங்களில் உள்ள மாணவர்கள் எளிதாக பெறுகிறார்கள். ஆனால் கிராமங்களில், குறுநகரங்களில் உள்ள மாணவர்களுக்கு மேம்பட்ட இணைய வசதிகளும், மென்பொருட்களும் கிடைப்பதில்லை.

சிறப்பான வசதிகள் கொண்ட மென்பொருட்களுக்கு சந்தா செலுத்துமளவு மாணவர்கள் வலிமையான பொருளாதார நிலையில் இல்லை என்பதே உண்மை. இதற்காக ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள், இலவச மென்பொருட்களை இங்குள்ள கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.  இவை அடிப்படையாக ஒரு பணிக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுத்தரும். ஆனால், காலத்திற்கு ஏற்ப மேம்பட்ட வசதிகளைக்  கொண்டிருக்காது. தற்போது டபிள்யூபிஎஸ் ஆபீஸ், பிக்ஸ் எல்ஆர், லைட் வொர்க்ஸ், ட்ரெல்லோ ஆகிய மென்பொருட்களை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி மாணவர்களுக்கு வேலைத்திறன்களைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளன.  2021 இல் இணைய வழிக் கல்விக்கான சந்தை 44 சதவீதம் உயரும் என டெல் ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தகவல்: FE


நன்றி - தினமலர் பட்டம்











பிரபலமான இடுகைகள்