சீப்பான சீனக்கம்பெனிகள் ஜெயித்தது எப்படி?
www.scmp.com |
சீனக் கம்பெனிகள் சாதித்தது எப்படி?
இந்தியாவில் மொபைல் கம்பெனிகளுக்கு குறைவில்லை. ஆனால் தரம் என்று பார்த்தால், ஒனிடா, வீடியோகான், மைக்ரோமேக்ஸ் ஆகிய கம்பெனிகள் மேட் இன் இந்தியா என பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இப்போன்களை வாங்கியவர்கள் சந்தோஷப்பட ஏதுமில்லை. அப்படியே மலிவான கொரிய போன்களுக்கு பெயரை மட்டும் லாவா, ஒனிடா, வீடியோகான் என வைத்து பரபரப்பான விற்றனர்.
இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, மைக்ரோமேக்ஸ் போன்ற கம்பெனிகள் போன்களை வேகமாக விற்க முயற்சித்தனரே தவிர அதில் தரத்தையோ தனித்துவத்தையோ பராமரிக்க முயற்சிக்கவில்லை. இந்த நேரத்தில் இந்தியச் சந்தையில் சாம்சங் கோலோச்சிக் கொண்டிருந்தது. நோக்கியா சரிவில் இருந்தது. பிளாஸ்டிக் போன்களை அதிக விலை வைத்து விற்ற எல்ஜியின் சுவடையே காணோம். அப்போது பீக்கில் கிராக்கி காட்டியது கொரியா செட்டுகள்தான். திருவிழா செட்டு போல முத்துக்கொட்டை பல்லழகி என எங்கு பார்த்தாலும் சத்தம்.
அந்த நேரத்தில்தான் சீன போன்களாக ஹூவெய், ஆப்போ, விவோ களமிறங்கின. குறைந்த விலையில் ஐபோன் வசதிகளோடு போன் விற்றால் வாங்க மாட்டார்களா? தூள் கிளப்பிய சீன கம்பெனிகள் எப்படி இந்த வெற்றியை சாதித்தன? இன்று இந்தியக் கம்பெனிகள் நமக்கு 5 ஜி நெட்வொர்க்கை தரப்போவதில்லை. சீன நிறுவனமான ஹூவெய், 5ஜி சேவையை வழங்கவிருப்பது ஏறத்தாழ முடிவாகிவிட்ட.து.
இந்த நேரத்தில் சுதேசி - விதேசி, அச்சே தின், மேக் இன் இந்தியா என்ற சுலோகங்களை மனதிலிருந்து அகற்றிவிடுவது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஏன் வருங்கால இந்தியாவிற்கே நல்லது.
ஷென்ஷானைச் சேர்ந்த குவா ஜியானுக்கு தன்னுடைய நாட்டு போன் நிறுவனங்களின் மேல் பெரிய நம்பிக்கை கிடையாது. ஆப்பிளை வாங்கி பதவிசமாக பயன்படுத்திய பெருந்தகைதான் அவர். ஆனால் இன்று ஹூவெய் கம்பெனி போனை பயன்படுத்தி வருகிறார். அப்படி என்ன அவரை ஈர்த்திருக்கிறது? நான் நினைத்த தைவிட கேமரா மற்றும் போனின் டிசைன் சூப்பராக உள்ளது. விலையும் கூட ஆப்பிளை விட குறைவு என்றார் ஜியான்.
மற்றுமொரு உண்மையை நெஞ்சைத் தொட்டு ஒத்துக்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் சீன பொருட்கள் அனைத்தும், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய பொருட்களை காப்பியடித்துத்தான் உருவாயின. ஹெயர் குழுமம், லெனோவா குழுமம் மற்றும் ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் சீனாவின் மலிவான மட்டமான பொருட்கள் என்ற பெயரை மாற்றியுள்ளனர். தங்களுடைய நாடு கடந்து பிற நாடுகளின் இணைய இணைப்புக்கான ஆர்டர்களை பெறும் அளவில் முன்னேறியுள்ளனர். ஆப்பிள், எல்ஜி, சாம்சங் ஆகிய உலகளவிலான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களைக் கடந்து சீன நிறுவனங்கள் மார்க்கெட்டில் முந்திச்சென்று விட்டன.
இன்று உலகளவில் ஹூவெய் நிறுவனம், மொபைல் பொருட்களை தயாரிப்பதில் இரண்டாமிடத்திலும், ஜியோமி கார்ப், ஆப்போ ஆகிய நிறுவனங்கள் நான்காவது, ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 2014 ஆம் ஆண்டு மோட்டரோலா பிராண்டை லெனோவா வாங்கியது குறிப்பிடத்தக்க வணிக கையகப்படுத்தல் என கூறப்பட்டது. எப்படி எந்த காலத்தில் இந்த கம்பெனிகள் இந்தியாவில் நுழைந்தன?
இன்று உலகளவில் ஹூவெய் நிறுவனம், மொபைல் பொருட்களை தயாரிப்பதில் இரண்டாமிடத்திலும், ஜியோமி கார்ப், ஆப்போ ஆகிய நிறுவனங்கள் நான்காவது, ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 2014 ஆம் ஆண்டு மோட்டரோலா பிராண்டை லெனோவா வாங்கியது குறிப்பிடத்தக்க வணிக கையகப்படுத்தல் என கூறப்பட்டது. எப்படி எந்த காலத்தில் இந்த கம்பெனிகள் இந்தியாவில் நுழைந்தன?
2010- 2012 காலகட்டத்தில்தான்.
அப்போது நாடு 3ஜியில் சிக்கி தடுமாறிக்கொண்டிருந்தது. 4ஜிக்கான தயார்ப்படுத்தலில் இருந்தபோது அதனை சரியாகப் புரிந்துகொண்டது, சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்தான். ஹூவெய் நிறுவனம் கேமராவின் திறனுக்காக ஜெர்மனியின் லெய்கா நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டது. அப்போது பெய்ஜிங்கில் தொடங்கப்பட்ட ஜியோமி இன்று உலகின் டாப் 1 பொசிசனில் உள்ளது. எப்படி?
தயாரிப்பு, தரம் என்பதோடு இளைஞர்களை ஈர்க்கும் விளம்பர முறை. நிச்சயம் ஜியோமி சிறப்பாக இருந்தாலும் அதனை வசந்த் அண்ட் கோவில் பார்வைக்கு வைத்து, அல்லது பூர்விகாவில் காஜல் மூலம் இளைஞர்களை ஈர்த்து காசு பார்ப்பது ஜெய்சங்கர் கால டெக்னிக். அப்போது பரபரப்பாக அனைவரையும் ஈர்த்த வணிகம் இ வணிகம். உடனே ஜியோமிங் இயக்குநர் லெய் ஜூன், போனை இணையத்தில் மட்டும் எக்ஸ்குளூசிவ்வாக விற்க பிளான் செய்தார். அதுவும் நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு.
இளைஞர்கள் தூங்கவில்லை. சரியாக இணையத்தைத் திறந்து அப்படியென்ன இந்த போனில் என ஆர்டர் செய்தே பார்த்தனர். தரம் பிரமிக்க வைக்க இன்றுவரை இளைஞர்களின் லீவிஸ் பாக்கெட்டில் பிரியமாய் உட்கார்ந்திருக்கிறது ஜியோமி மீ . இதோ என் அருகில் அமர்ந்துள்ள நண்பர் சுவற்றில் ஐ லவ் மீ(MI) என்று ஸ்டிக்கரே ஒட்டி வைத்திருக்கிறார். வெற்றிக்கதைக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?
ஆப்பிளின் வருமானம் சரிந்ததற்கு முக்கியக் காரணம், சாம்சங் மட்டுமல்ல. அதனையும் மிஞ்சி குறைந்த விலையில் போன்களை உருவாக்கி வரும் ஆப்போ, விவோ, ரியல்மீ, ஒன் பிளஸ் ஆகிய பிராண்டுகள்தான். இவற்றை பிபிகே எலக்ட்ரானிக்ஸ் கார்ப் என்ற நிறுவனம் நிர்வகிக்கிறது. இதற்கு முக்கிய போட்டியாளர் ஜியோமி கார்ப் என்ற நிறுவனம், இதன் துணை நிறுவனம் போகோ.
நாங்கள் எங்களுடைய போன்களின் தரத்தை தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறோம். எங்களுடைய பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எங்களுடைய பொருட்களை வாங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் லெய் ஜூன்.
ஆயிரம் சொல்லுங்கள். இந்த தன்னம்பிக்கை நம் இந்தியாவில் உள்ள ஒரு மொபைல் நிறுவனத்திற்கு வந்தால் கூட நாம் ஜெயித்துவிடலாம்.
நன்றி: சீனா மார்னிங் போஸ்ட் (லீ தாவோ)