சில்லறை முறிப்பது எனும் கலை

                                                         சில்லறை முறிப்பது எனும் கலை
















                 நகரத்தில் சில்லறை முறிப்பது ஒரு கலை. உங்களுக்கு இதில் பல வாய்ப்புகள் உள்ளன. சரக்கு வாங்குவீர்களோ இல்லையோ சில்லறைக்காக நான பல டாஸ்மாக் கடைகளை நாடி ஓடியிருக்கிறேன். ஊரில் சென்னை வருவதற்கு சில்லறை முறிப்பதற்காக மூன்று கடைகளை அடைந்து சில்லறை இரண்டில் இல்லை பிறகு ஒரு கடையில் கிடைத்தது. அந்தக்கடை எக்ஸ்ட்ரீம் புரட்சியாளரை எப்போதும் சந்தித்து பேசும் கடை என்றால் நீங்கள் எதுவும் நினைத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே?

               சென்னைப் பேருந்துகளில் நடத்துநர்களிடம் நம் உள்ளூர்கள் போலில்லாது விரைவில் சில்லறை கிடைக்கிறது. ஆனால் இதெல்லாம் மடமடப்பான நோட்டுகளுக்குத்தான். ஆனால் ஒரு ரூபாய் சில்லறைக்கு என்ன செய்வீர்கள்? வேறு வழியே இல்லை. தேநீர்  பிடிக்கிறதோ இல்லையோ ஒன்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கும் கடைக்குப்போய் அக்கம்பக்கம் பார்த்து தேநீரை கவனமாக உள்ளிறக்க முயலத்தான் வேண்டும். சில வேளைகளில் வெந்நீர் மலச்சிக்கலுக்கு நல்லது என்று இயற்கை மருத்துவம் நூலில் தமிழ்வாணன் கூறியிருக்கிறார். அப்படி நினைத்துக்கொள்ளுங்களேன். மற்றபடி எனக்கு இது வேண்டாம் என்று தோன்றினாலும் நான் தேநீர் அருந்துகிறேன். நிலைமை அப்படி. தியானப்பயிற்சியாக கூட இதனை நான் முயற்சிக்கலாம் என்றிருக்கிறேன். சூடாக மட்டும் இல்லை என்றால் அந்த தேநீர் துவர்ப்பை சத்தியமாக நிச்சயமாக அருந்தவே முடியாது.

                 1000 ரூபாய் என்றால் தயங்காமல் நீங்கள் டாஸ்மாக்தான் வழி கண்டுபிடித்தேனும் செல்லவேண்டும். 500 ரூபாய் என்றால் கடைசி நிறுத்தம் வரையில் பயணித்து நடத்துநரிடம் வாங்கிக்கொள்ளலாம்( இது நீங்கள் செல்லும் அறை, வீடு இருக்குமிடம் பொறுத்து மாறுபடலாம்) . கிடைத்த சில்லறையிலும் சில்லறை வேண்டுமெனில் புத்தகக்கடை செல்லலாம். குமுதம், சினிக்கூத்து, டைம்பாஸ் போன்ற பார்க்க மட்டும் செய்ய உதவும் சஞ்சிகைகளை வாங்கி சில்லறைகளை பெருக்கமுடியும். ஆனால் மொத்தத்தில் சில்லறை எப்போதுமே சென்னையில் தேவை. சில்லறை இல்லாதது எனக்குள் பெரும் பதட்டத்தை,  வயிற்றில் பெரும் அமில இரைச்சலை ஏற்படுத்தி கடும் மலக்கழிச்சலைக்கூட ஏற்படுத்தி விடுகிறது. சில்லறை விஷயங்களே இப்படித்தான் தோழர்களே நம்மை இடையறாது சிரமப்படுத்தி சிக்கலில் மாட்டிவிடும். இதை நீங்கள் விழிப்புணர்வு என்றும் கொள்ளலாம்.  அதனால்தான் நான் எப்போதும் ஊருக்கு திரும்பிவிடும் உத்தேச ரயில் பயணச்சீட்டு கட்டணத்தை பையில் வைத்துக்கொண்டே அதை செலவழிக்காமல் அலைந்து திரிகிறேன். 

கருத்துகள்