வக்கிரத்தின் அளவீடு எது?

                                                 வக்கிரத்தின் அளவீடு எது?









              42 ஆண்டுகள் கோமாவில் இருந்து இறந்துபோன மும்பை நர்ஸ் அருணா ஷான்பாக் 66 வயதில் இறந்துவிட்டார். அதுகுறித்த ஏங்க இப்படி நடக்குது? என்று அதிர்ச்சியடைந்த முகத்துடன் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார். நண்பர் சுந்தரத்தின் சக தோழி ஒருவர் பிரைமரி ஸ்கூல் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் காதல் கடிதம் கொடுக்கிறான் இது எவ்வளவு வக்கிரமானது? என்று வருத்தப்பட்டார் அவர். ஏறத்தாழ பள்ளி பயின்ற நம்மைப்போல பலரும் ஆணோ, பெண்ணோ ஆசிரியர் எவராக இருந்தாலும் அவரது கம்பீரம், பழகும் முறை, கவர்ச்சி இதனால் கவர்ந்திழுக்கப் படாமல் இருக்கவே முடியாது. ஆண் என்பதை விட பெண் எனும் போது அது மாணவர்களுக்கு கூடுதல் பிணைப்பை அவர்களுடன் ஏற்படுத்துகிறது. தாயின்மேல் தந்தையிடம் இருப்பதைவிட ஆண் பிள்ளைகளுக்கு நெருக்கம் அதிகம்தானே! இதை ஏன் நாம் இந்தக்கோணத்தில் பார்க்கக்கூடாது? என்றேன். அதற்கு அவர், ''அப்படியா சரி, நெல்லை பேருந்து நிலையத்தில் நான் நடந்துபோய்க்கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் 45 வயது மதிக்கத்தக்க பெண் சென்றுகொண்டிருந்தார். அவரது பின்புற புட்டங்களைப்பார்த்து ஒருவன் நடைபாதையில் சுய இன்பம் அனுபவிக்கிறான் இதை என்ன கூறுவீர்கள்? அவனுக்கு அந்த காலை நேரத்திலேயே எவ்வளவு வக்கிரபுத்தி இருக்கும்? ''என்று கண்சிவந்துவிட்டார். அடுத்த நான் ஏதாவது பேசினால் கேப்டன் போல சுவற்றின் மேல் ஏறி உடலைத் தூக்கி நெஞ்சிலேயே மிதித்துவிடுவாரோ என்று கூடப் பட்டது. ஆனால் கருத்தை விடமுடியுமா? 


                       மற்ற விலங்குகளைப் போல நமக்கு இனப்பெருக்க காலம் என்று தனியாக குறுகிய காலம் எல்லாம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் நம்மால் உடலுறவில் ஈடுபடமுடியும். ஆனால் எந்த ஒரு சமூகத்திலும் அதன் கட்டுப்பாடுகளை உடைத்து சிலர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் அதாவது சமூகத்தின் சட்ட அமைப்பை மீறுவது. ஆனால் அவர்களுக்கு இருக்கும் மனநலப்பிரச்சனைகளை ஏன் யாருமே பொருட்படுத்துவதில்லை? கற்பழிப்பு, சீண்டல்கள், வக்கிரமான பேச்சுகள், செயல்பாடுகள்  என்பது இன்றைய அவர்களது போக்குதான். உண்மைதான். ஆனால் அதில் சமூகத்திற்கு எந்த பங்குமே இல்லையா? 

                          எனது வீட்டில் கூட நான் என் அம்மாவுக்கு உதவி செய்வது என்பதை எனது தந்தை விரும்புவதில்லை. ஏன் எனது அம்மா கூட சாப்பிட்ட தட்டை கழுவது கூட ''நீ ஏஞ் செய்யற நா பாத்துகறன் போ''  என்பாள். பெண்ணுக்கான வேலை, ஆணுக்கான வேலை, அதற்கான சம்பளப்பிரிவினை என நம் சமூகத்தில் பல பிளவுகள் உள்ளன. எங்கள் உறவினர் வீடு ஒன்றில் அவர்களது மகனுக்கு ஹார்லிக்ஸ் கலக்கி சாயங்காலம் கொடுப்பார்கள். ஆனால் அதை தங்கள் மகளுக்கு கொடுப்பதில்லை. அவளுக்கான செலவுகளைக் கூட படிப்புக்கானதைக் கூட அவளது தந்தை ஏதோ தர்ம காரியம் செய்வது போல பெத்துட்டம்  செய்யணுமே என்று செய்வார். இதை கண்டுவளரும் அந்த சிறுவன் மனதில் பெண்கள் குறித்து என்ன மதிப்பு வளர முடியும்? ஏன் அவளை ஒரு சக உயிராக கூட அவன் மதிப்பதில்லை? பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருளாக நினைக்கிறான்?  பெண்ணின் வீட்டாரே அவளை பாதுகாக்க எவ்வளவு விரைவில் திருமணம் செய்துகொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அவளை மற்றவரின் பாதுகாப்பில் தள்ளிவிட முயற்சிக்கிறார்கள். கட்டிக்கொடுத்த கணவர் வீட்டில் கடுமையான வன்முறை அவள் மீது நிகழ்த்தப்படுகிறது. பிறந்த வீட்டில் அவளின் கனவு தந்தை போல ஒரு பாதுகாப்பு அரவணைப்பு தரும் கணவன்  என்பதுதான். பெண்களுக்கான குறைந்தபட்சக் கனவு அதுவாகத்தானே இன்றுவரை இருக்கிறது.  இது போன்ற குடும்ப வன்முறை ஒன்றில்தான் நான் எனது அத்தையை இழந்தேன். இன்று நினைக்கும் எனக்கு எனது ஆத்தா, அப்பா உள்ளிட்டோர் அத்தைக்கு சிறிது ஆறுதலாக இருந்திருந்தால் அவள் உயிரை விட்டிருக்க மாட்டாள் என்றே தோன்றுகிறது. 

                    பெண் என்பவள் சாதியைப் பொறுத்தவரை கௌரவம். வீடுகளைப் பொறுத்தவரை சொத்து போன்று களங்கப்படாமல் தூய்மையாய் இருக்கவேண்டும். மற்றபடி அவளின் மனம் ஆசைகள் குறித்து இங்கு கவலைப்பட அதிக மனங்கள் இல்லை. படிப்பு குறைவாக இருக்கவேண்டும் அப்போதுதான் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியது இல்லாமல் மாப்பிள்ளை கிடைக்கும் என்று அலட்சியமான மனப்பாங்கு வீட்டிலேயே தொடங்கிவிடுகிறது. 

                 நம் அனைவரின் உடலிலும் ஆண் தன்மையும் உண்டு. பெண் தன்மையும்  நீக்கமற உண்டு. எது உயர்வாக இருக்கிறதோ நாம் அந்த பால் ஆகிறோம். உண்மையிலேயே தாயிற்கோ, தங்கைக்கோ, அக்காவிற்கோ மாதவிலக்கிற்கு நாப்கின் வாங்கிவந்து கொடுக்கத் தயங்காத ஒரு ஆண்மகன் நிச்சயம் யோனியில் இரும்புக்குழாயினை நுழைக்க மாட்டான்.  அவனுக்கு அவர்களின் துன்பங்கள் புரியும். இவை தியானம் செய்தால் வருவது அல்ல. அவர்களின் துயரங்களை கண்டாலே போதும். அதை உணர முடிந்தால் போதும். இந்திய, பாகிஸ்தானிய பிரிவினையின் போது நடந்த கலவரங்களின் போது எத்தனை லட்சம் பெண்கள் நாசப்படுத்தப்பட்டார்கள். ஏனெனில் இது காலம் காலமாக வரும் வழக்கம். பெண்களை தண்டனைக்குள்ளாக்குவது அந்த குடும்பத்து ஆண்களுக்கு தரும் வலிமிகுந்த மறக்கவே முடியாத தண்டனை. இப்படி வன்புணர்ச்சி செய்யப்பட்ட பல பெண்களும் அவர்கள்  சார்ந்த குடும்பத்தினராலேயே தற்கொலை செய்துகொள்ள தூண்டப்பட்டனர். பல பெண்கள் கிணற்றில் தள்ளப்பட்டு எதிரிகளின் கையில் சிக்காமல் கொல்லப்பட்டனர். கௌரவம் உயிரினும் மேலானதல்லவா? வக்கிரம் எங்கே இல்லை? இந்திய பிரிவினை சினிமாக்களை பார்த்தீர்கள் இதனை தெளிவாக உணரமுடியும். அந்த தருணத்தில் காந்தி இதனால் பாதிக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்ள இந்திய இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று கூறினார். இதன் மூலம் எத்தனை பெண்கள் காப்பாற்றப்பட்டனர் என்று தெரியவில்லை.
               
                தன்னுடைய உடல் உறுப்புகள் குறித்து வெட்கப்படுவது தேவையில்லை. நமது உடல் உறுப்புகளை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். உடலுறவு தொடர்பான வீடியோக்கள், எழுத்துக்கள் உடலுறவு பற்றிய புரிதலை ஏற்படுத்த தயாரிக்கப் படவில்லை. அவை நமக்கு காமக்கிளர்ச்சி ஏற்பட வேண்டும் என்னும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன. அவை சிறிது ஆற்றுப்படுத்தலை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அவை நிஜமல்ல. உண்மையில் உடலுறவும் அவ்விதம் சாத்தியமல்ல. மனங்களின் பிணைப்பு இல்லாது உடல் இணைவு கடினம். ஞாநி எழுதிய அறிந்தும் அறியாமலும் என்னும் தொடர் விகடனில் வந்த போது எனது பல குழப்பங்களைத் தீர்த்து வைத்தது. அதுபோல பெண்களைப் புரிந்துகொள்ளுவதற்கான  மதிப்பதற்கான இன்னொரு குறிப்பிடத்தக்க தொடர் என்று பேசாத பேச்செல்லாம் தொடரைக் குறிப்பிடலாம். பெண்மற்றும ஆண் ஆகியோரின் மனநல மற்றும் தவறான புரிதல்களை போக்க டாக்டர் விகடனில் நாராயணரெட்டி எழுதும் அந்தப்புரம் தொடர் உதவக்கூடும். இவற்றை வாசிப்பதன் மூலம் சில விஷயங்கள் நமக்கு தெரியவரும். அதுவே முழுக்க உதவும் என்று கூறமுடியாது. மாற்றங்களை நாம் நம்மிலிருந்தே தொடங்க வேண்டும். 

             '' சரி சுந்தர் நீங்கள் எந்த மாதிரி போர்னோகிராபி வீடியோக்களை பார்ப்பீங்க''

''எனக்கு  மறைவாக கேமரா வைச்சு தெரியாம எடுப்பாங்கள்ளங்க அதுதான் பிடிக்கும்'' என்றார்.

சொல்லுங்கள் தோழர்களே! வக்கிரத்தின் அளவீடுதான் என்ன?



கருத்துகள்