லவ் இன்ஃபினிட்டி: நீ என்னிடம் மட்டும் பேசேன் தோழி
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
அணைதாண்டி வெள்ளமாய் விரைந்தோடி வரும்
ஆற்றிடம் விலாசம் கேட்க முடியுமா?
அதுபோலத்தான் இத்தனை குறைகளிலிருந்தும்
என்னிடம் சில குறைகள் இருப்பதாக
நினைத்துக் கொள்கிறேன்.
மனதில் உள்ளதை மறைக்காமல் வெளியில்
சொல்வதால் நிறைய விளைவுகள் விளைந்திருக்கின்றன.
வெளுத்ததெல்லாம் சோறு என்று நம்பும் வெகுளி நான்.
எல்லா பசங்களும் விவரமா இருக்காங்க நீயும் இருக்கிறயே என்றாள் அம்மா.
தொண்டு சுத்துறத நிறுத்திட்டு உருப்படற வழியப்பாரு என்றார் அப்பா.
வசவுகளை வாங்கிக்கொண்டு யோசித்தேன்.
எப்படி இந்த உலகில் வாழப்போகிறேன்?
என்னால் சராசரியாக வாழ முடியாது.
வாழத் தெரியாது. வாழவும் மாட்டேன்.
சாதனையாளன் சராசரி வாழ்க்கை நடத்தலாமா?
நிரந்தரமானவன் சரித்திரம் படைப்பவன் சாவைக்
கண்டு பயப்படலாமா?
இந்த உலகம் மட்டம் தட்டும் முட்டாள்களுக்கு முன்னுரிமை
வழங்குகிறது.
பணம்தான் வாழ்க்கை என்று வரைமுறை தந்தவர்கள்
ஏராளம்.
பணத்தால் பதவியைப் பிடித்தவர்களும் ஏராளம். வறுமை
எனக்கு இல்லை. ஆனால் அதன் சுகம் அறியமுடியாததே
என் வருத்தம்.
எதை சொல்ல வந்தேன்? இந்தியாவில் கிளம்பி ஆப்பிரிக்கா வந்துவிட்டேனே?
அன்பே உன் நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காக நிகழுக்கு வருகிறேன்.
உன்னை முதன்முதலில் பார்த்ததும் பிடித்துப்போனது. ஏன் எப்படி என்று கேட்காதே. நான் கேட்டே இன்னும் பதில் வரவில்லை.
உன்னிடம் பேசத் தயங்கித்தான் கவியிடம் பேசச் சொன்னேன்.
நீ எனக்கு தோழியானதில் மிக மகிழ்ச்சி. ஆனால் நீ தோழி மட்டும்தானா என்று பதில் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் சொல்லுவேன்.
எனக்கு சுயநலம் ஜாஸ்தி. நீ என்னிடம் மட்டும்தான் பேசவேண்டும் என விரும்பினேன். அஸ்கு புஸ்கு உனக்கு பேராசை என்கிறாயா?
வைத்துக்கொள். நான் அப்படித்தான்.
(காதல் சொல்லுவேன்)