இந்தியர்களை இணைப்பது எது?

                                         இந்தியர்களை இணைப்பது எது?




          தேசியகீதம் என்கிறீர்களா? கிடையவே கிடையாது. உணவு  நிச்சயம் இல்லை. வேறென்ன? சினிமாதான். நான் தங்கியிருக்கும் அறையில் முதல் நாள் யாரும் என்னிடம் பேசவே இல்லை. சில விவரங்களை கேட்டார்கள் அந்த மூத்த அறைவாசிகள். என்ன வேலை? சம்பளம்? வேலையின் பெயர்? இதுபோன்றவை. அதில் ஒருவரின் பெயர் பதுமன் என்பதே நான் அவரிடம் தெலுங்கு படங்கள் தொடர்பான சில விஷயங்களை பேசியபின்னே அவர் முகம் மலர்ந்து தன் பெயரைக்கூறும் போதுதான் அறிந்துகொண்டேன். அதன் பிறகு அவர் தவிர்த்த மற்ற அறைவாசிகளிடம் நான் அதிகம் பேசுவது கிடையாது. அவர்களைப் பார்த்தால் கடப்பா ராஜூ உணர்ச்சிதான் மனதில் எழுகிறது. தவிர்க்கமுடியவில்லை. 

           ஒருவர் நல்ல யூரியா உரமூட்டை மாதிரி இருப்பார். அவர்  பெயர் தெரியவில்லை. ஆனால் படிக்கும் நேரம் தவிரத்து மூஞ்சியில் ஒரு க்ரீம் பூசுவார். ஆம்பாடுகளில் (தொடை இடுக்குகளில்) ஒரு க்ரீம் பூசுவார். ஒரு நாளாவது இந்த இரண்டும் மாற வாய்ப்பிருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வந்தது. நாமதான் ஏறுக்குமாறா ஏதாவது பண்ணி கோமாளித்தனம் பண்ணுவமே? பதுமன் காலையில் நாளை துவங்குவதே எஸ்.எஸ். தமனின் வெடிக்கும் பீட்டில் தொடங்கும் ரேஸ்குர்ரம் படத்தின் தொடக்கப்பாடலிலிருந்துதான். முதல் நாள் விருக்கென்று பயந்து எழுந்தே விட்டேன். பின்னே வானத்தில் வேட்டு போட்டது மாதிரி முழு ஒலி அளவில் திடீரென பாடல் ஒலித்தால். அதான் பாங்கு கூட மசூதியில் ஓதுகிறார்கள். அதை விட ஒருவனுக்கு காலையில் அலாரம் அவசியமா? நான் இதை அவரிடம் கூறவா முடியும்? நாம் நாட்டினரே பயங்கர சவுண்டு பார்ட்டிகள். இதன் பின்னரே சமாதான உடன்படிக்கையாக அல்லு அர்ஜூன் பேனுங்களா நீங்க? என்றேன். அவருக்கு தெலுங்கு தெரியும், எனக்கு தமிழ் தெரியும். அவருக்கு ஆங்கிலம் நன்றாக பேச வரும். எனக்கோ இட்லி உப்புமா போல்தான் ஆங்கிலம் சில இடத்தில் சுமார், சில இடத்தில் படுமோசம். பவன் கல்யாணின் ரசிகராம் அவர். அவரைப்பற்றி பேசத்தொடங்கியபின்தான் அவருக்கு முகத்தில் மலர்ச்சியே வந்தது. தினகரனின் வெள்ளிமலர்தான் கே.என். சிவராமன் எழுதும் எழுத்துக்கள்தான் இதற்கு முக்கியமான காரணம். அவரில்லையென்றால் இந்த நட்பும் சாத்தியமில்லை. இன்று ரன் ராஜா ரன் படத்தின் புஜ்ஜிமா பாடலை பாடிக்கொண்டே தேர்வு முடித்து ஊருக்கு கிளம்பிவிட்டார் பதுமன்.  ஆனால் நேற்றிரவு அவரது தோழன் பீஃப் பிரியாணி நின்ற நெஞ்சழுத்தத்தில்  உறுமுகிறான், கத்துகிறான், சில சமயம் கனவில் இருக்கிறோமா, இல்லை விழிப்புடன்தான் இருக்கிறோமா என்று தெரியவில்லை. எத்தனை கதாபாத்திரங்கள் நம் வாழ்க்கையில் எல்லோருக்குமே இரண்டு ரோல்களா என்ன ? எண்ணற்ற ரோல்கள். களைப்படையச்செய்கிறார்களே ஏசப்பா! ஆனால் இதற்கு பழிவாங்கும் விதமாகவெல்லாம்  நிச்சயம் பாலகிருஷ்ணாவை பற்றி மட்டும்  பேசவே கூடாது என்று உறுதியாக முடிவெடுத்துவிட்டேன். ஏனென்றால் நாம் ஹெரிடேஜ் தமிழர்களல்லவா? ஆனால் ஹெரிடேஜ் குழும அங்காடிகள் சந்திரபாபு நாயுடுவினுடையது என்பதையெல்லாம் நீங்கள் சிந்திக்க கூடாது. அதிக சிந்தனை தேச விரோதம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்