களமாடுவோமா தோழா

              

                                                  களமாடுவோமா தோழா




  லோகத்தின்ட தோஸ்த் வெளியிடுகின்ற லோகம் புத்தகம் முழுக்க அறிவியல் தகவல்களால் நிரம்பி வழிகிறது. ஒரு பக்கம் கூட படிக்கமுடியவில்லை. ஆனால் முக்கியமான சூழல் குறித்த விழிப்புணர்வு புத்தகம்தான். என்னால் ஒரு பத்தி கூட வாசிக்க முடியவில்லை. எப்படியோ உணவுத்திருவிழா என்று நடத்தி சோறு போட்டு புத்தகத்தை வாசிக்கச் சொல்லுகிறார்கள். நிறைய பேசுகிறார்கள். நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார்கள். ஞாயிறன்று ஒரு கூட்டம் போட்டு அந்நாளை வெற்றிகரமாக பொழுதுபோக்கு ஆக்குகிறார்கள். களப்பணி என்றால் காணாமல் போகும் ஆட்கள் இவர்கள். செய்பவர்கள் என்ன சொல்லிக்கொண்டா இருக்கிறார்கள்?  எல்லாமே அடையாளம் குறித்த சிக்கல்தான் என்று வடிவமைப்பாளர் கூறினார். எல்லாவற்றையும் ஒற்றைப்புள்ளியில் குவித்துவிடுவார் அந்த நண்பர். அவரின் தீர்மானங்கள் என்னைப்பொறுத்த வரையில் பெரிதாக தோற்றுப்போனதில்லை. வயிற்றுக்கு சோறு முதலில் வேண்டும். லட்சியத்தை காய்ந்த வயிற்றுடன் அடைய முடியாது என்பது அவர் என்னுடனான உரையாடலில் எப்போதும் கூறும் அருள்வாக்கு. அதை நான் உண்மையில் உணர்ந்தேயிருக்கிறேன்.  

              வாழ்வனுபவம் தரும் புத்தகங்கள் என்றால் சமாளிக்கலாம். தகவல்களால் நிரம்பி வழியும் புத்தகங்கள் எனக்கு மூளையில் கடும் சோர்வை வரவழைக்கின்றன. அதுவும் ஒரட்டாங்கை என்றால் ஐயய்யோ.. பின்னங்கால் தலைக்கு மேல் போக கீழிறக்காமல் ஒற்றைக்காலிலேயே ஓட்டம் எடுத்துவிடுவேன். அன்பரசு கூறிய கதைதான் இதற்கு காரணம். முற்போக்கு போலிகள். கிறுக்குத்தனம் அதிகம். எளியமக்களுக்கு எதுவும் புரியக்கூடாது என்பார்கள். மார்க்ஸ் புத்தகம்  ஏறத்தாழ பகவத்கீதை போல பாவிக்கப்படுகிறது. ஐந்து நிமிடம் பேசினால் அன்று நாள் பூரா தலை விண்ணென்று தெறிக்கும். அப்போது நீங்கள் எது சிறந்த தலைவலி மருந்து என்பதை தீர்மானிக்க முடியும். தலைவலி விளம்பரத்திற்கு கூட ஒரட்டாங்கை இயக்க துண்டறிக்கை போதும். இமாமி, அமிர்தாஞ்சன், ஜண்டுபாம் எது சரியானது என முடிவுக்கு வந்துவிடலாம்.

கருத்துகள்