அந்த சமாச்சாரத்தைச் சொல்லும் அடல்ட் கரடி! - அம்பு படாத கரடிக்கதை!
TED 1, TED 2
மார்க் வால்பெர்க்
இயக்கம் - சேத் மெக்ஃபார்லென்
ஒளிப்பதிவு - மைக்கேல் பாரட்
இசை - வால்டர் மர்பி
இது வயது வந்தவர்களுக்கான காமெடி படம். அதனை மறக்காதீர்கள். அப்போதுதான் குங்குமம் விமர்சனக்குழு போன்ற லாஜிக் கேள்விகளை எழுப்பாமல் படத்தை ரசிக்க முடியும்.
அமெரிக்காவில் வாழும் தம்பதி. அவர்களுக்கு தனிமை விரும்பியான சிறுவன். அவனுக்கு பெற்றோர் கொடுக்கும் டெடி பியர் பொம்மை. இவைதான் தொடக்க காட்சிகள். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? ஆம் மற்ற டெடிகளைப் போல அல்ல இந்த டெடி. இது பேட்டரியால் இயங்கும் என்றாலும், மனிதர்களோடு இயல்பாக பேசக்கூடிய திறன் பெற்றது. இதனால் பத்திரிகை,டிவி என அனைத்திலும் பிரபலம் ஆகிறது. ஆனால் அந்த சிறுவனை மறக்கவே இல்லை. அவனோடுதான் கடைசி வரை இருக்கிறது.
எல்லோருக்கும் குறிப்பிட்ட வயது வந்தால் அடுத்த பாலினத்தவரை தேடுவோம். பார்ட்டி பண்ணுவோம். பெற்றோர் வீட்டில் இல்லை என்றால் கும்தலக்கடி குஜாலை நடத்துவோம் அல்லவா? அதேதான் இங்கு மார்க் வால்பெர்க்கு முன்னே டெடி செய்கிறது. டார்ச்சர் ஆகும் மார்க்கின் லிவிங் இன் பெண் தோழி மிலா குனிஸ், டெடியை அடித்து துரத்து அப்போதுதான் நம் ரூமில் லைட்டை அணைக்கலாம் என்று மிரட்ட, மார்க் தடுமாறுகிறான். டெடி பியரோடு விரலும், ஸ்மார்ட்போனும் போல இருந்துவிட்டான். வேதனையோடு டெடிக்கு தனி ரூம் பார்த்து கொடுத்து, வேலையும் வாங்கிக் கொடுக்கிறான். டெடி அடல்ட் சேஷ்டைகள் செய்து பெண்தோழியையும் சம்பாதித்துக்கொள்கிறது. அவளுடன் சமாச்சாரத்தையும் ஏ கிரேடில் செய்து முடிக்கிறது.
இங்குதான் ட்விஸ்ட். டெடிதான் தனக்கு வேண்டும் என்கிற சைக்கோ அப்பா, மகன் இணை மார்க்கை துரத்துகின்றனர். மார்க் டெடியால் காதலியை கைவிட நேருகிறது. அப்போது டெடியை தூக்கிச் செல்கிறது சைக்கோ அண்ட் கோ. அவர்களிடமிருந்து டெடியை எப்படி மீட்கிறார்கள் என்பதுதான் கதை.
ஃபேன்டசி கதை என்பதால் லாஜிக்கை மறந்தால்தான் மேஜிக் நடக்கும். எனவே சந்தோஷமாக டெடியின் வயது வந்த குறும்புகளை ரசிக்கலாம்.
பாகம் 2
இதில் டெடிக்கு என்ன பிரச்னை என்றால், டெடி தன் பெண்தோழியை மணந்துகொள்கிறது. அப்புறம் என்னாச்சு என தந்தி போல பரபரக்காதீர்கள். டெடியின் திருமணத்தை அரசு ஏற்கவில்லை. காரணம், டெடி மனிதன் அல்ல பொம்மை. எனவே இந்த சட்டப்போராட்டத்திற்காக மார்க்கும் போராடுகிறார். இந்த வரலாற்று சம்பவத்தின்போது, வளரும் வக்கீல் அமண்டா சீபீல்டை சந்திக்கிறார்கள், அம்மணி இவர்களுக்கு முன்பாகவே கஞ்சாவை இழுத்து விஸ்கியை குடிக்க மஜாவாக இருக்கிறது மார்க் - டெடி அண்ட் கோவிற்கு. நட்பு சிறக்க இது போதுமே!
டெடியை அமெரிக்க அரசு மனிதராக ஏற்றதா இல்லையா? இந்த நேரத்தில் டெடியை கைப்பற்றத் துடிக்கும் சைக்கோ மனிதன் என்ன செய்கிறான், மார்க் இம்முறையாவது அமண்டாவோடு லிப்லாக் தாண்டிய முயற்சிகளை செய்தாரா என அனைத்திற்கும் இங்கு பதில் இருக்கிறது. சந்தோஷமாக பார்க்கலாம். கூடுதலாக டெடிக்கு இப்படத்தில் மகன் வேறு பிறந்து விடுகிறான். மோர்கன் ஃப்ரீமனின் நடிப்பு படத்திற்கு பெரும் பலம். முதல் பாகம் பார்த்துவிட்டு இதனை பார்த்தால் நிறைய விஷயங்கள் உங்களுக்கு புரியும்.
மனிதர்களை விட நாய், பூனை, பொம்மைகளை நட்பு கொள்கிறவர்களுக்கு இந்த படம் பொக்கிஷமாக தோன்றும்.
கோமாளிமேடை டீம்