உண்மையைப் பேசினால் உங்களை ஓரம் கட்டிவிடுவார்கள் -ஜூவாலா கட்டா




Image result for jwala gutta


ஜூவாலா கட்டா, பாட்மின்டன் விளையாட்டு வீரர். காமன்வெல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் இவர்.
தெலங்கானாவில் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, நான்கு பேரால் கற்பழித்து எரித்து கொல்லப்பட்டார் என்று போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அவர்களின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க மக்கள், ஊடகங்கள் அழுத்தம் கொடுத்தனர். இதன்விளைவாக அவர்கள் தப்பித்துச் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை போலீசார் அடுத்த நாள் ஊடகங்களிடம் கொடுத்தனர். போலீசாரின் நடவடிக்கையை மக்கள் ஆதரித்தாலும், மனித உரிமைக்கு எதிரானது. நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இந்த என்கவுன்டர் அழித்துவிட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கருத்து தெரிவித்திருந்தனர். இதுபற்றி ஜூவாலா கட்டாவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற விவகாரங்களில் விளையாட்டு வீரர் பெரும்பாலும் கருத்து தெரிவிப்பதில்லை. என்ன காரணம்?

இந்தியாவில் கருத்துகளை வெளிப்படையாக சொன்னால் அவர்கள் குறிவைக்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள். என்னைப் பாருங்கள். எனக்கு தவறு என்று தோன்றும் விஷயங்களில் நான் தைரியமாக பேசுவேன். அதற்கு கிடைத்த பரிசு, உங்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் சர்ச்சைக்குள்ளாகும் என பல்வேறு பிராண்டு அதிகாரிகள் எனக்கு வாய்ப்பு அளிக்காமல் விளக்கியுள்ளனர். விளையாட்டில் சாதித்து பதக்கம் வெல்வது என்பதோடு, நாட்டில் நிலவும் அநியாயங்களை நாம் பேசவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அப்படி இல்லாதபோது, நாடு பற்றி குறை சொல்லும் உரிமையையும் நாம் இழக்கிறோம். மேலும் நாளை உங்களுக்கு ஓர் பிரச்னை வரும்போது, உங்களால் அதனை சமூகத்திடம்  கொண்டு செல்ல முடியாது.

உங்களைப் போல தைரியமாக பேசுபவர்கள் விளையாட்டுத்துறையில் மிகவும் குறைவு. 

நான் தைரியமாக துணிச்சலாக பேசுகிறேன் என்பதை விட யதார்த்தத்தைப் பேசுவதாகவே நினைக்கிறேன். இங்கு நாம் ஏதாவது உண்மையைப் பேசினால், இவர் இந்தக்கட்சி, அந்தக்கட்சி, அந்த அரசுக்கு ஆதரவு என முத்திரை குத்திவிடுகின்றனர். இது ஆபத்தான போக்காக இன்று வளர்ந்து வருகிறது. இந்தியர்களில் பலரும் உண்மையை உரக்கப் பேசாமல் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக போலியாக நினைத்துக்கொள்கிறார்கள். அது உண்மை அல்ல. நான் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுப்பதில் என்னை பெருமை மிகுந்தவளாக உணர்கிறேன். வெளிப்படையாக பேசுவதிலும் இங்கு பாகுபாடு நிலவுகிறது. ஆண்களை விட இந்த விஷயத்தில் பெண்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

ஹைதராபாத் என்கவுன்டரை நாடு முழுவதிலுமுள்ள பிரபலங்கள் வரவேற்று பேசியுள்ளனரே?

போலீசார் செய்யும் என்கவுன்டர்கள் எப்போதும் என்னைப் பதற்றப்படுத்துகின்றன. பிரபலங்கள் இதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இனிப்பு கொடுத்து கொண்டாடினாலும் அவை சரியானவை அல்ல என்பதே என் கருத்து. ஓர் இறப்புக்கு எதிர்வினையாக நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்தாக மாறிவிட்டது. ஒருவர் செய்யும் குற்றத்திற்கு ஏதுமறியாத அவர்களின் குடும்பமும் தண்டனையை அனுபவிப்பது சரியானதா? துயரமான ஓர் இறப்பிற்கு இப்படி ஒரு எதிர்வினையை நான் எதிர்பார்க்கவில்லை. சட்டத்தின்படி நாம் செயல்படாவிட்டால், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிடுவோம்.

மிக நிதானமாக செயல்படும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள கோபம்தான் அவர்களின் என்கவுன்டர் கொண்டாட்டம் என்று இதனை கருதலாமா?

போலீசார் சுட்டுக்கொன்றது காட்டில் வாழும் விலங்குகளை அல்ல. அவர்கள் மனிதர்கள். ஓர் ஜனநாயக நாட்டில் குற்றவாளிகள் நீதித்துறை மூலம்தான் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதனை நீங்கள் வரவேற்றால், தலிபான்கள், பொதுமக்கள் முன்னிலையில் வல்லுறவு செய்பவர்களை அடித்து கொல்கிறார்கள். அதனை ஏன் பார்க்க பயப்படுகிறீர்கள். இரண்டும் ஒன்றுதானே? வல்லுறவு செய்யப்பட்டவர் மீது எனக்கு இரக்கம் உள்ளது. அதன் பொருள், அதற்கு காரணமானவர்கள் என்று முழுமையாக குற்றம் நிரூபிக்கப்படாதவர்களை கொல்வது அல்ல.

குற்றவாளிகளை கண்டனம் செய்வது, அவர்களின் படுகொலையை நியாயப்படுத்துவது என்று செயல்படுபவர்கள் அரசின் பக்கம் இருப்பது போல தெரிகிறதே?

தற்போதைய நாட்களில் யாரும் அரசைப் பகைத்துக்கொள்ள விரும்புவதில்லை. குறிப்பாக விளையாட்டு வீர ர்கள். அவர்களுக்கு விருதுகளை வழங்குவது அரசியல்வாதிகள்தான். நீங்கள் அரசின் குறைகளைப் பேசினால், உங்களுக்கு எந்த அங்கீகாரங்களையும் அவர்கள் வழங்க மாட்டார்கள். என்னையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியாவிற்காக இரட்டையர் பிரிவில் விளையாடி நாட்டிற்கு பெருமை தேடித்தந்த வீராங்கனைகளில் நானும் ஒருத்தி.

எனக்கு அர்ஜூனா  விருது தாமதமாக கிடைத்தது. மேலும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவே இல்லை. இந்த தாமதம் காங்கிரஸ் தொடங்கி தற்போது ஆளும் பாஜக வரை தொடர்கிறது. நான் எந்த அரசியல் கட்சிக்காகவும், அல்லது அவர்களின் கருத்தியல் சார்ந்தும் பேசியதில்லை. ஆனால் எனக்கு உண்மை பேசியதற்காக கிடைத்த பரிசு இவைதான். என்னை முதலில் காங்கிரசிற்கு எதிரானவள், என்றார்கள். பின்னர், தெலங்கானா அரசுக்கு எதிரானவள் என்றார்கள். இப்போது பாஜகவிற்கு எதிரானவள் என்று சமூக வலைத்தளங்களில் பேசுகிறார்கள். அதிலிருந்தும் பல்வேறு வகையான மிரட்டல்களையும் நான் சந்தித்துவருகிறேன்.

நன்றி – டைம்ஸ் டிச.11,2019