ஐஸ் ஹவுஸ் குறிப்புகள்

                       

                              ஐஸ்ஹவுஸ் குறிப்புகள்

                                                                                           வின்சென்ட் காபோ

                                                                                    


   இதோ நானும் மாநகரத்திற்கு வந்துவிட்டேன்.
   இங்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் அலுவலகம், அல்லது தங்கியிருக்கும் மேன்ஷன் வருவதற்கு டோனிஜா வைவிடவும் பல தாண்டுதல்கள், சில குயுக்தியான வேகநடை, பாய்ச்சல்கள், சாக்கடைத் தாண்டல்கள், மயிர்க்கூச்செறியும் விலகல்கள் ஆகியவை இங்கு வாழ அவசியம் தேவைப்படுகின்றன.

                                                          2
  தினந்தோறும் இஸ்லாமியர்கள் பிரியாணியை வறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கறியின் வாடை குறையவே குறையாத ஏரியா ஐஸ்ஹவுஸ் என்று கூறலாம். பார்த்தசாரதியை தினமும் பார்க்கிறேனோ இல்லையோ, பிரியாணியை தினமும் காலையில், மாலையில் தரிசிக்காமல் வீடு திரும்புவதும் இல்லை. அலுவலகம் செல்வதும் இல்லை.

                                                            3
சிறுபத்திரிகையில் வேலை செய்வது என்பது காஞ்சனா போன்ற திகில் சினிமாவைவிடவும் மயிர் பிளக்கும் திருப்பங்கள், திகில், பயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. சம்பளம் தருவார்களா என்பதே மனம் முழுக்க நிரம்பியிருக்கும் பெரும் கேள்வி.  பல போலி லட்சியவாதங்கள், முடிவுறாத இன்செப்ஷன் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு நான் பட்ட பாடுகளை விரைவில் வெளிவரும் மனதேசப்பாடல் நூலில் வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

                                                               4
            நாம் எளிதாக பல மரக்கன்றுகளை நட்டுவைத்து வளர்க்கமுடியும் என்று வடிவமைப்பாளர் கூறினார். இதோ நானும் என்னோடு இருவிதைகளைக் கொண்டே சென்றுகொண்டிருக்கிறேன். விதைக்க இப்போது காலமில்லை. நேற்று அறை திரும்ப குளக்கரை சாலையில் சென்று கொண்டிருக்க ஒருவர் கைபேசியில் பேசியவாறே கையை மிக வேகமான வீச்சில் என் இடுப்பில் கொண்டுவரும்போது இதோ வந்துட்டிருக்கேன்டா செல்லம் என்ற வார்த்தை என் காதில் கேட்டது. சிறிது வேகமாக விலக வில்லை என்றாலும், நடால் டென்னிஸ் மட்டையில் சிக்கிய பந்தாய் விதைகள் அடிபட்டு சிதறியிருக்கும். எதுக்கு சார் முட்டை வீச்சு மாதிரி அப்படி ஒரு கைவீச்சு??
       




கருத்துகள்