திசை தேடி....

                                                                திசை தேடி....





                  நகரத்தைப் பொறுத்தவரையில் திசை மிகவும் முக்கியம் என்று கூறலாம்.  அண்ணாநகர் மேற்கு என்றால் அங்கிருந்து மெயின் ரோட்டில் இருந்து பல சாலைகள் இடையறாது நூலகம் வரையில் பிரிந்து பிரிந்து ஒன்று சேரும். கிராமங்களில் உள்ள போக்குவரத்து சாலைகள் போன்றதல்ல இவை. நகரத்தில் பேருந்துகள் போக ஒரு வழி, திரும்பி வர ஒரு வழி. இவை ஏதோ ஒரு இடத்தில் ஒரு பொதுவான சந்திப்பில் சந்தித்துக்கொள்ளும். ஆனால் புதிதாக நகரத்திற்கு இடம்பெயர்ந்து வரும் ஒருவனுக்கு இவை பெரும் திகைப்பை அளிக்கும். அதாவது எனக்கு அளித்தது. அடிக்கடி தொலைந்துபோவதுதான் எனது வாடிக்கை. மிகத்துல்லியமாக தவறான வழியில் சென்று நூடுல்ஸ் அல்லது பாஸ்தா போன்றிருக்கிற மூளையை மேலும் நொச நொச வென முறுக்கிக்கொள்வேன். முதலில் மயிலாப்பூரில் வந்தபோது, வெஸ்டர்ன் டாய்லெட் போக ஒருவார பயிற்சியை எனது உடன்பிறப்பு அளித்தார். அப்படியிருந்தும் அதில் அமர்ந்து மலம் கழிப்பது என்பது பிராண சங்கடமாகவே இருந்தது. உட்கார்ந்தவாக்கில் மலம் கழிப்பது என்பது எப்படி பழகுவது என்று என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அடுத்ததாக எப்படி பட்டய படிப்பிற்கான கல்லூரியை அடைவது என்பது. 

           என்னைப் பொறுத்தவரையில் ஒருவழி என்பது போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கான உத்தியாக இருக்கலாம். அதற்கு பேருந்தில் பயணிப்பதை விட நடந்து செல்வது அதைவிட பணம், நேரம் ஆகியவற்றை மிச்சப்படுத்தும் என்று முடிவுக்கு வந்தேன். முதலில் நேரே பஜார் தெருவில் மேலிருந்து எறியும் குப்பை குண்டுகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்று அமேஸ் அருண் எனக்கு இருவார பயிற்சியளித்த பின் தெருவில் இறங்கி, பிரேக் பிடித்து முட்டுச்சந்தில் இன்னோவா காரை ஓட்டும் முரட்டு சல்மான் கதாபாத்திரங்களிடமிருந்து தப்பி, பெருகி ஓடும் பாதாளச்சாக்கடை நீரில் பாதசுத்தி செய்துகொண்டு பஜார் தெருவை விட்டு கிளம்புவேன். அங்கிருக்கும் சிறிய சாலை சந்திப்பை கடப்பது இருக்கிறதே. அங்குதான் எஃப் 1 ரேஸ்  பயிற்சி நடக்கிறதோ என்று தோன்றுமளவு வண்டியை ஓட்டுவார்கள். அங்குதான் முக்கியமான திருமண மண்டபங்கள், அடிக்கடி பல பொருட்கள் எப்படி இருக்கிறது என்று சர்வே எடுக்கும் நிகழ்வெல்லாம் நடக்கும். முக்கியமான சந்தை வேறு அருகில் உள்ளது. நேரே நடந்தால் அம்சா மொத்த விலைக்கடை தாண்டி மாதவப்பெருமாள் நம்மைப் பார்த்து புன்னகைப்பார். அவரைக் கடந்தால் வருவது பாலகுமாரன் கங்கை கொண்ட சோழன்  நாவலில் வரும் முண்டகக் கண்ணியம்மன் கோயில் இடது புறம் இருக்கும். இது சேரிப்பகுதி. இப்போது அங்கு லோக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்துவிட்டது. அதைத்தாண்டினால் காய்கறி மார்கெட்தான் இதுவும். கலைமகள் பத்திரிக்கை, சமஸ்கிருதக்கல்லூரி  நிறுவனம் கொண்ட வலப்புறத்தை தாண்டி இடப்புறம் செல்லவேண்டும். இருபுறமும் வண்டிகள் வரும் அதன் வேகத்தைத் தாண்டி உங்கள் உடல் வேகம் இருந்தால் சந்திப்பை வெற்றிகரமாக சடன் பிரேக் இல்லாமல் முன் வைத்த காலை பின் வைக்காமல் கடக்கலாம். 

                    முதலில் நான் 29சியில் ஏறி உட்லண்ஸ் இறங்கி மௌபரீஸ் சாலையில் நடந்து ஹெரிடேஜ் அங்காடி, ஆர்ட் கேலரி தாண்டி சென்று கல்லூரி அடைவேன். கல்லூரி ஐபிஎம் நிறுவனத்திற்கு எதிரே இருந்தது. ஏன் நாம் இவ்வளவு தூரம் அலைந்து இப்படி வரவேண்டும் என்று தோன்றியது. பின் மெல்ல தவறான பாதைகளில் நுழைந்து வெளிவரத்துவங்கினேன். கல்லூரி முடிந்த நேரங்களில் இந்த பரிசோதனை முயற்சிகள் தொடங்கும். சிஐடி காலனி வழியே வருவதே எளிதான அதிக வியர்வை வராமல் நடந்து வர சிறந்த வழி என்று கண்டறிந்தேன். இங்குதான் மிக முக்கியமான பெரிய வஸ்தாதுகள் வீடு இருக்கிறது என்று பெரும் டி.வி நிறுவனங்களின் வண்டிகள் ஒருநாள் குழுமி இருக்கும் போது அறிந்தேன். மஞ்சள்துண்டுக்காரரின் இரண்டாவது மனைவியின் வீடு அங்குதான் இருந்தது. பிளே ஸ்கூல், பதிப்பகம், காய்கறிக்கடை என்று அந்த இடமே கார்கள் மட்டும் வந்து போகும் இடமாக இருந்தது. மரங்கள் சூழ்ந்த சாலை பெரும் ஆசுவாசம். பேருந்து பயணம் நின்று போக காரணம்  பேருந்தின் அளவில்லாத நெரிசலும், அவ்வளவு சிரமப்பட்டு ஏறினாலும், கொடுக்கும் காசுக்கு பயணிக்கும் தூரம் மிகவும் குறைவு. அதுவும் வ ருவதெல்லாம்  பெரும்பாலும் டீலக்ஸ் பேருந்துகள்தான். என்ன செய்வது? அந்த நேரத்தில் தந்தை அளிக்கின்ற மானிய உதவிகளை உணவிற்காக செலவிடுவதே சரியானது என்று பட்டது. அவர்களை வருத்தக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் எனக்குத் தெரியும் அவர்கள் ரேஷன் பருப்பை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள் என்று. சகோதரரோ இரவில் பணிபுரிந்து பகலில் தூங்கி மீண்டும் இரவு எழுந்து வேலைக்குச் செல்பவர். சம்பளம் ஏழாயிரத்திற்கும், ஒன்பதாயிரத்திற்கும் இடையில் தவித்தது. என்ன சொல்வது? 

                 நான் எங்கு கிளம்பினாலும் தனியே பல சோதனைகளைச் செய்ய முயற்சிக்கத்தொடங்கினேன். இதற்கு ஆங்காங்கே நமது சமுதாயத்தொண்டாற்றும் தலைவர்கள் நிறுத்திய தங்கள் ஆட்சியின் அடையாளமான சிலைகள் பெரிதும் நான் தொலைந்துபோகாமல் சரியான பாதையில் செல்ல உதவின. ஜெமினி என்றால் ஒருவர் குதிரை பிடித்து நிறுத்தும் சிலை, காலேஜ் ரோடு என்றால் பொய்க்கால் குதிரை, நல்லாயன் பள்ளி, ராதாகிருஷ்ணன் சாலை என்றால் சோழா ஹோட்டல், ஏவிஎம் மண்டபம், சென்ட்ரல் என்றால் புதிய பன்னோக்கு மருத்துவமனை என  இதுபோல பலவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ளத் துவங்கினேன்.

                          முகவரி இடம் கேட்க வேண்டுமென்றால்  ஆட்டோக்கார அண்ணன்களிடம் தயக்கமில்லாமல் கேட்கலாம். பாதசாரிகளைக் கேட்பதில் பாதகம் இருக்கிறது. அவரும் புதிதாக இருக்கலாம். அவர் அறியாதும் இருக்கலாம். இன்னொன்று இது நகரம். யாரும் இரண்டு கேள்விக்கு பதிலளிக்கமாட்டார்கள். ஒருவரிடம் ஒரு கேள்விதான். இன்னொன்று விடாமுயற்சி, தயங்காத அலைச்சல் இவைதான் உங்களுக்கு பல இடங்களை அடையாளம் கண்டறிய உதவும். 

                                 முகவரியில் முதலில் தேடுவது எந்த இடம் புதுப்பேட்டை அல்லது கோட்டூர்புரம் என்றால் அந்த இடத்தை முதலில் நீங்கள் அடையவேண்டும். பின்னர் அதிலிருந்து மேலாகப் பார்த்து தேடவேண்டும். என்ன சாலை, என்ன தெரு,  எந்த பிளாட்ஸ், என்ன கதவிலக்கம். இந்த முறைகளை கடைபிடித்தால் நீங்கள் சரியான இடத்தை முதலில் சிரமப்பட்டாலும் எளிதில் அடைந்துவிடலாம். இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, ஒரு புதிராக அதன் விடை தேடுவதாக விளையாட்டாக நினைத்து கண்டுபிடியுங்கள். நாம் முயலுக்கு எத்தனை முறை கேரட்டை அடையாளம் கண்டுபிடித்துக்கொடுத்து தின்னக்கொடுத்திருப்போம்.  அப்படித்தான். திசையறிவது ஆதி மனிதனின் சிறப்பான தன்மையாக இருந்தது. இன்று நாம் யாரிடமும் வழிகேட்பதில்லை. கூகுள் மேப்பில் தேடுகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி. தவறில்லை. சில தொலைபேசி எண்கள்,  நேற்று சாப்பிட்ட உணவு, சந்தித்தவரின் பெயர் என்பது முக்கியமற்றதாக தோன்றலாம். ஆனால் இவை முக்கியமானது என்று ஒரு கட்டத்தில் நீங்கள் உணருவீர்கள். தற்சார்பாக இருக்க பழகுவது நமக்கு என்றும் நல்லது. திசைக்கு கூகுளை நம்புவது சரி. ஆனால் அந்த கூகுளை யும் மனிதனின் மூளைதான் உருவாக்கியது என்பதை மறக்காமலிருந்தால் சரி.  

கருத்துகள்