சிறிதேனும் கடவுளாகலாம்

                                            சிறிதேனும் கடவுளாகலாம்












             இந்தியாவில் கடவுளாவது பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. மிக எளிதுதான். ஏதேனும் எளியவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தால் போதுமானது. இங்கே பெரும்பாலும் தீர்வுகளை எதற்கும் நினைவுகூருவதே இல்லை. ஏனெனில் பிரச்சனைகள்தான் தீர்ந்துவிடுமே. ஒரட்டாங்கைபோல் எப்போதும் ஒரே புலம்பல், அழுகை. அதுவும் ஒரு அரசியல் வழிதான். பலரும் கடவுளைத் தொழுகிறார்கள். பிரச்சனைகள் தீர, தேவைகள் நிறைவேற, வணிகக்கூட்டிற்காக, சுமையை சுமத்துவதற்காக, பிரச்சனையிலிருந்து மீளுவதற்காகவும் கூடத்தான். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் 'ஞா' என்று கொள்வோம். இருவரும் திருமண விழாவில் சந்தித்துகொள்வதாக ஏற்பாடு. சந்தித்தோம். பேசினோம். இடையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏறத்தாழ இரண்டு மணிநேரங்கள் பேசினார் நண்பர். பிறகு, அவர் அழைத்தது ஒரு பெண்தோழி என்றார். ''அவுங்க வீட்டுல ஏதோ பிரச்சனையாட்ட, ஈஷாவுக்கு போயிரலாம்னு இருக்கறங்கறாங்க, நாஞ் சொன்னன் இங்க பிரச்சனைன்னு அங்க போனா அங்க ஏதாவது சிக்கல் இருந்தா எங்க போவீங்கன்னு கேட்டா எதுவும் பேசமாட்டேங்கறாங்க'' என்றார். நான் அவரிடம் பிறகு அதைப்பற்றி பேசினேன். ''அவுங்க உங்ககிட்ட பேசறத ஏன் தன்னோட கணவர்கிட்ட பேசக்கூடாது? அப்படிப்பேசினா பிரச்சனை தீரும்தானே? அப்புறம் நீங்க ஏன் உங்க நேரத்தை இதுமாதிரி மோசமான பிரச்சனைகளைத்தீர்த்து வைக்கிறதுல செலவழிக்கணும்? நாம ஒரு விழாவுக்கு வந்திருக்கறம். மூணு மாசத்துக்கும் மேலா லீவு போடாம வேல செஞ்சுட்டு வந்திருக்கிறீங்க. ஏன் நாம இது மாதிரி பிரச்சனை இருக்கறவங்களுக்கு கடவுளாகணும்?'' ஏறத்தாழ இந்தக் கேள்விக்கு பிறகு அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். 

             நல்ல தோழனாக ஒரு தோழியாக இருப்பது நல்லதுதான். ஆனால் அப்படி இருப்பது அவர்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்பது என்பதற்காகத்தான் என்பது மட்டுமல்ல. தவறை கண்டித்து அதை சரியான நேரத்தில் கூறுவதும்தான். என்னைக்கேட்டால் நான் நேரடியாக கூறியிருப்பேன். நீங்கள் இப்படி என்னோடு பேசுவதற்கு பதில் பிரச்சனைக்கு காரணமான விஷயங்களை தொடர்புள்ளவரிடமே பேசிவிடுங்களேன் என்று. 'ஞா' இயல்பாகவே கவிதை எழுதும் மென்மை உள்ளம் கொண்டவர். அவருக்கு இயல்பான தன்மையாகவே முகத்தைப் பார்த்தவுடன் அவர்களுக்கான பிரச்சனைகளை அறிந்து அதற்கான தீர்வுகளைக் கூறிவிடும் அளவு வாழ்க்கையில் அனுபவம் உண்டு.  ஆனால் அதை அவர் சிறிது வெளிப்படுத்தினாலே போதும். அவர் அருள்வாக்கு கேட்க கூட்டம் திரண்டுவிடும். நம் மக்களைப் பொறுத்தவரை தீர்வுகளை, விஷயங்களை நாமே தேடுவதை விட மற்றவர்கள் தேடித்தருவது மிக விருப்பமானது. ஏனெனில் நமக்கு சோம்பேறித்தனம் அதிகம். சிந்தித்தால் நாம் அனைவருக்கும் தோன்றக்கூடியதுதான். தேவை இருந்தால் இவர்கள் இதுபோல மனிதரைத் தேடி ஓடுவார்கள். நான் ஒன்று கேட்கிறேன். நண்பர் என்ற பெயரில் விடுமுறைக்கு வந்திருக்கும் அவரது மனநிலையை சிதைத்து தன் பிரச்சனைகளைக் கொட்டி அவரது மனதை குப்பைத்தொட்டி ஆக்குகிறாரே இது என்ன மனநிலை?  இவர் சந்தோஷமான தருணங்களை 'ஞா' போன்றவரிடம் பகிர்ந்திருப்பாரா?  'ஞா' அப்பெண்தோழியின் அழைப்பை ஏற்க வில்லை என்றால் உடனே என்னை நீங்களும் கைவிட்டு விட்டீர்கள் என்று அழுதுகொண்டு புகார் கூறும் தன்மை கொண்டவர்தான் அந்தப்பெண்தோழி. கிடைத்துள்ள பலவற்றையும் நாம் எளிதில் மறந்துவிடுகிறோம். புறக்கணிக்கிறோம். கிடைக்காதது குறித்துதான் புகார்கள். 'ஞா' வைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கையிலே பல தடுமாற்றங்கள், பிரச்சனைகள், வேதனைகள் உண்டு. மிகவும் வேதனையான இரவின் தருணங்களில் சிலவற்றை அவர் என்னிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். 

   அவரின் மனத்தன்மை வேறுவிதமானது. அடுத்தவர்களை புரிந்துகொள்வதில் மேம்பட்ட நிலையினை அடைந்துவிட்டவர். ஒவ்வொரு வார்த்தைகளையும் மிக கவனமாக கேட்பார். ஆனால் இதுபோன்ற ஒருவரின் குடும்ப விஷயங்களை காதுகொடுத்து கேட்பதன் மூலம் அவருக்கு கிடைப்பது என்ன? மன உளைச்சல்தான். இங்கு யாரும் பிரச்சனைகளைத் தீர்க்க முயலுவதேயில்லை. அதனைத்தீர்க்கும் எளிய தீர்வுகளை சற்று நேரம் சிந்தித்தாலே கண்டறிய முடியும். நமக்கு அதெல்லாம் எதற்கு? சத்குரு, நித்தியானந்தா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் என்று சத்சங்கத்திற்கு கிளம்பிவிடுகிறோம். அவர்கள் சில சூழல்களை மனதிற்கு புத்துணர்ச்சி தரும் விதமாக அமைத்து மனதின் தீவிரப் பாய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவந்து கவனத்தினை, முனைப்பினை அதிகரிக்கிறார்கள். நீங்கள் கவனிக்கிறார்கள். பிரச்சனைகளின் தாக்கம் குறைகிறது. அதோடு நிற்கிறதா? அதைத்தீர்த்தவர் யார்? அவர்தான் குடும்ப குரு. கடவுள் என்று ஆக்கிவிடுகிறோம். நம்மில் பலருக்கும் கடவுளான அனுபவம் நிச்சயம் இருக்கும்தானே? சிறிது கடவுளாகவும் இருக்கலாம். தனிமனிதன் சமூகத்திற்கு பயன்பட்டே ஆகவேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை. அவன் தன் மனதின் அகவளர்ச்சிக்கு நேர்மையான முறையில் பங்களித்தால், சமூகமும் அவனோடு பயணிக்கும். சமூகமும், தனி மனிதனும் வேறல்ல அல்லவா?

கருத்துகள்