உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட் சாத்தியமா?





நன்றி: தினமலர் - பட்டம்








உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட்!

 பதினாறு நாடுகளைச் சேர்ந்த 30 ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில், உலக மக்கள் அனைவருக்குமான புதிய உணவு முறையைத் தயாரித்துள்ளனர்.

உலக மக்கள் தம் பொருளாதார வசதி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு உணவுமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் நிலப்பரப்பு சார்ந்த உணவுமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்த உணவுகளிலும் ஒருவருக்கு தினசரி அவசியத்தேவையான சத்துகள் (தோராயமாக 2500 கலோரி) கிடைக்கிறதா என்றால் இல்லை என்று கூறவேண்டும்.

புதிய டயட் அறிமுகம்

இதற்கு தீர்வாகத்தான் முப்பது ஆராய்ச்சியாளர்கள், மக்களுக்கு பொதுவான உணவுமுறையைப் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்த ஆய்வறிக்கை லான்செட் இதழில் வெளியாகி உள்ளது. கார்போ டயட் முதல் பேலியோ டயட் வரை எக்கச்சக்க டயட்கள் நடைமுறையில் உள்ளன. இப்போது எதற்கு புதிய டயட்? நாம் தற்போது சாப்பிடும் உணவு முறைகள் பூமிக்கும் நம் உடலுக்கும் ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதே இதற்கு காரணம்.
பசுமை இல்ல வாயுக்கள், செயற்கை உரங்கள்(நைட்ரஜன், பாஸ்பரஸ்), நிலவளம் சீர்குலைவு, உணவு வீணாதல் ஆகிய பிரச்னைகள் தற்போது பெரிதாக எழுந்துள்ளன. உணவுமுறை மாற்றங்களால் உலகில் 116 லட்சம் பேரின் (19-23.6% ஆக குறைவு) உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

தற்போது ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள புதிய உணவுமுறை மூலம்,  ஆயிரம் கோடிப்பேருக்கு (2050இல்) உணவிட முடியும். மேலும் இதயநோய்கள் மற்றும் தொற்றா நோய்களால் ஏற்படும் பதினொரு லட்சம் மரணங்களையும் தடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

உணவு உற்பத்திக்காக நாம் பயன்படுத்தும் பொருட்கள், விலங்குகள் இயற்கைச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  வளரும்  நாடுகளிலுள்ள பல்வேறு பொருளாதார வேறுபாடுகளைக் கொண்ட மக்களுக்கான உணவுப்பொருட்கள் சந்தை, இறைச்சி உணவுகளையும் கட்டாயமாக்குகிறது.

என்ன வேறுபாடு?

புதிய உணவுமுறை, சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை தவிர்த்து ஆரோக்கிய உணவுமுறைகளை பரிந்துரைக்கிறது. நடுத்தர உயரிய வருமானம் கொண்ட நாடுகளில் காய்கறிகள், பழங்கள், பருப்புகள், கொட்டைகள், தானியங்கள் ஆகியவை பயன்படுகின்றன.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இருபது நாடுகளின்(ஃபிரான்ஸ் , இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்டவை) உணவு முறையிலிருந்து இது பெரிதும் மாறுபட்டதல்ல.

குறைகள்

சூழல் சார்ந்த பயன்களோடு, வறுமை நிலையிலுள்ள மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் உள்ளது புதிய உணவுமுறை  என்பது ஆராய்ச்சியாளர்களின் வாதம். அதேசமயம், இது உலகிலுள்ள அனைவருக்கும் முழுமையான சத்துகளை வழங்கும் உணவு முறை கிடையாது.

உலகில் நான்கு பேரில் ஒருவர் பதினைந்து வயதுக்கு உட்பட்டவராக உள்ளார்.  புதிய உணவுமுறை குழந்தைகள், சிறுமிகள், கர்ப்பிணிகள் ஆகியோரை கருத்தில் கொள்ளவில்லை. மூளை வளர்ச்சிக்கு தேவையான  துத்தநாகம், இரும்பு, அயோடின், வைட்டமின் ஏ, பி12 ஆகிய சத்துகள் இறைச்சியிலிருந்து பெறப்படுகின்றன.  இறைச்சியை முழுமையாக தவிர்த்தால் இச்சத்துகள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது.

ஊட்டச்சத்துக் குறைவு 
நுண்ணூட்டச்சத்துக் குறைவு  82 கோடி
வளர்ச்சி குன்றிய குழந்தைகள்  5.1 கோடி
உடல்பருமன் பாதிப்பு 200 கோடி
 (ஜனவரி 19, 2019 தகவல்படி)
தகவல்:The Lancet Journal

வெளியீட்டு அனுசரணை: தினமலர் பட்டம்