சுகாதாரத்தில் சாதனை செய்த முடிச்சூர் ஊராட்சி!













தாம்பரம் அருகேயுள்ள புறநகர்ப்பகுதி என்பதால், ஆண்டுதோறும் முடிச்சூர் நவீனமான பகுதியாக வளர்ந்துவருகிறது. இரண்டு நடுநிலைப் பள்ளிகள், மூன்று அங்கன்வாடிகள் கொண்ட 12  சதுர கி.மீ. பரப்பளவுள்ள ஊர் இது. இந்த ஊரின் முக்கியமான சிறப்பு, கழிவுகளை மேலாண்மை செய்யும் திறன்தான்.
இதற்கான சிந்தனைகளை மக்களுடன் கலந்துபேசி சாதித்தவர், முன்னாள் ஊராட்சித் தலைவரான தாமோதரன். அவரிடம் பேசினோம்.

”2006இல் நான் பஞ்சாயத்துத் தலைவரானபோது, திடக்கழிவு மேலாண்மை பற்றி மாவட்ட அளவில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். இதில் நான் ஆர்வம்காட்ட, மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் உதவினர். அப்போது, நாங்கள் மாட்டு வண்டியைப் பயன்படுத்தி வந்தோம். 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குப்பைகளை உரமாக்குவது பற்றி எங்களுக்குத் தெரியாது. குப்பைகளை வண்டிகளில் எடுத்து வந்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டி வந்தோம். மாவட்ட ஆட்சியர் எங்களது செயலால் ஏற்படும் மாசுபாடு பற்றி விளக்கினார்.

இதுபற்றிய கழிவு மேலாண்மைப் பயிற்சியையும் அளித்தனர்.
இப்பயிற்சிக்குப் பிறகு, குப்பைகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை எங்கள் ஊரில் செயற்படுத்தும் என் ஆர்வத்தை ஆட்சியரிடம் சொன்னேன். ஆட்சியர், இதில் அனுபவம் வாய்ந்த ஹேண்ட் இன் ஹேண்ட் (hand in hand) என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணிபுரியச் சொன்னார்.

மூன்று ட்ரை சைக்கிள், தளவாடப் பொருட்கள், 500 வீடுகளின் கழிவுகளைப் பிரிக்கும் மறுசுழற்சி தொழிற்சாலை ஆகியவை அரசின் உதவியால் கிடைத்தன.
நாங்கள் அனைத்து விஷயங்களையும் மக்களுடன் கலந்துபேசித்தான் செய்கிறோம். திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுத்து நாங்கள் இம்முறையில் சாதித்தோம். இதற்காக 2008இல் மத்திய அரசின் நிர்மல் கிராம புரஸ்கார் பரிசு கிடைத்தது. பரிசுத் தொகையான 3 லட்சம் ரூபாயில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் செயற்பாடுகளைச் செய்தோம்.
இப்போது திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கிறோம். இத்திட்டத்தை அடுத்த பதினைந்து ஆண்டுகளை யோசித்து உருவாக்கினோம். இதற்காக ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று, அவர்களின் மறுசுழற்சி முறைகளைப் பார்த்து வந்தோம்.” என்றார்.

படம் உதவி - யுவகிருஷ்ணா


இவர்களின் குப்பை சேகரிக்கும் முறையைப் பார்ப்போம். 
இங்குள்ள வீடுகளுக்கு பச்சை மற்றும் சிவப்பு நிற குப்பைத்தொட்டிகளை வழங்கியுள்ளனர். மக்கும், மக்காத குப்பைகளை இதில் பிரித்துப் போடவேண்டும். தினசரி காலை ஏழு மணிக்கு பசுமை நண்பர்கள் வீடுதோறும் சென்று பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர் இக்குப்பைகளை மறுசுழற்சி மையத்திற்கு, கொண்டு சென்று பிரிக்கின்றனர். மக்கும் குப்பைகளைக் கொட்டிவைத்து 45 நாட்கள் பதப்படுத்தி, அதில் மண்புழுக்களை வளர்த்து உரமாக்குகின்றனர். 

தமிழகத்திலுள்ள ஊராட்சிகளிலேயே முடிச்சூரிலுள்ள மறுசுழற்சி தொழிற்சாலைதான் அளவில் பெரியது. தினசரி 5 டன் திடக்கழிவுகளைப் பிரிக்கும் திறன் கொண்டது.

“அரசு எங்களுக்கு இருபது லட்சம் ரூபாய் கொடுத்தது. தினசரி குப்பைகளை வாங்கும் பணிக்கான செலவுக்கு மக்களை அணுகினோம். அனைவரிடமும் பேசி, ஒரு வீட்டுக்கு 30 ரூபாய் என வாங்கினோம். இங்குள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கழிவுநீர்த் தொட்டியை பேக்டிசைம் எனும் வேதிப்பொருள் கொண்டு தூய்மைப்படுத்துகிறோம்.” என்றார் தாமோதரன்.

பட உதவி - யுவகிருஷ்ணா




முடிச்சூர் ஊராட்சியின் கழிவு மேலாண்மை செயற்பாட்டைக் கேள்விப்பட்டு, பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்து இதைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

தற்போது.....

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாதபோதும், குடியிருப்போர் நலச் சங்கம் தொடங்கி, இங்குள்ள மக்களை ஒருங்கிணைத்து அடிப்படைத் தேவைகள், செயல்பாடுகள் தொய்வடையாமல் பார்த்துக்கொள்கிறார் தாமோதரன். செயல்பாடுகள் அனைத்தையும் அரசு அமைப்பின் ஆதரவுடன்தான் செய்து வருகிறார் என்பதும் முக்கியமானது. அதிகாரம் இல்லாதபோது அனைத்து செயல்களும் சரியாக நடைபெறுகிறது என்று கூறமுடியாது. அப்படித்தான் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளும் சுணங்கியுள்ளது. மண்ணையும் மக்களையும் நேசிச்சாவே எல்லா விஷயங்களையும் செய்ய முடியுங்க எனும் தாமோதரன், ஊராட்சியிலுள்ள சுவர்களில் கூட தன் பெயரை எழுத அனுமதிப்பதில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். தற்போது பெண்களுக்கான தொகுதியாக முடிச்சூர் ஊராட்சி மாற்றப்பட்டுவிட்டது.


நன்றி - தினமலர் பட்டம்

தகவல் உதவி - பேராச்சி கண்ணன், குங்குமம்

பிரபலமான இடுகைகள்