அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் தத்துவம்
அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பது எங்கள் கொள்கை!
இந்திய அரசு பொதுத்துறைகளில் முதலீடு செய்வதைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை முதலில் அமல்படுத்த உள்ளது பெட்ரோலியத்துறையில்தான். இத்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதானை சந்தித்து இதுபற்றி பேசினோம்.
பெட்ரோலியத்துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பின் எதற்கு அதனை விற்க நினைக்கிறீர்கள்?
இந்திய அரசு எந்த வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட விரும்பவில்லை. எங்கள் பிரதமர் இதனை சுலோகனாக சொல்லவில்லை. வழிகாட்டுதல் நெறிமுறையாக வைத்திருக்கிறார். இதுவே பாஜக கட்சியின் தத்துவமும் கூட. நாங்கள் இதை நம்புகிறோம். இந்நாட்டிலுள்ள எளிம மனிதனுக்கும் நலத்திட்டங்கள் சென்று சேரவேண்டுமே? நிறுவனத்தை அரசு நடத்தினால் என்ன, தனியார் நடத்தினால் என்ன? மக்களுக்கு நன்மை கிடைப்பதுதானே முக்கியம். நாங்கள் இந்த விற்பனையை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் நடத்த உள்ளோம்.
அரசுக்கு அதிக வருவாய் தரும் துறை எண்ணெய் துறை. அதிலிருந்து அரசு தன் பங்கை விலக்கிக் கொள்வது ஏன்?
அரசு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணியில் உள்ளது. சொத்துக்களை உருவாக்குவது அதன் பொறுப்பல்ல. எனவே அரசு தன்வசமுள்ள தொழிலை விற்றுவிட்டு, அத்தொழிலை மேற்பார்வை செய்யும் நபராகவே இனி செயல்படும்.
நீங்கள் கூறியபடி புரிந்துகொண்டால் எண்ணெய் துறையில் பொதுத்துறை நிறுவனங்கள் நீங்குகின்றனவா?
அரசு தன் நிறுவனங்களை விற்ற காலத்தை விட இன்று தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும். தொலைத்தொடர்புத் துறை, ஆகாயம், எஃகு, சிமெண்ட், ஆகிய துறைகளில் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இத்துறைகளின் பயன்களை மக்கள் அனுபவித்துதானே வருகிறார்கள்.
பெட்ரோலிய நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் பெற வேண்டும் என்று எண்ணுகிறோம். இதனால்தான் எரிபொருள் சந்தையை எண்ணெய் அல்லாத நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த நினைக்கிறோம்.
உலகளவிலான எண்ணெய் சந்தை எப்படி இருக்கிறது?
உலக அளவில் எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள ஓபெக் நாடுகள் இதன் விலையை தீர்மானித்து வருகின்றன. ஆனால் இத்துறையில் நடக்கும் கண்டுபிடிப்புகள் அதனைப் பயன்படுத்தும் விலையை பெருமளவு குறைத்து வருகின்றன. இத்துறையில் எரிவாயு பிரிவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆற்றல்துறையில் முன்னர் இருந்த விதிகள் இன்று மாறி வருகின்றன.
இந்தியா இன்றும் பெருமளவு எண்ணெய் வளத்தை இறக்குமதிதானே செய்துகொண்டிருக்கிறது?
எண்ணெய் வள சந்தைக்கான தாயக்கட்டைகள் இன்று விற்பனையாளர்களிடம் இல்லை. வாங்குபவர்களிடம்தான் உள்ளது. உலகளவில் இந்தியாவிடம்தான் எண்ணெய் வாங்கும் சக்தி உள்ளது. கடந்த இருபதாண்டுகளை ஒப்பிடும்போது, நமது எண்ணெய்க்கான தேவை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி மக்களுக்கானதுதானே?
ஓபெக் நாடுகள் நமக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகின்றன. அதன்படி நாம் கச்சா எண்ணெய் வாங்குவது முதல் எரிவாயு பெறுவது என்று கூட மாற்றிக்கொள்ளலாம். நாம் பெருமளவு எண்ணெய் சார்ந்த நாடாகவே இருக்கிறோம். ஆனால் இனி மாற்று வழிகளைத் தேடவேண்டும். கூடுதலாக எரிவாயு சார்ந்த வாகனங்களை பயன்படுத்துவதை யோசிக்க வேண்டும். ஆற்றல் என்பது இனியும் எண்ணெய் வகையாக இருக்காது. இப்போதே அது பேட்டரியாக மாறிவிட்டது. இதனை அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ளன.
நன்றி – டைம்ஸ் நவ. 13, 2019
சஞ்சய் தத்தா