லவ் இன்ஃபினிட்டி: காதல் தேசம் நானும் கடந்தேன்
அனா கரோலினா\ பின்ட்ரெஸ்ட் |
20
லவ் இன்ஃபினிட்டி 20
குமார் சண்முகம்
தொகுப்பு: இளங்கண்ணன், விசாலாட்சி
பிருந்தாகிட்ட நான் என்ன சொன்னேன். நான் எதுவுமே சொல்லல. நீ அருகம்புல்லு மாதிரியான அழகின்னேன்.
சார், என்ன நான் பின்னாடி சுத்தும்போதெல்லாம் ரெட் சிக்னல் கொடுப்பாரு. இப்ப க்ரீன் கிடைச்சுரும் போலயே ன்னு சிரிச்சா.
கள்ளி!
ஐஸ்க்ரீம் அவளோட கழுத்தில இறங்கிறது தெரிஞ்சுது.
அவளுக்கு எல்லாமே தெரியும். எனக்கு தெரிஞ்சு கவிக்கு அடுத்தபடியா ஏதாவது கிஃப்ட் அனுப்பிக்கிட்டே இருக்கிற ஒரே ஜீவன் அவதான்.
திடீர்னு காலேஜூக்கு ஒரு பார்சல் வந்தது. எடுத்துப் பார்த்தா, சட்டை. இவளோட பேரும் நம்பரும் மட்டும் இருந்தது. எதுக்கு இதெல்லாம் பணறேன்னு கேட்டேன்.
ஐபிசி படி இதெல்லாம் தப்பா? ன்னு ஒரு கேள்வி கேட்டா. அசந்துட்டேன்.
அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். இது ஸ்கூல்ல படிச்சப்ப பார்த்த பிருந்தா இல்லன்னு. என்ன அப்டேட். வேகம். அதனால்தான் சொல்றேன். பெண்களிடம் ஆண்கள் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. அவர்களாக விரும்பினால் தோற்கிற மாதிரி தன்னைக் காட்டிக்குவாங்க. ஆனால் உண்மையில் தோற்கிறது ஆண்கள்தான்.
நீ படிக்கிற காலேஜ் புள்ளைங்க எல்லாம் மலைக்கு பக்கத்துல முருகன் கோயில் படிக்கட்டில உட்கார்ந்திருக்கிறத நிறைய முறை பாத்திருக்கேன். நீ அங்கே போயிருக்கியா?
ஒரே ஒரு நொடி என்னைப் பார்த்தாள். உடனே ஐஸ்க்ரீமை தின்றபடி, நீ கூட்டிட்டு போனா போயிருப்பேன்.
இப்படிப்பேசினால் நான் என்ன சொல்லுவேன்? சொல்லுங்கள்.
பேசிக்கொண்டே உதட்டை ஈரப்படுத்திக் கொண்டிருந்தாள். ஐஸ்க்ரீம் அவ்வளவு ருசியா என்ன?
நீ என்னை கட்டிப்பிடியேன்.
ம்ஹூம் ?
போடா மக்கு!மக்கு
என்றபடி அவளே என்னை அணைத்தாள். பார்க்கிங் ஏரியாவில் இருந்ததால் பெரியளவு யாருக்கும் தெரியாது. கழுத்தில் ஸ்பின்ஸ் பவுடர் மணந்தது.
இன்னும் இறுக்கமா இறுக்கமா என காதில் கிசுகிசுத்தாள். என் கைகள் அவளின் இடுப்பைச் சுற்றிப் படர்ந்தன. உடல் முழுக்க பரவிய காதலால் அந்த நேரம் எனக்கு பிடித்திருந்ததா என்று தெரியாது. ஆனால் அப்படி ஒரு அணைப்பு அந்த நேரம் தேவையாக இருந்தது.
திடீர்னு மனதில் மைதிலி தோன்ற, கைகள் தானாகவே தளர்ந்தன. ம்ம் என மெலிதாக பிருந்தா சிணுங்கினாள். என்னாச்சுப்பா..பிடிக்கலையா.
இல்ல.. நான் முழுமையா இல்ல.
வேற யாரையாவது விரும்பறியா?
ஆமா!
நான் உனக்காக ஸ்கூல்ல இருந்து காத்திருக்கேன். உனக்கு புரியுதா?
நான் முழுமையா இப்போ இல்லை. அப்படி இருந்தாத்தான் உன்கிட்ட வருவேன். இன்னொருத்தவரை நினைச்சுட்டு இன்னொருத்தரோட வாழ முடியாது.
இதுதான் உன்கிட்ட பிடிச்ச விஷயம். நீ கிடைச்ச எதையும் ஏத்துக்கிறதில்ல. எதையும் நேரடியா பேசிடற குணம் பெரிய விஷயம். நீ அப்போ திரும்பி வரும்போது, உனக்குள்ள நான் மட்டும்தான் இருக்கணும் பாத்துக்கோ.
அவ்வளவுதான்.
2
கவிகிட்ட எனக்கு பிடிச்சதே, அவகிட்ட நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்களோ அதை மட்டும் புரிஞ்சிக்கிட்டு செய்வா. எக்காரணம் கொண்டும் தேவையில்லாத விஷ யங்களில் தலையிட மாட்டா. அவளோட இங்கிதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா மைதிலி இந்த விஷயத்தில காணா மலைமுழுங்கி மவ. என்ன யோசிக்கிறான்னு தெரியாது. என்ன செய்யப் போறாள்னு ம் புரியாது. செவத்த சிறுக்கி மவ. அலைஞ்சு காய வைப்பா.
அத்தனை பிரச்னையிலும் கவி எனக்க கூடத்துணையா நின்னுருக்கா. எதுக்குன்னு தெரியல. அவ எனக்கு தோழியைத்தாண்டிய ஒரு உதவி செய்யும் கடவுளின் கரமாத்தான் பார்க்கிறேன்.
எந்தப்பிரச்னையிலும் அசராம தனக்குப் பிடிச்சத அவ செஞ்சா. இரண்டு மூணு காதல் தோல்வியிலும் கூட தானே சமாளிச்சு மீண்டு வந்தா. காதல் முறிவுங்கிறது பெண்ணால் ஆணுக்கு மட்டும் துக்கமில்லை. அந்த முடிவு அந்த ரெண்டு பேர்த்தோட பின்னாள் நட்பைக் காப்பத்தான்னு தெரியும் போது, அது வேற தன்மையா மாறுது. அவளோட படிப்பு எல்லாமே அவ மொதல்ல இருந்த தன்மையை இன்னும் வேற லெவலா மாத்துச்சு. அது என்னாலயே நம்ப முடியல.
3
எங்க அப்பன் எப்பவுமே சொல்லுவாரு. மேல் பாக்கெட்டுல பணம் வந்துருச்சுன்னா, குணம் கீழ்பாக்கெட்டுக்கு மாறியிரும்பாரு. அதுக்கு நெறைய உதாரணங்கள் எங்க ஊர்லயே உண்டு. இந்த விஷயத்துல கவி மாட்டல. அப்பன் என்னதான் பாசமாய் பேசறமாதிரி இருந்தாலும், கவனமாக இருக்கணுங்கிறத உடல்மொழில காட்டிக்கிட்டே இருப்பாரு.
சொந்தங்களால அவரு படாதபாடு பட்டாரு. வாழறதுக்கு வழியில்லாம கருக்கம்பாளையத்துல இருந்து புதுப்பாளையத்துக்கு வந்தாரு. வாழ்க்கை கொஞ்சம் நிலைக்கிறதுக்குள்ள அவரோட அக்கா தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க. பங்காளி சண்டையில பங்கு நிலமும் கவுண்டனுக பிரிச்சு எடுத்துக்கிட்டானுங்க. மிச்சம் ஒடைஞ்ச தெளுவுச்சட்டிதான் மிச்சம்.
அத்தனையிலும் எங்கப்பாக்கிட்ட இருந்தது உடம்பும், உழைப்பும் மட்டும்தான். நிறையப் பேரு உறவு, நட்புன்னு ஏமாத்துனாலும் போனாப்போகுதுன்னு எங்க அப்பா வேலை செஞ்சாரு. இன்னைக்கு அரிசிச்சோறு பருப்புக் குழம்பு ஊத்தி சூடா திங்கிறோம்னா அதுக்கு பின்னாடி அத்தனை அவமானம், தோல்வி, அழுகை, வலின்னு நிறைய விஷயங்கள் இருக்கு. இதையெல்லாம் ஏன் சொல்றேன். நான் வெறும் பிளேபாயாக மட்டும் இருக்க விரும்பலைங்குறதுதான். நான் எல்லார்த்தையும் கவனிச்சிக்கிட்டு அரவணைச்சு போக நினைச்சேன். எனக்கு பக்கத்துல இருந்தவங்கள காதலிச்சேன். அவங்க பெண்களாக இருந்தது தற்செயலானது. அதுக்கு நான் காரணம் கிடையாது. ரைட் .
நான் பழகுன சுமதிகிட்டயும் எனக்கு இன்னைக்கும் அவ கண்ணைப் பார்த்து நேருக்கு நேரா பேசமுடியும். நான் நேசிச்ச, என்னை நேசிச்ச பெண்களிடம் அப்படித்தான். எல்லார்கிட்டேயும் நான் விளக்கம் சொல்லல. சில பேர்கிட்ட என் சூழலை புரிஞ்சுக்க சொன்னேன். சிலரிடம் காலமே புரிய வைக்கும் விலகி வந்தேன். இந்த உலகில் யாரும் யாரை நம்பியும் கிடையாது. அவ்வளவுதான். தீண்டா திருமேனி புக்ல ஆர்.வெங்கடேஷ் எழுதியிருப்பார். நட்போ, காதலோ ஒரு அலைவரிசை செட் ஆகணும்னு. அது சின்ன வார்த்தையாக இருந்தாலும் அவ்வளவு உண்மை இருக்கு அதுக்குள்ள.
5
அந்த நேரத்தில்தான் நினைக்கவே கஷ்டமான செய்தியும் கிடைச்சுது. மைதிலி பஸ்சில இருந்து விழும்போது, மயங்கி விழுந்திருக்கா. மூக்கில ரத்தம் வந்துருக்கு. செக் பண்ணப்போ, மூளை சம்பந்தமாக பிரச்னை ஒண்ணை சொல்லியிருக்காங்க.
மரபுரீதியான வர்ற நோய்ங்கிறதால காப்பாத்த முடியாதுண்டு சொல்லிட்டாங்க. எனக்கு உலகமே இருண்ட மாதிரி இருந்தது. அதுக்கப்புறம் நடந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு கனவு மாதிரி இருந்தது.
(காதல் சொல்லுவேன்)