நைஜீரியாவில் பெருகும் திடக்கழிவுகள்! - பெட் பாட்டில் அபாயம்!
giphy |
பிளாஸ்டிக் பயங்கரம்!
உலகளவில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின், லாகோஸில் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆப்பிரிக்க நகரங்களில் ஒன்றான லாகோஸில், திடக்கழிவுகள் அதிகரித்து வருகின்றன. இதனை உலகளவில் ஒப்பிடும்போது, குறைவு (2016படி) என்றாலும் ஆப்பிரிக்க நகரங்களில் மோசமான கட்டமைப்பு காரணமாக கழிவுத் தேக்கத்தில் முன்னிலை பெறுகிறது.
இரண்டு கோடிப் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்டது லாகோஸ் நகரம். நைஜீரியாவில் பயன்படுத்தப்படும் 1,50,000 மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் பொருட்களில் பாதியளவு லாகோஸ் நகரில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஐந்தில் நான்கு சதவீதப் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதனால் சிறியளவிலான மழைவெள்ளத்திற்கே, நகரம் முழுக்க தத்தளிக்க தொடங்கிவிடுகிறது.
பயன்படுத்திவிட்டு வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கடைகளை அடைத்துக்கொள்வதே இதற்கு முக்கியக் காரணம். அங்குள்ள முன்னணி உணவுத்தயாரிப்பு, குளிர்பான நிறுவனங்களும் பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இத்தனைக்கும் கடந்த ஆண்டு நைஜீரியா பயன்படுத்திய பெட் பாட்டில்களின் அளவு 1 சதவீதம்தான்.
பாரிஸ், பீஜிங், டொரண்டோ, ஹைதராபாத், பெர்லின் ஆகிய நகரங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம். ஆனால், அவற்றை மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகளை இந்த நகரங்கள் வைத்திருப்பதால் பெரியளவு பாதிப்பு ஏற்படுவதில்லை. 2010ஆம்ஆண்டு பிளாஸ்டிக் கழிவு கணக்குப்படி, நைஜீரியா குறைவான அளவு பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றில் 83 சதவீத பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யாமல் குப்பையாக தேக்கி வைத்துள்ளது. 2021ஆம் ஆண்டு 3 லட்சம் மெட்ரிக் டன்களாக உயரும் என மதிப்பிட்டுள்ளது FBRB (Food and beverages recycling alliance) எனும் சூழல் அமைப்பு.
மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை (rPET) 2030க்குள் 25 முதல் 50 சதவீதம் அளவுக்குப் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அவை சாத்தியமானால் நைஜீரியாவிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவு மறுசுழற்சி செய்யப்படும் வாய்ப்பு உருவாகும். இதற்கு தடையாக இருப்பது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டி பாட்டில்களின் விலைதான். இதைவிட புதிய பிளாஸ்டிக் பாட்டில்களின் விலை குறைவு. முப்பதிற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்துள்ளன. உலகளவில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு எதிரான மனநிலை உள்ளது. ஐரோப்பிய யூனியன் 2025க்குள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயன்று வருகிறது.
தகவல்:Bloomberg
வெளியீட்டு அனுசரணை - தினமலர் பட்டம்