மலையாள மொழியில் தெலுங்குப்படம் - கல்கி படம் எப்படி?
கல்கி - மலையாளம்
இயக்கம் பிரவீன் பிரபாராம்
ஒளிப்பதிவு கௌதம் சங்கர்
இசை ஜேம்ஸ் பிஜய்
ஆஹா
மலையாளப் படமா அல்லது தெலுங்குப் படமா என திகைக்கும்படி சண்டைக்காட்சிகளில் அனல் தெறிக்கிறது. எஸ்.ஐ கே, நஞ்சன் கோட்டை எனும் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார்,. அந்த ஊரில் அமர்நாத் என்பவர், மக்களை ஊருக்கு வெளியே கொண்டுபோய் வைத்துவிட்டு அங்கு துப்பாக்கிகளை தயாரித்து வருகிறார். இருவருக்குமான டிஷ்யூம் டிஷ்யூம்தான் கதை.
இதை எப்போதும் போல மலையாளப்படங்களின் வேகத்தில் சொல்லாமல் பரபரவென சொல்லியிருப்பதுதான் படத்தைப் பற்றிப் பேசக்காரணம்.
டோவினோ தாமஸ்தான் படத்தின் பெரும்பலம். அடுத்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் பிஜய். தன்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்த்து எதிரிக்கு எதிராக நின்று போராடும் வேகம், போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ரவுடியை தீவைத்து எரிப்பது, ஊருக்குள் அமைதி கொண்டுவரை அசுரனாக நடந்துகொள்வது என காட்சிக்கு காட்சி பின்னி எடுக்கிறார்.
இவருக்கு நேர் எதிராக தில்லாக நிற்கிறார் சிவஜித் பத்மநாபன். நெஞ்சில் எப்போதும் எரியும் வன்மத்துடன் மீசையை முறுக்கியபடி நடக்கும்போது கத்தியை செருகி இழுத்து விடுவாரோ என திகிலாகிறது. ஜேம்ஸ் பிஜயின் இசை, படத்தின் தீமுக்கு ஏற்றபடி வர நிறைய மெனக்கெட்டிருக்கிறது. படம் வேகமாக செல்வதற்காக சூழலை உருவாக்கியவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை.
ஐய்யய்யோ
படம் நிறைய இடங்களில் தேங்கி நிற்பது போன்ற உணர்வுகள் எழுகிறது. டிஓய்பி கட்சிக்கு எதிரான கட்சியின் செயல்பாடுகள் பொறுமையை சோதிக்கின்றன.
மலையாள மொழியில் சிறிதேனும் வேகமான ஹீரோயிச படம் என்பதற்காக பார்க்கலாம். மசாலா செம காரம். இதில் நாயகி, காதல் என இடைச்செருகல் எதுவும் இல்லை. சம்யுக்தா மேனன் எப்படி வருகிறாரோ அப்படியே செல்கிறார். அந்த காட்சிகள் நமக்கு சகிப்புத்தன்மையை சொல்லித்தருகின்றன.
கோமாளிமேடை டீம்