குப்த ராஜ்யத்தைக் காப்பாற்றப் போராடும் நாயகன்- சாண்டில்யன்
மெரினாபுக்ஸ் |
மலைவாசல் - சாண்டில்யன்
வானதி பதிப்பகம்
ரூ.200
1969 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாவல் 2016 ஆம் ஆண்டுடன் 36 ஆவது பதிப்பை எட்டியுள்ளது. அப்படி இந்த நூலில என்ன உள்ளது? சுவாரசியம் தவிர வேறு எதுவும் இல்லை.
உடையார் நாவல் வந்தபின்தான் மக்களைப் பற்றிய வரலாற்று புனைவுகள் சிறிதேனும் அதிகரித்து உள்ளன. முதலில் எழுதிய வரலாற்றுப் புனைவுகள் அனைத்தும் மன்னரின் குடும்பம், அவரின் காதல்கள், சிற்பக்கலை ஆகியவற்றை தாண்டி வந்தாலே பெரிய விஷயம்.
சாண்டில்யனின் நாவல், குப்தர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. குப்தர்களின் மன்னரான ஸ்கந்தகுப்தர் நோயால் நலிவடைந்து கிடக்க, நாட்டின் பொருளாதாரம் காலியாகி கிடக்கிறது. காரணம், ஹூணர்களுடன் செய்த அடுக்கடுக்கான போர்கள். படைக்கு பணம் வழங்க முடியாமல், நாணய மதிப்பையே குறைத்து உத்தரவிட்டு நோய்மையால் தடுமாறுகிறார் ஸ்கந்தகுப்தன்.
அவரின் சித்தி மகன் பூரகுப்தன், வாரிசுரிமை என்பதைத் தாண்டி சக்ரவர்த்திக்கான எந்த அம்சங்களும் இல்லாதவன். அவனை விட அவனை சக்ரவர்த்தி ஆக்க அவனது தாய் ஆனந்திதேவி முயற்சிக்கிறார். இதற்காக ஹூணர்களிடம் சேர முயற்சிக்கிறார்.
குப்தர்களின் நாட்டைக் காப்பாற்ற ஒற்றையாளாக முயற்சிக்கிறான் அஜித் சந்திரன். இத்தனைக்கும் ஹூணர்களிடம் தோற்றுப்போய் அடிமையாக உள்ளவன் அவன். எப்படி இதைச் சாதித்தான், ஹூணர் தலைவனின் மகளான சித்ராதேவியை காதலிக்கிறான்.
அந்த காதல் கைகூடியதா? அடிலனைக் கொன்று ஹூணர்களின் வம்சத்தை நிர்மாணித்து சக்ரவர்த்தியாகும் தோரமானாவின் திட்டம் என்ன? கருங்காலி ராகுலனின் சுயநலத்தால் ஹூணர்களுக்கு விளைந்த பாதிப்பு என அத்தனை திசைகளிலும் கதையோட்டம் நகர்கிறது.
கதையைத் தொடங்கியதுதான் நமக்குத் தெரியும். முதல் காட்சியே நாயகன் அஜித் காதலுக்காக கசையடிபட்டு வீழும் காட்சிதான். ஆனால் அதற்குப் பிறகு அஜித் எடுக்கும் விஸ்வரூபம் அசத்தல். உபாத்தியாயரான அஜித்தின் திறன்கள் மெல்ல மெல்ல வாசகர்களின் மனக்கணக்கில் பேருருவம் கொள்கின்றன.
வில்லவர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களைத் தூண்டிவிட்டு ஹூணர்களை வீழ்த்தும் திட்டம் தோல்வியுற்றாலும், அடிலனுடனான பகை, காதல் மட்டுமல்ல நாட்டையும் காப்பாற்ற உதவுகிறது எப்படி என்பதுதான் கதை.
நாவலின் முன்னுரையில் ஆசிரியர் சாண்டில்யன், நாவலின் ஆதாரக்கதை, வரலாறு, புனைவுக்கதாபாத்திரங்கள் அனைத்தையும் தெளிவாக கூறிவிடுகிறார். அதனால், ஓரளவு கதையை நாம் தெளிவாக அணுக முடிகிறது. அதோடு கதையை உள்வாங்குவதற்கு இது பெரிய தடையும் கிடையாது.
பெண்களை போகம் கடந்து உறுதியாக காட்டியதற்கு சாண்டில்யனைப் பாராட்ட வேண்டும். சித்ராதேவி, கதாபாத்திரம் முழுக்க உணர்ச்சிவசப்பட்டு வெளிப்புறத் தூண்டுதல்கள் வெடிக்கும் தன்மை கொண்டது. ஆனால் இதற்கு மாறாக, அடிலனால் கடத்திவரப்பெற்று அவமானத்திற்கு உள்ளான காமினி இதற்கு மாறாக உறுதியான முடிவுகளை எடுப்பவளாக இருக்கிறாள். ஆனால் இதைத்தாண்டி, பல்தேவை கணவராக ஏற்பது, ராகுலனை விலக முடியாமல் சித்ராதேவி தவிப்பது ஆகிய நிகழ்ச்சிகள் எரிச்சலூட்டுகின்றன.
முழுக்க முழுக்க நாவல் அஜித்தின் நாயகத்துவத்திற்கானதுதான். அதேசமயம், குறைந்த இடங்களில் வந்தாலும் தோரமானாவின் அசகாய புத்திசாலித்தனம் அசர வைக்கிறது. வார்த்தைகளிலிருந்தே ஒருவரின் மனம், புத்தியை அளவிடும் தோரமானாவின் புத்திசாலித்தனம் அவரைக் கைவிடுவது கையாலாக பல்தேவ் போன்ற அசமந்தர்களை நம்புவதுதான்.
ராகுலனையும் இதில் கூறியே ஆகவேண்டும். நயவஞ்கம் என்பதை ஒற்றை வார்த்தையில் கூறவேண்டுமென்றால், ராகுலன் என்று கூறலாம். எந்த இடத்தில் இருந்தாலும், தன்னுடைய உயிரைக் காப்பாற்ற யாரையும் பலியிடும் கதாபாத்திரம் இது.
ஒரு நாடு, அதனைக் காப்பாற்ற அரசன் படும் பாடு, குறுக்கிடும் சதிகள், உறவுகளின் சூழ்ச்சி, தனிப்பட்ட உறவுகளின் வீழ்ச்சி, கொல்லைப்புற துரோகங்கள் என கதையை விறுவிறு சலிக்காதபடி நடத்திச்சென்றிருக்கிறார் சாண்டில்யன்.
-கோமாளிமேடை டீம்
நன்றி: புகழ் திலீபன்(குங்குமம்)