கடவுளின் சாபத்தால் நாட்டுக்கு தனியாக சொல்லும் மன்னன் ஒடிஸியஸ் ! ஹோமரின் ஒடிஸி - தமிழில் சிவன்

 









ஹோமரின் ஒடிஸி

தமிழில் சிவன்

சுருக்கப்பட்ட வடிவம்


மொத்த நூலின் பக்கங்களே 111 தான்.  இதாக்கா நாட்டு அரசர் ஒடிஸியஸ் ட்ரோய் போரில் பங்கேற்று வெற்றி பெறுகிறார். அந்த வெற்றிக் களிப்புடன் கடலில் வருகையில் கடவுள் ஒருவரின் மகனுடன் சண்டை போட நேரிடுகிறது. அவர் ஒரு அரக்கன், ஒடிஸியஸின் படை வீரர்கள் தக்காளி தொக்கு போல கொன்று சாப்பிட, ஒடிஸியஸ் அவனது ஒற்றைக் கண்ணை குருடாக்குகிறான். இதனால் கோபம் கொண்டு வன்மத்தோடு ஒடிஸியஸ் மற்றும் அவனது படைவீரர்கள் மீது சாபம் விடப்படுகிறது. அதாவது, அவர்கள் தங்கள் சொந்த  நாட்டை சென்று சேர மாட்டார்கள் என. இதன் அர்த்தம் சொந்த நாட்டுக்கு செல்லும் வழியிலே வீரர்கள் அழிந்துபோவார்கள் என. 

இந்த சாபத்தை சக கடவுளான ஸியூஸ் கூட மாற்றமுடியாது. ஏனெனில் சாபம் கொடுத்தது கண் குருடான பையனின் அப்பா, வேறு யாருமில்லை. ஸியூஸின் தம்பி தான். அவரும் கடவுள் என்பதால் தன் பக்தன் ஒடிஸியை காக்க தனது மகள் ஆதீனி தேவியை அனுப்பி வைக்கிறார் ஸியூஸ். 

நூல் முழுக்க ஒடிஸியஸும், ஆதீனிதேவியும் தான் நிறைந்திருக்கிறார்கள். ஒடிஸியஸ் எப்போது தடுமாறினாலும் அவனுக்கு உதவிகளை நிரம்பச்செய்து சாபத்தை தடுக்காமலும் அதேசமயம் ஒடிஸியஸ் பாதிக்கப்படாமல் இருக்க ஆதீனிதேவதை உதவுகிறாள். 

ஒருகட்டத்தில் ஒடிஸியஸின் மனைவி பெனலோப்பியா கூட அவனை நம்பாமல் இருக்கும்போது நமக்கு ஏற்படும் விரக்தி அளவில்லாதது. ஆதீனி எந்த இடத்திலும் ஒடிஸியஸை விட்டுக்கொடுப்பதில்லை. அவனை வயதாக்கி, இளமையாக்கி, பொலிவாக்கி வலிமை கொண்டவனாக்கி என ஏகப்பட்ட உதவிகளை செய்கிறாள். கதையில் தனது தீவுக்கு வருபவர்களை காட்டு விலங்காக மாற்றும் சூனியக்காரி மட்டுமே ஒடிஸியஸிற்கு அவனது உண்மையான அடையாளம் அறிந்து உதவுகிறாள். அவனோடு உடலுறவு கொள்கிறாள். மற்ற இடங்களில் எல்லாம் சண்டை, இழப்பு, வேதனை, துயரம் தான். 

இறுதிக்காட்சி முழுக்க ரத்தம்தான். தன் மனைவியை அபகரிக்க நினைத்தவர்கள் அனைவரையும் ஒடிஸியஸும் மகன் டெலமாக்கசும் சேர்ந்து நெஞ்சை பிளந்து, தலையை வெட்டி கொல்கிறார்கள். மொத்த குழுவையும் அறைக்குள் அடைத்து வேட்டையாடி கொல்லும் காட்சி வாசிக்கும்போதே பீதியூட்டுகிறது. 

நம்பிக்கையை, விசுவாசத்தை வலியுறுத்திப் பேசுகிற படைப்பாக நாவல் நிறைவடைகிறது. இது ஹோமரின் ஒடிஸியின் சுருக்கப்படைப்புதான். 

சிவன் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். 





  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்