நான் ஏன் விவசாயம் செய்யமாட்டேன்?

                   நான் ஏன் விவசாயம் செய்யமாட்டேன்?






                  சி.ஏ படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் நண்பர் கதிரவன் என்பவர் தான் ஒரு அறக்கட்டளை நிறுவி ஏதாவது உதவிகளைச் செய்வதாக  கூறினார். ஆனால் நான் அதை பத்தாவது, பிளஸ் டூ மாணவர்களின் உற்சாக உளறல்களாக அப்போது நினைக்கவில்லை. ஆனால் அதன் பின் எனது வாழ்விலும், அவரது வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இன்று நாங்கள் ஒன்றாக சந்தித்துப் பேசும்போது மூலமான கொள்கை எண்ணங்கள் செயல்பாடு என்பதிலேயே பெரும் மாற்றத்தைப் பார்த்தேன். என்னைப்போல அவர் இல்லை. அவருக்கு  கிராமத்தில் நிலங்களும் உண்டு. வழக்குச் சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறது. அதிலும் அவர்கள் தந்தை, தாய், அக்கா என எல்லோருமே விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்கள். அவருக்கு விடுமுறை என்று கிடைத்தால் அவரை நீங்கள் வீட்டில் சந்திக்கவே முடியாது. வீட்டிற்குச் சென்று அழைத்தால் தம்பி காட்டுல இருக்கறானப்பா என்றுதான் பலமுறை கூறியிருக்கிறார்கள். சென்னையிலிருந்து வந்த களைப்பு தீருவதற்குள் விவசாய வேலையில் மூழ்கிவிடுவார்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டுவிட்டு சிறிது முதலீடு கையில் வைத்துக்கொண்டு நிலத்தில் இறங்கி விவசாயம் நிறுத்தாமல் செய்யவேண்டும் என்றவர் இப்போது ஏன் மறுக்கிறார்?

                    நிலைமை என்பது சு. வேணுகோபாலின் கதை போலத்தான் என்றாலும், பெரும் விருப்பத்துடன் அனைத்தையும் மறுத்து நகரமே வேண்டாம் என்று பேசியவருக்கு என்ன ஆனது? ஏன் அடிமை போல ஒரு தனியார் நிறுவனத்தில் தொடர்ச்சியாக கடும் மன அழுத்தத்தோடு வேலை செய்துவருகிறார். காரணம் அவருக்கு ஏற்பட்ட சில தனிப்பட்ட அந்தரங்க சிக்கல்களைக் கூறலாம். அடுத்து, விவசாயத்திற்கான அந்தஸ்து என்பதையும் அடுத்து கூறலாம். இன்னொன்று நம் உழைப்பிற்கான பலன் என்பது நமது உடலை எவ்வளவு வருத்துகிறது என்பதுதான் முக்கியமாக நான் கருதுகிறேன். நீங்கள் அலுவலகப்பணி என்றால் குளிரசாதன வசதியோடு , தோல் கருக்காமல் வேலை செய்வீர்கள். ஆனால் மன அழுத்தம் உண்டு. மூளை உழைப்பு  அதிகம். உடலுழைப்பும், மூளை உழைப்பும் சேர்ந்து இயங்குகிறவர்களும் உண்டு என்றாலும் இன்று சமூகத்தில் அவர்கள் சொற்பம். நடைமுறை யதார்த்தம் என்பது நுகர்வுதான் ஒரு மனிதனை வரையறுக்கிறது. எனும்போது முழுநேரமும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து சம்பாதிப்பதை விட அலுவலகத்தில் எளிமையாக கணினி மூலம் வேலை செய்து  குறிப்பிட்ட சம்பளத்தை உறுதியாக நிச்சயம் செய்து பெறுவது இயல்பாகவே அனைவரையும் ஈர்க்கக் கூடியதுதானே? நான் ஏன் நீங்கள் விவசாயம் குறித்து எதுவும்  யோசிக்கவில்லையா? என்று சந்தித்தபோது கேட்டேன். அதற்கு அவர் ''மூளை உழைப்பு எல்லோராலும் முடியாது. உடலுழைப்பு யார் வேண்டும் என்றாலும் செய்யலாம். எனக்கு இங்க நெறையா வசதிகள் கெடைக்குது. இதையெல்லாம் விட்டுட்டு வெயில்ல போயி காஞ்சு கருகிக்கிட்டு... அப்பா, அம்மா வேண்ணா அப்பிடி இருந்துட்டாங்க. நானும் எதுக்கு அப்படி இருக்காட்டி... காட்டை கந்தாயத்துக்கு அடைச்சிட்டு நிம்மதியாக இருக்கலாங்கிறதுதான் என்னோட பிளான்.எதுக்கு இன்னும் அவங்க கஷ்டப்பட்டுக்கிட்டு ...அவங்கள கூட்டிக்கிட்டு வந்து இங்க வெச்சுக்கிட்டு நல்லாப் பாத்துக்கணும் அவ்வளவுதான்''. இது நகரம் தருகிற வசதிகள் மட்டுமல்ல. தன் அப்பாவின் வாழ்வை கால் நூற்றாண்டுக்கும் மேலாக கண்டுவந்த விரக்திதான். ஒருவர் வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் பெறுகிற பணத்தை விட அதிகமாக இன்று வேறு பணிகளில் தொழில்களில் ஈடுபட்டால் பெறமுடிகிறபோது, திரும்பத் திரும்ப  விவசாயம் ஒரு சேவைத்துறை என்பதும், வள்ளுவரை வக்காலத்துக்கு இழுப்பதும்  டி.வியின் டி.ஆர்.பி வணிகத்தை வேண்டுமானால் ஊக்குவிக்கலாம். சபையில் கைதட்டல்களை குவிக்கலாம். விவசாயிகளுக்கு அதனால் என்ன பலன்? விவசாயமோ அல்லது அது சார்ந்த துணைத்தொழில்களோ அதற்கு என்ன மரியாதை சமூகத்தில் இருக்கிறது? எதிலிருந்தும் வருகிற பணத்தைத்தான் அனைவரும் கவனிக்கிறார்கள். மேலும் பெப்ஸி வாங்க பேரங்காடி செல்பவர்கள் எந்தப்பேரமும் பேசாமல்தானே அதை வாங்கி அருந்துகிறார்கள். ஆனால் பல கைமாறி வரும் உணவுப்பொருள் விவசாயிக்கு அடுத்தமுறை நிலத்தில் முதலீடு செய்யக்கூட பணம் தராத  நிலையில் விலை உயர்வு, இது அநியாயம் என்று அவனுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய் கூட கிடைக்காமல் செய்வது இந்த ஊடகங்கள்தான். அதிகம் ஆசைப்படுகிறார்கள் என்கிறார்கள். சுற்றியிருக்கும் உலகம் அப்படி அவர்களை மாற்றிவிடுகிறது. ஏழை விவசாயிகளான அவர்களுக்கு விவசாயம் தவிர அதன் துணைத்தொழில்களைத் தவிர வேறெதும் தெரியாது. மத்திய அரசும், மாநில அரசும் ஊக்கத்தொகை தரமுடியாது என்று கைவிரித்துவிட்டன. விவசாயி சாவதை விட நடிகரின் சிறைதண்டனை குறித்த பரபரப்பு செய்திகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. விளம்பரத்தை தருகின்றன. அரசும் பேராசையைத் தூண்டி இழப்பீடு பெற்றுக்கொண்டு நிலத்தை எங்களிடம் தந்துவிடுங்கள் என்று மறைமுகமாக மிரட்டுகிறார்கள். காந்தி மூளை உழைப்பு, உடல் உழைப்பு குறித்த கவனத்தைக் கொண்டே கல்வியை அமைக்க முன்னமே வலியுறுத்தினார். அவசியமான அனைத்தையும் மறந்துவிட்டோம். இன்று வேறுபாடுகள் அதிகரித்துவிட்டன. என்ன செய்யமுடியும்?  காரணத்தை அகற்றாமல் தீர்க்காமல் விளைவுகளை சரி செய்ய முடியாது நண்பர்களே!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்