உண்மையைத் தேடி-- அமித்தை சுட்டுக்கொன்ற பாஜக எம்.பி
தகவல் உரிமைச்சட்டத்தை பயன்படுத்துபவர்கள் இன்று பலரும் ஆளும் அரசின் ஆதரவுடன் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இப்படித்தான் குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு தகவல்உரிமை செயற்பாட்டாளர், சுட்டுக்கொல்லப்பட்டார். அதுவும் கொலை செய்யப்பட்டது, வழக்குரைஞரும் செயற்பாட்டாளருமான அமித் ஜெதவா என்பதோடு, கொலை நடந்த இடம் உயர் நீதிமன்ற வளாகம் ஆகும். தற்போது இக்கொலைக்கு காரணமான பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் தினு போகா சோலன்கிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சோலன்கி தன்னுடைய ஜூனாகத், கிர் சோம்நாத் ஆகிய மாவட்டங்களில் செல்வாக்கு கொண்டவர். வணிகத்திற்கு ஏற்றமாதிரி சட்டதிட்டங்களை மாற்றி வந்த பாஜக அரசின் தில்லுமுல்லுகளை அவர்களின் சட்டம் மூலமே கேள்வி கேட்டு மனு போட்டு பதில் பெற்று வழக்கு தொடர்ந்து வந்தார் அமித்.
அரசியல்வாதியாக இருப்பவர்கள் நிறைய தொழில்களை நடத்தினால்தானே காசு பார்க்க முடியும். சோலன்கி குஜராத்தில் செய்யாத தொழில்கள் கிடையாது. சுரங்கம், பெட்ரோல் முதல் ஐஸ் ஃபேக்டரிகள் வரை நடத்தி வந்தார். இதில் அமித்துக்கும் சோலன்கிக்கும் முட்டிக்கொண்டது குறிப்பிட்ட வழக்கில்தான். சோலன்கியின் சுரங்கம் ஒன்று கிர் காடுகளின் பரப்பில் வந்தது. இதனை மோப்பம் பிடித்த அமித், உடனே அரசிடம் தகவல்களைப் பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டார். நீதிமன்றமும் அவரின் தொழிலை நடத்துவதற்கு தடை விதித்து விட்டது.
வழக்கு நடந்ததே பெரிய விஷயம்தான். அமித்தின் கொலையை நேச்சர் கிளப் எனும் அமைப்பு போலீசில் பதிவு செய்தது. சோலன்கி அதிகாரம் கொண்டவர் என்பதால் மாநில காவல்துறையின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டு, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன்பிறகும் சோலன்கி சாட்சிகளின் குடும்பத்தை ஆட்கள் மூலம் அச்சுறுத்தினார். நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையை நாங்கள் பார்க்கவில்லை 165 சாட்சிகளில் பலரும் பல்டி அடித்தனர். எனவே அமித்தின் தந்தை வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரினர். நீதிபதிகளும் அதனை ஏற்றுக்கொண்டனர். நவ.2017 இல் மறு விசாரணை தொடங்கியது. அதில் சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதில் பக்வன்தாஸ் என்ற சாட்சியின் மகனைக் கூட கடத்திச்சென்று சோலன்கி மிரட்டி இருக்கிறார். அப்புறம் எப்படி உண்மையை சாட்சிகள் பேசுவார்கள்? இதிலும் பலர் மாற்றிப் மாற்றிப் பேசினர்.
இறுதியாக ஜூலை 2019 அன்று வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. சோலன்கி குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தது. சிறப்பு சிபிஐ நீதிபதி தவே, சோலன்கியோடு ஆறுபேரையும் குற்றவாளி என உறுதி செய்தார். இதோடு எதுவும் நின்றுவிடவில்லை. இந்த வழக்கில் நீதிக்காக போராடியவர்களுக்கு இன்றுவரை நேரடியாக, மறைமுகமாக அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. உன்னாவோ கற்பழிப்பு புகாரில், புகார்தார ருக்கு நேர்ந்த கொடுமையை உலகமே பார்த்துகொண்டுதானே இருந்தது. நீதிக்கான போராட்டமும் பாதையும் எளிதானது அல்ல.
நன்றி - ஃப்ரன்ட்லைன்