அமலுக்கு வரும் சார்ஜ் கார்டுகள்! - ஜாலியாக செலவழிக்கலாம் வாங்க!
pixabay |
கிரடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை தேய்த்து சுகம் கண்டிருப்பீர்கள். டெபிட் கார்ட்டில் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை மட்டுமே பர்ச்சேஸ் செய்து அழிக்க முடியும். கிரடிட் கார்டில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக செலவழிக்கலாம். ஆனால் அதற்கும் சரியாக மாதாமாதம் பணம் கட்டவில்லையென்றால், குண்டர்கள் படை உங்களை சந்தித்து கையை காலை முறித்தாவது பணத்தை பெறுவார்கள்.
இதிலுள்ள கஷ்டம் இந்த இரண்டு கார்டுகளிலும் உள்ள குறிப்பிட்ட லிமிட்தான். எல்லை தாண்டி ஜியோவின் டேட்டா பயன்படுத்துகிறோம். காசையும் அப்படி செலவு செய்தால்தானே உங்கள் கௌரவம் உயரும். நாட்டின் பொருளாதாரமும் டிவிஎஸ் குதிரையாக மேலே பாயும். இதற்குத்தான் சார்ஜ் கார்டு எனும் புதிய அம்சத்தை கொண்டு வர கடன் அட்டை நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இதன் நோக்கம் உங்களை அதிகம் செலவு செய்ய வைப்பதுதான்.
இந்த கார்டு இன்றும் அதிக வரவு செலவு செய்கிற கடமையே கண்ணாக பணத்தை வங்கியில் கட்டி வருகிற ஆட்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறார்கள். அவர்களின் கடன் வரலாற்றை பார்த்துவிட்டுத்தான் சார்ஜ் கார்டுக்கான அப்ளிகேஷனை வங்கி கையில் எடுத்து போலிப்புன்னகையுடன் வெல்கம் சொல்லி கொடுக்கும்.
சார்ஜ் கார்டு, நீங்கள் கையில் வைத்திருக்கும் டெபிட், கிரடிட் கார்டைப் போலத்தான் செயல்படும். ஆனால் போன் கம்பெனிகள் கொடுக்கும் அன்லிமிடெட் டேட்டா போல அளவில்லாத காசு கொடுப்பார்கள். இதனை கமலா கலாசா என வாரியிறைத்து செலவு செய்யலாம். பிறகு வரும் மினி ஸ்டேட்மென்டுக்கு கரெக்டாக பில் பாசாக வேண்டும். அதுதான் ஒரே நிபந்தனை. இந்த கார்டைப் பயன்படுத்துவதற்கான ஆண்டுக் கட்டணம் அதிகம். அமெரிக்காவில் 39 ஆயிரம் ரூபாய் வரை(இந்திய மதிப்பில்) வசூலிக்கிறார்கள்.
தங்கம், பிளாட்டினம், வெள்ளி என்று பெயரிட்டு இந்த கார்டுகளை கம்பெனிகள் விற்று வருகின்றன. இவற்றில் கில்லியாக இருப்பது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம்.
நன்றி - மின்ட்