காமராஜரின் வழியில் ரஜினி பயணிக்கிறார் - தமிழருவி மணியன்!
காமராஜரைப் போலத்தான் ரஜினியும்!
ரசிகர்களைவிட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விரும்புவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியாகத்தானே இருக்கமுடியும். எத்தனை மீம்ஸ்கள் கிண்டல் என தாளித்தாலும் ரஜினி மீது தீராத காதல் கொண்டு அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிஆர்ஓவாக வேலை பார்ப்பவர், மணியன். திரைப்படம் வரும் சமயம் ரஜினியின் அரசியல் விஷயங்கள் பேசப்படும். இப்படியே இருபது ஆண்டுகள் போய்விட்டன. இதுபற்றி அவரிடம் பேசினோம்.
ரஜினியோடு உங்களுடைய உறவு எப்படிப்பட்டது? நண்பர், ஆலோசகர், உதவியாளர் என எப்படி வகைப்படுத்துவீர்கள்?
நான் கடந்த 32 மாதங்களாக அவரோடு தொடர்பில் இருக்கிறேன். அவருடைய ஆலோசகர் என்று கூறமுடியாது. நான் அவருடைய நண்பர் என்று கூறவே விரும்புகிறேன். அவருக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை.
நீங்களே சொல்லுங்கள். ரஜினி எப்போதுதான் அரசியலுக்கு வருவார்?
அடுத்த ஆண்டு ஏப்ரல் – செப்டம்பருக்குள் ரஜினி தன் கட்சியை முறைப்படி அறிவிப்பார். உடனே திமுக, அதிமுக போல பூத் கமிட்டிக்கான ஆலோசனைகளைத் தொடங்குவார். 234 தொகுதிகளுக்கான உறுப்பினர்களை விரைவில் அறிவிப்பார். தற்போது 80 சதவீத வேலைகள் முடிந்துவிட்டன. இன்னும் சிறிய வேலைகள் மட்டும்தான் மிச்சமிருக்கின்றன. இதுவே கட்சி விஷயத்தில் ரஜினி எப்படியிருக்கிறார் என்பதை உங்களுக்குச் சொல்லும். கட்சியின் கொள்கைகள், அதன் அடிப்படை அமைப்பு, தேர்தல் அறிக்கை ஆகியவை ஏறத்தாழ தயாராக உள்ளன.
அவரின் கட்சி, பாஜக அல்லது மக்கள் நீதி மய்யத்தோடு கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா?
தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. இப்போதே கூட்டணி பற்றி பேசவேண்டியது இல்லை. ஆனால் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்றாலும், ரஜினியே அக்கூட்டணிக்கு தலைமை வகிப்பார்.
ரஜினிக்கு 2021ஆம் ஆண்டில் 71 வயதாகிறது. இந்த வயதில் அவர் அரசியலுக்கு வந்து என்ன சாதிக்க முடியும்?
சினிமாவில்தான் வயதுக்கு முக்கியத்துவம் அதிகம். ஆனால் அரசியலுக்கு கிடையாது. மொரார்ஜி தேசாய் தன் 80 வது வயதில்தான் பிரதமராக ஆனார். கேரளத்தின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான அச்சுதானந்தன் தன் 90 வது வயதில் மாநில முதல்வராக பணியாற்றினார். வயதுக்கும் திறனுக்கும் எந்த தொடர்புமில்லை. 30 வயதில் அரசியலில் ஓய்வு பெற்றவர்களும் உண்டு. எண்பது வயதில் ஊக்கமாக பணியாற்றிய தலைவர்களும் இந்தியாவில் உண்டு.
புதிய தலைமுறை இளைஞர்கள் ரஜினியை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
ரஜினியின் ரசிகர்மன்றத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவர்தான். அவரின் அரசியல் நுழைவு மீதான பயத்தில்தான் பாஜக அரசின் மீது மென்மையாக விமர்சனங்களை வைப்பதாக ஆளும் கட்சி விமர்சனங்களை வைக்கிறது. நான் பத்து பேர்களை சந்தித்தால், அதில் ஏழுபேர் ரஜினி அரசியலுக்கு வரலாம் என்கிறார்கள். மூன்று பேர் அவர் அரசியலுக்கு வருவது மக்களுக்கு நல்லது என்கிறார்கள். இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, பத்து பேரில் யாரும் ரஜினியை எதிர்க்கவில்லை என்பதுதான்.
ரஜினிக்கு போட்டிகள் அதிகம் இருக்குமே? குறிப்பிட்ட சாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு தேவை இல்லையா?
ரஜினியின் கட்சி குறிப்பிட்ட கட்சி, அல்லது சாதியை முன்னிலைப்படுத்தாது. நாம் இப்போது பார்க்கும் திமுக, அதிமுக போன்றோர் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி அரசியல் செய்கிறார்கள். இம்முறையில் ரஜினியின் அணுகுமுறை இருக்காது. ரஜினி அரசியலுக்கு வருவது சிறப்பான அரசு நிர்வாகத்தை அவர் நேசிக்கும் மக்களுக்குத் தருவதற்குத்தான்.
ரஜினி மக்களின் ஆதரவைப் பெற முடியும் என நம்புகிறீர்களா?
ரஜினியின் ஆட்சி, தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் ஆண்ட கே.காமராஜின் ஆட்சியை ஒத்து இருக்கும். நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை தமிழகத்தில் அவர் கொண்டு வருவார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை மூன்று ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்யாவிட்டால், தன் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆரைப் போல ரஜினி வெல்வார் என்கிறீர்களா?
2021ஆம் ஆண்டு தேர்தலில் ரஜினி வென்றால், தமிழக அரசியலில் நீங்கள் புதிய உதயத்தைக் காண்பீர்கள்.
நன்றி – டைம்ஸ் டிச. 11, 2019 - சிவகுமார்