பிற மாநிலங்களை விட பஞ்சாப் வெளியிடும் மாசு குறைவுதான்!
நெற்கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு மானியங்களை வழங்குவோம்.
பஞ்சாப்பில் அறுவடை முடிந்ததும் நெற்கழிவுகளை எரிப்பது வழக்கம். மாறிவரும் சூழலில், இந்தப் பழக்கம் சூழல்கேடுகளை உருவாக்கி வருகிறது. இதனைக் குறைக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பயிர்களை எரிக்கும் நிகழ்வு போன ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக நடந்துள்ளது. இதைத்தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?
இந்த பிரச்னைக்கு நீண்டகால நோக்கில் யோசித்துத்தான் தீர்வுகளைக் காண முடியும். நாங்கள் விவசாயிகளுக்கான எந்திரங்களை தற்போது மானிய விலையில் வழங்கி வருகிறோம். கடந்த ஆண்டில் 28 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். இந்த ஆண்டில் 22 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். மேலும் விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு நூறு ரூபாயை மானியமாக வழங்கிவருகிறோம். இது மத்திய அரசு வழங்கும் பொருட்களுக்கான குறைந்த விலையை விட அதிகமாகும். மாநில அரசாக எங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்துத்தான் நாங்கள் செயல்பட முடியும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவினால் மட்டுமே மாசுபாடுகளை குறைக்க முடியும்.
விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் தங்களின் திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை?
விவசாயிகளுக்கு தாங்கள் கழிவுகளை எரிப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் தெரியும். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தலா இருபது கோடி ரூபாயை விவசாயிகளுக்கு நாங்கள் மானியமாக வழங்கி உள்ளோம். கழிவுகளை அழிக்க நாங்கள் வேறு வழிகளை ஆலோசித்து ஆராய்ந்து விவசாயிகளுக்கு கூற முயன்று வருகிறோம். ஆனால் அவர்கள் அவற்றை எரிப்பதை எளிதான வழியாக நினைக்கிறார்கள். திட்டம் தோல்விபெற்றதற்கு அதுவே காரணம்.
இந்த விவகாரத்தில் விவசாய சங்கங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
துரதிர்ஷ்டவசமாக விவசாயிகளுக்கென போராடும் அனைத்து விவசாய சங்கங்களுக்கும் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் தங்களின் மறைமுக உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் எப்படி மாநில அரசையும், மக்களையும் பாதிக்கின்றன என்பதை உணர்ந்தால் நல்லது. தங்களின் கெடுவாய்ப்பான எண்ணங்களை மாற்றிக்கொண்டு மக்களின் நலன்களை முன்வைத்து செயல்பட்டால் நான் அவர்களை வரவேற்பேன். கழிவுகளை எரிப்பதன் மூலம் மண்ணின் வளமும் கெடுகிறது. மக்களின் ஆரோக்கியமும் மோசமாகிறது. இதை அவர்கள் உணரவேண்டும்.
மத்திய அரசு கடந்த ஆண்டில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டில் பஞ்சாப்பின் அளவு 83 சதவீதம் என்று கூறியுள்ளதே?
உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 15 அன்று வெளியிட்ட அறிக்கையில் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டில் விவசாயத்தின் பங்கு 4 சதவீதம் என்று கூறியுள்ளது. உண்மையில் காற்று மாசுபாட்டில் பஞ்சாபின் பங்கு 26 சதவீதம் என்பதே உண்மை. பொது உணவு வழங்கல் முறையில் பஞ்சாப் மாநிலம் 191.36 டன்கள் உற்பத்தியை வழங்கியுள்ளது. இது முக்கியமான சாதனை. ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகியவற்றை விட அதிக உற்பத்தி செய்து காட்டியிருக்கிறோம். இம்மாநிலங்களை விட மாசுபாடும் எங்கள் மாநிலத்தில் குறைவுதான்.
நன்றி – டைம்ஸ் – டிச. 5, 2019
சஞ்சீவ் வர்மா