தேடலும் தேடல் நிமித்தமும்

                                                   தேடலும் தேடல் நிமித்தமும்









                                       ஒரு ஊரில் அது முற்றிலும் அந்நியமாக இருக்கையில் அதனைத் தேடி அதனுள் ஒரு இடத்தை உறுதி செய்து நிழலில் அமருவது பெரும்பாடு. அப்படி அமர்ந்தவர்களின் உதவியில் அமருவது அதன் பின் வருபவர்களின் வழக்கம். நகரம் கிராமத்தின் பல மனிதர்களை வசீகரித்து இழுக்கிறது. ஆனால் அந்தக் கவர்ச்சியும் வசீகரமும் மாநகரத்தில் வாழும் சில நாட்களிலேயே அவர்களுக்கு பிடிக்காது போய்விடும். காரணம் பொருள் தேடும் பரபரத்து தடதடத்து பாயும் காட்டாற்று வாழ்க்கையில் இங்கே முகம் கொடுத்து பேச, புன்னகைக்க யாரிருக்கிறார்கள் இங்கே?  பெரும்பாலான  சமயங்களில் கடற்காற்றும் வானமும் துணையாக நிற்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏன் நகரத்தில் சலனமில்லாது மோட்டார்சைக்கிளை சிறிதும் கவனமேயில்லாது ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை ஈர்க்கும்படி வேகமாக ஓட்டிச்செல்கிறார்கள்? சைலன்ஸரின் ஒலியை மாற்றியமைத்து அரசியல் மேடையின் ஆபாச கூச்சல்களுக்கு இணையாக அதனை நம் காதில் கேட்க வைக்கிறார்கள்? அனைத்திற்கும் காரணம் உண்டு. 

               நகரங்களின் கட்டிடங்கள் வளர்ந்த அளவு நம் மனது வளரவில்லை. நாம் இன்றுமே எவ்வளவு வளர்ந்தாலும் ஆதுரமான ஒரு குரலுக்கு ஏங்குகிறோம். ஆறுதலுக்கு, அன்பிற்கு, தேற்றலுக்கு, நமக்கே நமக்கேயான ஒரு உறவு அது எங்கே கிடைக்கும்? தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறோம். நுகர்வு கலாச்சாரத்தினை புரிந்துகொண்டவர்களுக்கு உறவு உடைதல் என்பது பெரிய விஷயமேயில்லை. அது குறித்து கவலைப்படவும் ஏதுமில்லை. நீங்கள் தினமும் சந்தித்து புன்னகைக்கும் கடைக்காரர், தண்ணீர் கேன் விற்கும் அண்ணன், வீடு பார்த்து கொடுத்த டீக்கடைக்காரர், அவ்வப்போது கடன் தரும் அருகில் உள்ள அறைவாசி நண்பர் இவர்களெல்லாம் உங்கள் மனதில் வசிக்கிறார்களா? இல்லவே இல்லை. இது சில வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளும் முனைப்புதான் தவிர வேறில்லை. இதயப்பூர்வமான உறவு ஒன்றிற்கு நீங்கள் தொடர்ந்து எதிர்வினை ஆற்ற அவசியமில்லை. அது இயல்பாக உங்கள் மனதை உணரும். தன்மையை ஏற்றுக்கொள்ளும். அப்போது அங்கே ஊடல்கள் நிகழாது. எவ்வளவு நாட்கள் கழித்தாலும் பெரும் முக மலர்ச்சியுடன் அக அன்புடன் வரவேற்கும். நாம் கட்டமைக்க நினைப்பதும் அதுதானே தோழர்களே! விரும்பும் ஒன்றாகவே மாறும்போது அங்கே பெயர்கள் வேறு பாடு இருக்காது. வாழ்க்கை என்பது அழகானது என்று கூறவில்லை. அதன் போக்கில் இயல்பானது என்றுதான் கூறுகிறேன்.

கருத்துகள்