மார்வெல் மகத்தான மனிதர் ஸ்டான் லீ பிறந்த தினம் இன்று!
giphy |
ஸ்டான் லீ பிறந்த தினம் இன்று..
மார்வெல் யுனிவர்ஸின் தலைவர். ஃபென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ்மேன், அமேசிங் ஸ்பைடர்மேன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை வடிவமைத்தவர். இன்றும் மார்வெல் நிறுவனங்களின் அட்டகாசமான பொழுதுபோக்கு கதாபாத்திரங்களின் அடிப்படையை உருவாக்கியவர் ஸ்டான் லீதான். திரைப்படங்களாக வெளிவந்தபோது அதில் சிறிய காட்சிகளில் நடிப்பது இவரின் வழக்கம்.
1922ஆம்ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பிறந்தவர் ஸ்டான் லீ. இவர் வேலை செய்த காமிக்ஸ் புக் நிறுவனம்தான் பின்னாளில் மார்வெல் காமிக்ஸாக மாறியது. ஓவியர் ஜேம்ஸ் கிர்பியுடன் இவர் இணைந்து டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், எக்ஸ்மேன், ஃபென்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட எண்ணற்ற கதாபாத்திரங்களை உருவாக்கினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செலியா, ஜேக் லெய்பர் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவர் பிறந்த சமயம், உலகமே போர் பிரச்னையால் பொருளாதார மந்த நிலையில் தடுமாறியது. வறுமையில் இவரது குடும்பம் திகைத்து நின்றது. ஸ்டான் லீயின் முழுப்பெயர் ஸ்டான்லி மார்ட்டின் லெய்பர். இப்பெயரை முழுதாக சொன்னாலே மூச்சு வாங்கும் என்பதை விரைவில் உணர்ந்து, ஸ்டான் லீ என்று பெயர் மாற்றிக்கொண்டு டைம்லி காமிக்ஸில் பணிக்குச் சேர்ந்தார். உள்நாட்டு ராணுவத்தில் ஓவியராக பணிபுரிந்திருக்கிறார். 1961இல் டைம்லி காமிக்ஸ் மார்வெல்லாக மாறியது. அப்போது இவர்களின் போட்டி நிறுவனம் டிசி காமிக்ஸ், ஜஸ்டிஸ் லீக் காமிக்ஸ் சிறப்பான விற்பனையைக் கொண்டிருந்தது. இதனால் அதற்கு போட்டியாக காமிக்ஸ் தொடரை உருவாக்க ஸ்டான் லீயை கம்பெனி கேட்டுக்கொண்டது.
எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயல், ஜேம்ஸ் வெர்னே ஆகியோரின் எழுத்துக்கள் தந்த உற்சாகத்தில் ஜேம்ஸ் கிர்பியுடன் ஆலோசனை செய்தார். ஃபென்டாஸ்டிக் ஃபோர் உருவானது. மக்களிடையே பெரும் வெற்றி பெற்றது. இதன் விளைவாக அடுத்தடுத்து ஹல்க், எக்ஸ்மேன், டேர்டெவில்,ஸ்பைடர்மேன் ஆகிய கதாபாத்திரங்கள் பிறந்தன.
1972இல் ஆசிரியர் குழுவில் இயக்குநர் ஆனார். மேலும் திரைப்படப்பிரிவுக்கு தலைவராக மாறினார். அவெஞ்சர் தொடர்வரிசை படங்கள், எக்ஸ்மேன் ஆகியவை வரலாறு காணாத வெற்றி பெற்றன. அதன்பிறகு போவ் எனும் நிறுவனம் தொடங்கி, எக்செல்சியர் எனும் நூலை வெளியிட்டார். அது இவரின் சுயசரிதைதான். 2017இல் இவரது மனைவி ஜோன் மறைந்தார். அதற்குப்பிறகு இதயம் தொடர்பான குறைபாடுகள் லீக்கு ஏற்பட்டன. பிளாக் பாந்தர் படம் லீயின் உடல்நிலை காரணமாக வேகமாக திரையைத் தொட்டது. வெற்றியும் பெற்றது. 2018ஆம் ஆண்டு நவ.12 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார் லீ.
வெற்றி ரகசியம்
ஸ்பைடர்மேனை ஏழை குடும்பத்திலிருந்து உருவாக்கினார். இதனால் சாதாரண மக்கள் எளிதாக அக்கதாபாத்திரத்துடன் தொடர்பு கொள்ள முடிந்தது. சமகால அரசியலை காமிக்ஸ்களை திரைப்படமாக எடுக்கும்போது சேர்த்துக்கொண்டார். பிளாக்பாந்தர் தன் கதையின் சிறப்பைத் தாண்டி வெற்றி பெற்றது இப்படித்தான. காரணம், அச்சமயத்தில் டிரம்ப் அதிபராகி இருந்தார். கருப்பினத்தவர்களின் மீதான வெறுப்பு பூதாகரமாக கிளம்பியது. அந்நேரத்தில் மக்களைக் காக்கும் கருப்பின நாயகன் என்றால் போதாதா?
விஷயம் இதுதான். மக்கள் மனதைப் புரிந்துகொண்டால் மாஸ் வெற்றி பெறலாம் என்பதைத்தான் ஸ்டான் லீ சொல்லவருகிறார்.
நன்றி - பயோகிராபி வலைத்தளம்.