பாலியல் வேட்டையன் - கேரி ரிட்ஜ்வே
அசுர குலம்
கேரி ரிட்ஜ்வே
அமெரிக்காவில் பிறந்த கேரி, இருபது ஆண்டுகளாக சீரியல் கொலைகளை செய்து போலீசாரை பதற வைத்தார். பிறகு இவரை டிஎன்ஏ தகவல்களை வைத்து போலீஸ் பிடித்து சிறையில் அடைத்தது.
1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உடாவில் உள்ள சால்ட் லேக் நகரில் பிறந்தார். மேரி ரீடா ஸ்டெய்ன்மன் - தாமஸ் நியூட்டன் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். தாயால் இளம் வயதிலேயே பாலியல் மீது ஈர்க்கப்பட்டார். பதினொரு வயதில் வாஷிங்டனுக்கு, குடும்பமே இடம்பெயர்ந்தது.
கேரிக்கு டிஸ்லெக்சியா பிரச்னையும் இருந்தது. இவரின் ஐக்யூவும் 82தான். அப்புறம் படிப்பைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? பதினாறு வயதிலேயே இவரின் குணம் பற்றி சில செயல்பாடுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. சிறிய வனப்பகுதிக்குள் ஆறு வயது சிறுவனைக் கூட்டிச்சென்று, கத்தியால் குத்தினார். பிறகு அந்த சிறுவன் ஊரைக்கூட்டி உண்மையைச் சொல்லி உயிர் பிழைத்தார். கத்தியால் குத்தியபோது, கேரி சிரித்துக்கொண்டிருந்தார் என்றார்.
1969ஆம் ஆண்டு, பள்ளிப்படிப்பை முடித்தார். கேரி அதற்கடுத்த என்ன செய்வது என்று யோசித்தார். காலாகாலத்தில் செய்வது கல்யாணம்தானே? ஆம் அதைதான் கேரியும் செய்தார். கிளாடியா என்ற பெண்ணை, திருமணம் செய்தார். கேரிக்கு செக்சில் எப்போதும் திருப்தி வந்தது கிடையாது. எனவே நேவிக்கு அவர் போனபோது, கிடைத்த நேரத்தில் எல்லாம் விலைமாதுக்களுடன் ஜல்சாவில் இருந்தார். மீதி நேரங்களில் வேலையும் செய்தார். பாதுகாப்பற்ற உடலுறவு என்பதால், வா.மு.கோமு சுந்தரேசன் போல ஆணுறுப்பில் நோய் வந்துவிட்டது. அதைப்பற்றியும் பெரிதாக அவர் கவலைப்படவில்லை. ஆனால் அவரோடு உறவு கொள்ள வந்த பெண்கள் பதறி சிதறி ஓடினர்.
அந்த நேரத்தில் தனிமை பொறுக்க முடியாத கிளாடியா, கையில் மாட்டிய கேரியின் மோதிரத்தை கழற்றினார். பிற ஆண்களுடன் டேட்டிங் செல்லத் தொடங்கினார். ஓரே ஆண்டு. திருமணம் முடிவுக்கு வந்தது.
1973ஆம் ஆண்டில் இரண்டாவது மனைவியை கேரி திருமணம் செய்தார். எதற்கு செக்சுக்காகத்தான். வாத்சாயனார் சொன்ன அத்தனை போஸ்களிலும் கேரி - மார்சியா நிகழ்த்தினர். உள்ளறை மட்டுமல்ல, திறந்தவெளிகளிலும் சிருங்காரம் நடந்தது. தினசரி தோன்றும்போதெல்லாம் கேரி மார்சியாவின் கவுனைப் பிடித்து இழுத்தார். பக்தி மார்க்க பெண்ணான மார்சியா, செக்ஸ் தன் கடமை என நினைத்து கணவர் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் வந்தார். ஆனால் அவருக்கு சந்தேகம் கேரிக்கும், அவரின் தாய்க்கும் உள்ள உறவுதான். கேரியின் தாய் மார்சியாவை , தன் மகனை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்று திட்டிக்கொண்டே இருப்பார். இதனால் அடிக்கடி இவர்களுக்கும் சண்டை மூண்டாலும் கேரி, நோ கமென்ட்ஸ் என இந்திய பிரதமர் போல ஒதுங்கிக்கொண்டார். இது மார்சியாவுக்கு வருத்தம் தந்தது. ஏழு ஆண்டுகள் கழித்து இந்த உறவு முடிவுக்கு வந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. மனைவியுடன் ஜாலியாக சோலி பார்த்தாலும், விலைமாதுக்களுடனான பிரியம் கேரிக்கு போகவே இல்லை.
இவரின் திருமணம் மூன்றாவது மனைவியான ஜூடித் மாசன் என்பவரோடு முடிவுக்கு வந்தது. இவர் தன் மாமியாரின் அன்பை புரிந்துகொண்டு அமைதியாக கேரிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் மேற்கொண்டு சுயம்வரங்கள் நடக்கவில்லை.
கொலைப்படலம்!
1982ஆம் ஆண்டு க்ரீன் ரிவர் என்ற ஆற்றில் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இளம்பெண் தன் பேண்டீசால் கழுத்து இறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தாள். கொலையாளி யார் என அடையாளம் காண முடியவில்லை.அப்போது அப்பகுதியில் பெண்கள், சிறுமிகள் என நிறையப் பேர் காணாமல் போகத் தொடங்கினார். பலரும் விலைமாதுக்கள், வீட்டிலிருந்து ஓடிவந்த இளம்பெண்கள், வீடில்லாதவர்கள் என்பவர்கள்தான். 1982-84 காலகட்டத்தில்தான் நிறைய கொலைகள் நடந்தன. கிங் கன்ட்ரி போலீஸ் பிணங்களைப் பொறுக்கத்தான் முடிந்த தே தவிர கொலையாளியைப் பிடிக்க முடியவில்லை. இறந்தவர்கள் அனைவரும் 12-31 வயது கொண்டவர்கள். அனைவரும் நிர்வாணமாக இருந்தனர். சிலர் வல்லுறவு செய்யப்பட்டிருந்தனர்.
தொகுப்பு - வின்சென்ட் காபோ
நன்றி - தாட்.கோ வலைத்தளம்