அழிக்கப்பிறந்தவன்: பரபர க்ரைம் த்ரில்லர் சொல்வது என்ன?


Image result for அழிக்கப் பிறந்தவன்
Add caption




அழிக்கப்பிறந்தவன்
யுவகிருஷ்ணா
டிஸ்கவரி புக் பேலஸ்


புத்தகத்தை கொடுத்த நண்பர் சுமாரான புக்தான். ஆனா நீ படிக்கணும் என்றார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை. 

படத்தின் மையம் பர்மா பஜாரின் சிடி, டிவிடி பிஸினஸ்தான். அதில் டானாக இருக்கும் வாப்பா, வெள்ளிக்கிழமை ஐட்டம் டான்ஸ் ஆடும்போது கொலை செய்யப்படுகிறார். உடனே பர்மா பஜார் முழுக்க பதற்றம் தொற்றுகிறது. யார் கொலைக்கு காரணம் என வாப்பாவின் குடும்பமே பலரையும் அடித்து உதைத்து விசாரிக்கிறது. இதற்கிடையே ஷங்கரின் நண்பன் படம் வேறு லீக்காகிவிடுகிறது. அதையும் வேறு ஷங்கர் ரசிகரான கமிஷனர் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். கதை ஒரே வாரத்தில் நடந்து முடிகிறது. 


இறுதியில் கொலைகாரன் யார்? எதற்கு இந்த கொலை என்பதுதான் கதை. 


யுவகிருஷ்ணாவின் எழுத்து சுவாரசியத்திற்கு கேட்கவேண்டுமா? பின்னி எடுக்கிறார். கதை தொடக்கமே க்ரைம் த்ரில்லர் படத்திற்கு டிரைலர் ஓட்டியது போல உள்ளது. கதையின் மர்ம முடிச்சுகளை கணிக்க முடியாமல் செய்யும் வாசகர்களை சந்தேகப்பட வைக்கும் விஜய சங்கர் கேரக்டர் அருமை. அதிலும் முக்கிய கேரக்டர் மூலமே கொலை செய்ததாக கதை முடித்து அதற்கப்புறம் கதையில் எதேச்சையாக சொன்ன டயலாக்குகளை நினைவுபடுத்தி நிஜ கொலைகாரரை அடையாளம் காட்டும் ட்விஸ்ட்.. அதிரிபோயிந்தி லக்கி சாரே. 

முன்முடிவுகளோடு இந்த புக்கை நான் படிக்கவில்லை. இலக்கியமில்லை என்று கூட சில விமர்சனங்களை நண்பர்கள் செய்தனர். அதையெல்லாம் மூளையிலிருந்து கடாசிவிட்டு படித்தேன். படிக்க சுவாரசியம் குன்றாத நாவல். எந்த இடத்திலும் சின்ன தடயம் கூட கிடையாது. குற்றவாளி யார் என்று கண்டுபிடித்துவிட வாசகரை மல்லுக்கட்ட வைக்கும் யுவாவின் எழுத்து பின்னி எடுக்கிறது. 

முக்கிய கேரக்டர்கள் வாப்பா, மாரி, நெடுஞ்செழியன், கொசு, மல்லிகா, இன்ஸ்பெக்டர் வெற்றி, சித்தூர் முருகேசன். கதையில் சிலர் குறிப்பிட்ட கேரக்டர்களை மட்டுமே வைத்து சம்பவங்களை நிகழ்த்தி செல்வார்கள். ஆனால் இந்தக்கதையில் கேரக்டர்கள் புதிது புதிதாக அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆச்சரியப்படுத்துவது அதுதான். பர்மா பஜாரில் வேலை நடக்கும் விதம், அரசை எப்படி சரிக்கட்டுகிறார்கள், அடுத்தவர்களை தினசரி வீழ்த்தி எப்படி மனிதர்கள் பிழைக்கிறார்கள் என யுவா எழுதும் வேகம் அசத்தல். அத்தனை டீட்டெய்ல்கள். 


நூலைப் பற்றி ஒரே உறுதிமொழியை நான் உங்களுக்குத் தருகிறேன். நூலை எடுத்தீர்கள் என்றால், விறுவிறுவென படித்து முடித்தபின்தான் நூலை கீழே வைப்பீர்கள். அவ்வளவு சுவாரசியமாக புத்தகத்தை எழுதி மலைக்க வைத்திருக்கிறார் யுவகிருஷ்ணா.

- கா.சி.வின்சென்ட் 


நன்றி: புகழ் திலீபன்(குங்குமம்)