எழுதுபவரும், வாசகரும்

                                                       எழுதுபவரும், வாசகரும்






இந்த இருவருக்குமான நேயமே சிறிது சிக்கலான ஒன்றுதான். வாசகரைப்பொறுத்தவரை அவர் தன் மனக்கண்ணில் எழுத்தினைப் பொறுத்து எழுத்தாளரை ஒரு மனதாக முடிவு செய்து வைத்திருப்பார். ஆனால் ஓரிடத்தில் வாசகர் சந்திப்பில் எழுத்தாளரை சந்திக்கும்போது அவர் மனதில் நினைத்ததற்கு மாறாகவே இருக்கும் அவரது உடல், குரல், கருத்தினைப் பகிரும் தன்மை. இதனாலேயே பெரும்பாலும் எழுத்தாளரும், வாசகரும் சந்திப்பதென்பது அவ்வளவு விரும்பத்தக்கதாக இருந்ததில்லை. அப்படி சந்திக்க வேண்டும் என்றால் எழுத்தாளரின் எழுத்தில் அவர் அடைந்த உணர்ந்து எழுதிய தன்மையை நாம் சிறிதேனும் தொட முயற்சித்திருந்தால் அதைப் புரிந்திருந்தால் சிறப்பானதாக இருக்கும். ஆனால் நம் சூழ்நிலையில் என்ன நிகழ்கிறது? பழனி முருகனுக்கு காவடி தூக்குவது போல எழுத்திற்கு காவடி தூக்குவது. இல்லையா? தூக்கி ஓரமாய் இறக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவது. எனது சகோதரரின் நண்பர் ஒருவர் வெகுஜன பத்திரிகை ஒன்றில் பயணக்கட்டுரை ஒன்றினை மனிதர்களின் அனுபவங்களோடு எழுதியிருந்த  ஒரு எழுத்தாளரை புத்தகத்திருவிழாவில் சந்தித்துவிட்டு விரக்தியோடு வந்து சொன்னார். ''என்னடா, அந்தாளு நா நெனச்ச மாரி இல்ல. பாராட்டுன ஒடனே கெக்கே பிக்கே னு அடக்கமுடியாத சிரிப்பு நா வந்துட்டேன்'' என்றார். நாம் ஒரு மனிதரை உருவாக்க முடியுமா? நம் மனமே நாம் கூறுவதை கேட்பதில்லை. நாம் ஒரு மனிதரை இயக்க விரும்புகிறோம் என்றுதான் நினைக்கிறேன். இவர் இந்த தலைப்பில் எழுதுகிறார். அதுவும் இடதுவேறு. அப்படியென்றால் சாப்பிடுவதற்கு கஷ்டப்படுவார். கசங்கிய உடை உடுத்தியிருப்பார். இந்தியப்பொருட்களையே பயன்படுத்துவார். இதுபோன்ற தன்மைகளை வாசகர்கள் தங்கள் மனதினுள் ஏற்படுத்திக்கொள்வார்கள் போல. இதனால்தான் இங்கு போலித்தனமான பல மூகமூடிகள் நன்றாக விலைபோகின்றன. ஆதரிக்கும் கொள்கைப்படி வாழ்வது பிரச்சனையில்லை. ஆனால் உடையினை நாம் உழைத்துப்பெறும் பணத்திற்கு ஏற்ப அணிவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்? பொதுவாழ்வில் எளிமை அவசியம்தான். ஆனால் வாசகர்கள் ஒரு எழுத்தாளரை மண்பானை போல தங்கள் மனதிற்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்திற்கு ஏற்ப அடைத்துப் பார்த்தால் அது எப்படி சரியாக வரும்?  

                       இன்னொன்று திரையுலக இயக்குநர்கள் கூட்டமொன்று இருக்கிறது. இவர்களுக்கு பிரச்சனையே எழுதுகிறவர்கள் நிச்சயம் சராசரிதான் என்று அவர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே புரிய வைப்பதுதான் இவர்களது வேலை தாண்டிய திட்டம் . ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த எழுத்தாளர் எழுதிய நூல்களைப் படித்துவிடமாட்டார்கள். அவர்கள் வழிபடும் எழுத்தாளர் தவிர பிற எழுத்தாளர்களை சிறிதும் தம் மனதில் நுழையவிட மாட்டார்கள்.   இலக்கிய கூட்டம் எங்கேனும் நடந்தால் உடனே துண்டு போட்டு இடம்பிடித்து எழுத்தாளரின் அந்தரங்க வாழ்க்கை வரை கேள்வி கேட்டு தன்னை அவருக்கும் மேலே என்று அங்கு கூடியிருக்கும் சிற்றெரும்பு மக்களின் கூட்டத்திற்கு அறைகூவுவதாகவே இருக்கும் இவர்களது கேள்விகள். இது ஒரு கர்வம் தொடர்பானது என்று கூட கூறலாம். என்ன பெரிதாக எழுதிவிட்டான் அவன்? ஏன் நம்மால் முடியாதா? என்பது போன்ற வீம்புகள்தான் காரணம். 

                            எழுத்தாளரைப் பின்தொடர்வதை விட எழுத்தைப் புரிந்துகொள்வது, அதனை அனுபவித்து உணர்வது சிறப்பானதாக நான் கருதுகிறேன். எழுத்துதான் எழுத்தாளரின் மனதைக் கூறுகிறது. இதில் தனியாக அவரைச் சந்தித்து உரையாடுவதில் என்ன வெளிப்படும் என்று தெரியவில்லை. ஜெயமோகன் என்றால் அவரை எழுத்துக்களின் வழியே நான் உணர்ந்தேன். அவரை சந்திக்காவிட்டாலும் எனக்கு அது குறித்து எந்த வருத்தமுமில்லை. இதோ எனது அபிமான எழுத்தாளராக பேயோன் இருக்கிறார். அவர் முகம் எனக்குத் தெரியாது. அப்படி முகம் வெளியிடாது எழுதுவதில் பல நன்மைகள் இருக்கலாம். அது தவறில்லை. அவரின் எழுத்துக்களை நான் தேடித்தேடி வாசிக்கிறேன். அவரின் ரகசியங்களை அறிந்து நான் எதுவும் செய்யப்போவதில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. எனக்குத்தேவை புதுவகையான எழுத்து. புதிய பாணி. அவ்வளவுதான். அந்த வகையில் எந்த புதுஎழுத்தையும் வரவேற்கவே செய்கிறேன். இதில் எந்த அரசியலும் இல்லாமல் செய்யமுடிகிறது. எந்த வழிபாட்டையும் எந்த எழுத்தாளரின் பின்னாலும் போகாமலே செய்ய முடிகிறது. தேடி வாசிக்கலாம். தாமதமானாலும் நல்ல நூல்களை வாசித்தோம் என்ற திருப்தி இருக்கிறதே போதும் எனக்கு. இனிமேலும் கூட எழுத்தாளர்களிடம் உரையாட எனக்கு எந்த வார்த்தையுமில்லை. அவரகளது நூல்கள் குறித்து நான் எழுதுவேன் இல்லை வலைப்பூ நிறுவனர் எழுதுவார். அவ்வளவுதான். முடிந்தால் அவர்கள்து முகவரி நூலில் இருந்தால்  அது நம்மை கவர்ந்திருந்தால் கடிதம் எழுதலாம். இது ஒரு நல்ல விஷயம். வாசகருக்கும் கடிதம் எழுதுவது நல்ல பயிற்சியாக அமையக்கூடும். இதுவே சிறந்த ஒன்றாக நான் கருதுகிறேன். மற்றபடி எழுத்தாளரின் புத்திக்கும், வாசகரின் புத்திக்குமான ஏற்றத்தாழ்வுகளை, யார் பெரியவர் என்ற போட்டியை நான் என்றுமே ரசித்ததில்லை. அது நல்லதில்லை. கீழ்மையான குணமாக அதை நினைக்கிறேன். எழுத்தாளர் ஒரு அனுபவம் ஒன்றை பகிர்கிறார். அதை வாசிப்பவர் அது குறித்த கருத்து ஒன்றை தன் அனுபவம் சார்ந்து உருவாக்கிக் கொள்கிறார் என்பதோடு நிற்பதே சரி. மற்றபடி இதற்கான நன்றியை எழுத்தாளர் எதிர்பார்ப்பதும், வாசகர் நூலின் தெளிவு குறித்து அறியாமையாக எழுத்தாளரிடமே கேள்விகளை கேட்பதும் விரும்பத்தக்கதல்ல.  பணிச்சுமை இல்லாமலிருந்தால் சிறிது அவகாசம் கிடைத்தால் நான் எழுதுகிறேன். தோன்றும்போது எழுதுகிறேன். எதுவும் எழுத தோன்றவில்லையெனில் காத்திருப்பேன். வேறு வேலை செய்வேன். அவ்வளவுதான். பயிற்சிதான் எழுதத்தேவை. தொடர்ந்து நாலுவரியேனும் எழுதினால் மெல்ல ஆழமும், விரிவும் கொண்ட எழுத்துப்பரப்பினை அடைய முடிவது சாத்தியமான ஒன்றே.