எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்

                                                எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்









                பல்க்மான் எனும் நடிகர் சாலையோரத்தில் காரை ஓட்டி நடைபாதையில் படுத்திருந்த ஒருவர் இறந்துவிட்டார். ஒருவருக்கு கால் போய்விட்டது. மற்ற நான்கு பேருக்கு கடுமையான காயம். இது குறித்து பலரும் பலவிதமான பேசுகிறார்கள். பல்க்மானின் நண்பர்கள் அவருக்கு கண்ணீர் சிந்தி ஆதரவு தெரிவிக்கிறார்கள். பலர் ஏழை மனிதர்களின் பக்கம் நின்று செய்தித்தாளில் பல பக்கம் எழுதுகிறார்கள். நான் கேட்கிறேன். பல்க்மான்தான் காரை வேகமாக ஓட்டினார். அது ஒருவரின் மேல் ஏறி அவர் இறந்துவிட்டார். அதற்காக அவரை எப்படி நீங்கள் சிறையில் அடைக்க முடியும்? அவர் ஒரு கதாநாயகன் சினிமாவில் மட்டுமல்ல. நிஜத்திலும். பீயிங் ஹியுமன் எனும் நிறுவனத்தை நடத்தி பலருக்கு உதவிகள் செய்கிறார். ஓவியங்கள் வரைந்து விற்கிறார். இவருக்கு பல அரசியல்வாதிகள் தெரியும், அவர்களின் ஏகோபித்த அன்பு உண்டு. பிற்காலத்தில் தாமரைக்கட்சியில் சேர்ந்து எம்.பி கூட ஆகலாம்.  ஆனால் இறந்த மனிதர் யார்? அவருக்கு அடுத்தவேளை சாப்பிட சட்டைப்பையில் காசிருந்ததா? வானத்தை கூரையாக நினைத்து படுத்திருக்கும் பரதேசி ஒருவனுக்காக நீதிமன்றம் பலகோடி மக்களின் இதயம் கவர்ந்த நாயகனை வழக்குமன்றத்திற்கு இழுத்து தண்டனை விதிக்கலாமா? என்ன தைரியம்? பாதுகாப்பிற்கு கூட வந்த போலீஸ்காரர் தான் கண்ட உண்மையைக் கூறினார். அதற்காக அந்த உண்மையை ஏற்றுக்கொண்டுவிடலாமா? அவனது சாதி என்ன? அவனது தராதரம் என்ன? அவன் இறுதியில் எந்த செட்டில்மென்ட்டுக்கும் மயங்காது இருந்தான். காசநோயால் பரிதாபமாக செத்தான். அது உண்மையை நேர்மையை வெல்லும் என்று நினைப்பவனுக்கு ஏற்படும் கதிதான். அதற்காக நாம் என்ன செய்யமுடியும். ஏழை ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர் லேண்ட் குரூஸர் காரில் அடிபட்டு இறந்தார். அதுவும் உலகமே புகழும் பல்க்மான் எனும் நடிகரின் கைகளினால். இதெல்லாம் சாதாரண இந்தியர் ஒருவ ருக்கு கிடைக்கும் பாக்கியமா என்ன? சொல்லுங்கள். அவருக்கு உடனே பிணை கிடைத்துவிட்டது என்று பலரும் கூச்சல் போடுகிறார்கள். இது இந்தியாவில் முதல் தடவையா என்ன? கீழ்வெண்மணியில் தலித்துகள் பலர் கூலி உயர்த்திக் கேட்டதற்காக கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு பிணை கிடைக்கவில்லையா என்ன? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதென்ன அரபு நாடா?  தவறு செய்தவர்களை உடனே கல்லால் அடித்துக்கொல்ல அல்லது கசையடி வழங்க. ஐயா, இது ஜனநாயக நாடு. புரிந்துகொள்ளுங்கள். சட்டங்களை அம்பேத்கர் எழுதினார். அதோ அவை அலமாரியில் பத்திரமாக இருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாளில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தைக் கூட நீக்கிவிடுவார்கள். ஏன் என்றா கேட்கிறீர்கள்? இந்தியா ஒரு அமைதிப்பூங்கா. இங்குதான் எதுவுமே தவறுகள் எதுவும் நிகழவில்லையே! நடிகருக்கு மற்ற நடிகர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? அவர்கள் திரையில் ஒரு குழு சிந்தித்து எழுதும் வசனங்களை ரோஸ் பவுடரோடு தோன்றி அதை ஒப்பிப்பவர்கள். அவர்கள் ஒன்றும் சிந்தனையாளர்களோ, செயல்பாட்டுவாதிகளோ கிடையாது. அது அவர்கள் தொழில். அப்படித்தான் அவர்களை நினைக்கிறீர்களா? வால்மார்ட்டை வியாபாரிகள் சங்கம் ஒன்று திரண்டு எதிர்க்கவில்லையா? அதுபோல அவர்கள் நாங்கள் சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர்கள். வழிபடவேண்டிய பீடத்தில் இருப்பவர்கள் எங்களை எப்படி சாதாரண சிறு பிரச்சனைக்கு தண்டணை வழங்கும் எல்லை வரை கொண்டு போகிறீர்கள் என்று ஆத்திரப்படுகிறார்கள். கண்ணீர் மல்குகிறார்கள். இன்று பல்க்மான் அறியாது செய்த செயலுக்கு தண்டனை. நாளை நமக்கு என்று கருதியிருக்கலாம். அவரவர்க்கான லாபங்கள் அவரவர்க்கு.... நீதிமன்றமும் அப்படித்தான். அவர்களுக்கும் பங்கு வேண்டாமா? எல்லாமே தொழில்தானே ஐயா...  பட்டினியால் எத்தனையோ பேர் சாகிறார்கள். அதில் ஒருவர் விலைமதிப்புள்ள காரில் அடிபட்டு செத்துப்போனார். அவரின் அவல வாழ்விலிருந்து பல்க்மான் அவருக்கு விமோசனத்தை வழங்கியிருக்கிறார். இந்தியாவில் வாழ்வதுதான் கடினம். சாவது கடினமா என்ன? உண்மையில் நடைபாதையில் படுத்திருக்க காரணம் என்ன என்று நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது. அது ஜனநாயகவிரோத கலகம். அப்புறம் நீங்கள்தான் அடுத்த விசாரணைக்கைதி. ஏழை மக்கள் குறைந்த விலைக்கு கறியெல்லாம் சாப்பிடக்கூடாது. சைவ உணவு அவர்களை ஆன்மிக உச்சத்திற்கு கொண்டு செல்லும். எனவே அரசு நல்ல பாதைக்கு வழிகாட்டும். மக்கள் அதனை மறுபேச்சில்லாமல் பின்தொடரவேண்டும். அறம் என்கிறீர்களா.. அது கிடக்கிறது கழுதை.. அவரவர் நியாயம்.. அவரவர் தர்மம்... இது இந்தியா. என்னவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். எதுவேண்டுமானாலும் செய்யுங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
நன்றி: சான்டாபான்டா இணையதளம்.

கருத்துகள்