ஏத்துடா மெழுகுவத்திய!

                                               ஏத்துடா மெழுகுவத்திய!










            இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது எப்போதும் நம்மிடையே இருக்கும் ஒரு உத்திதான். எல்லாமே தத்தமது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகத்தான் தோழர்களே! இப்போது பாருங்கள்.  இறந்தவர்களை பாராட்டுபவர் அவரது கொள்கைக்கு விரோதியாக கூட இருக்கலாம். மோடி அம்பேத்கரை பாராட்டுவது போல. அதெல்லாம் நமக்கு ஒரு பிரச்சனையா என்ன. செத்தவன் எழுந்து வந்து ஏதாவது சொல்லவா போகிறான்? நேற்று நுங்கை முழுவதும் ஒருவர் பேனரில் மண்வெட்டி வைத்து நிற்கிறார். ஒன்றில் கட்சியின் அணிவகுப்பை பார்வையிடும் மேஜர் ஜெனரல் போல இருக்கிறார். ஆனால் கட்சியினர்க்கு இன்னும் திராவிடக் கட்சியினரைப் போன்ற படைப்புத்திறன் இல்லை. ஒசாமா, ஒபாமா, சே போன்று எல்லாம் முயற்சிக்கவில்லை. அட மறந்துவிட்டேன். அதை குருமா எடுத்துக்கொண்டு விட்டார் அல்லவா? அதனாலென்ன அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என வாய்ப்புகள் நிறைய நமக்கு காத்திருக்க என்ன இது மண்வெட்டி, மேஜர் ஜெனரல் வேஷம் எல்லாம். ஞாயிற்றுக்கிழமையை எப்படி கழிப்பது என்பவர்களுக்கு இதுபோன்ற போலி செயல்பாட்டுவாதிகள் பெரும் உற்சாகம் அளிப்பார்கள் என்று நம்புவோம்.

           மைகோவின் ஆக்ரோஷ பேச்சு என் நண்பனைக் கூட பெரிதும் வசீகரித்துவிட்டது. அவன் கட்சி பேதமில்லாமல் போகலீன்னா கோபப்படுவாங்களோ என்று அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கும் போவான். சிவப்புக்கொடி, மறுமலர்ச்சி, பசுமைக்கட்சி என சென்றுவிட்டு, அவன் வியந்து பேசியது களமாடும் உயர்த்திய முஷ்டி கோமான் குறித்துத்தான். உயர்த்திய முஷ்டி பேசிய பேச்சில் மேடையே ஆடியது என்று வேறு என் கற்பனைக்கு சிஜி வேலைகளையும் செய்தான். நினைத்துப் பாருங்கள். ஆக்ரோஷ கிரேட் டிக்டேட்டர் புரியாத மொழிபேசும் காட்சி கண்ணில் வருகிறதா? பொதிகையில் செய்தி பார்த்துக்கொண்டிருக்கும் அலறிய அலறலில் என் அம்மா சோற்று வட்டலையே கீழே போட்டுவிட்டாள். ஏண்டா இந்தாளு இந்த முக்கு முக்கறான் என்றார். என்ன பதில் கூறுவது? அவர்களது பிரச்சனை.. இந்தியாவைப் பொறுத்த வரையில் கர்ண கடூர ஒலியில் எது உச்சம் பெறுகிறதோ அதுவே வெற்றியும் பெறுவது வாடிக்கையாகி விட்டது. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் தலைவர்கள் தங்களைக் காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை  ஆதரவு என்று  எதையாவது பேசித்தொலைக்காதீர்கள் என்றும் கூறிப்பார்த்துவிட்டார்கள். ஆனால் இவர்களோ தாம் அரசியல் நடத்த சுயநலனுக்காக என்னவேண்டுமானாலும் செய்யத்துணிகிறார்கள். நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் சி.டி, கீசெயின், சட்டையில் குத்திக்கொள்ளும் பேட்ஜ் என இவற்றுக்கெல்லாம் தனியாக இடைஇடையே விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். இதையொட்டி டீக்கடைகள் நிறைந்தால் மகிழ்ச்சிதான். 


                 கடற்கரையில் ஒரு  புரோகிராம் இருக்குது வர்றீங்களா என்றார் எனது நண்பர் சுந்தர். எனக்கு வந்த எரிச்சலில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மெழுகுவர்த்தி எங்கள் கிராமங்களில் தினமும் மின்சார வெட்டினால் ஏற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் கூறுபவர்கள் அவர்களுக்கு ஏதாவது உருப்படியாக களத்தில் செய்யமுடிந்தால் பரவாயில்லை. போட்டோவுக்கு போஸ் கொடுக்கறக்கெல்லாம் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். இன்னும் தமிழ்நாட்டு அகதி முகாமில் இருப்பவர்கள் எல்லாம் கள்ளத்தோணி ஏறியாவது வேறிடம் செல்ல முனைகிறார்கள். தொடர்ந்து பிடிபடுகிறார்கள். மறுபடியும் முயல்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று நேர்மையாக அதனைப் புரிந்து கொள்ள இங்கு ஆளில்லை. ஆனால் இங்கிருப்பவர்கள் அந்த பிரச்சனையெல்லாம் தீர்க்க முயலாமல் மெழுகுவர்த்தி ஏந்திக் கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்கள் குறித்த நினைவுகளின் துக்கம் நிஜம்தான். ஆனால் வாழ்வது இங்கு இறப்பை விட கொடுமையானதாக இருக்கிறது. மெழுகுவர்த்தி ஒளியில் அவலத்தில் நிற்கும் எந்த மனதையும் கண்டுவிட முடியாது நண்பர்களே! அவர்கள் தங்களுக்கான நிலத்தில் கால் ஊன்றி நிற்பதற்கான முயற்சிகள் என்பதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம். கூரையாய் வானத்தை மட்டும் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான உதவிகள் என்பது  அவர்கள் தமிழர்கள் என்ற லேபிளின் காரணமாக செய்தீர்கள் என்றால் அது குறிப்பிட ஜாதிக்காரர்கள் நடத்தும் மாணவர் விடுதி போல வக்கிரமான மனிதாபிமானத்தையே காட்டும் . துன்பமுறுபவர்களும் மனிதர்கள் என்ற எண்ணத்தில் நோக்கில்தான் அதைச் செய்யமுயல வேண்டும். நிகழ்ச்சி நடந்த பக்கத்து மக்களின் கனவில் அன்று நெப்போலியன் போனபர்ட், அலெக்ஸாண்டர் ஆகியோர் கடல் கடந்து குதிரையில் அவர்களைப் பார்த்து சிரித்திருந்தாலும் சிரித்திருக்ககூடும். பொழுதுபோக்குக்கு இந்திய அளவில், ஏன் உலகளவில் தமிழர்களை மிஞ்ச ஆளே இல்லையப்பா.....

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்