துல்லியமான உணர்ச்சிப் பெருக்கு கொண்ட சிறுகதைகள் - தீண்டா திருமேனி




Image result for தீண்டா திருமேனி
பனுவல்




தீண்டா திருமேனி

ஆர்.வெங்கடேஷ்

அகநாழிகை



மொத்த தொகுப்பில் பதினெட்டு கதைகள். ஒவ்வொன்றும் அதன் விரிவான தகவல்கள், நறுக்கென்ற வாக்கியங்கள் ஆகியவற்றால் தனித்து தெரிகின்றன.

ஆசிரியரின் கதாபாத்திரங்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நினைவுகளை, கசப்புகளை சுமந்துகொண்டு திரிகிறார்கள். முதல் கதையான அலைவரிசை தொடங்கி, புதிய கோணங்கள் குறுநாவல் வரைக்கும் இது அப்படியே தொடர்கிறது. இறுதியில் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லது இறைவனைத் தஞ்சமடைந்து ஆறுதல் அடைகிறார்கள். இதுவேதான் இந்த நூலின் அடிச்சரடாக உள்ளது.


குருஷேத்திரம், ஒவ்வொரு முறையும், ஒரு கேள்வி ஆகிய சிறுகதைகளின் நாயகர்கள், எளிமையானவர்கள். அதேசமயம் கனவுகளை அழியவிட்டு வேடிக்கை பார்த்து மனம் புழுங்குபவர்கள். வாழ்க்கையின் எதார்த்தத்திற்காக சந்தோஷ் அடிபணிந்தாலும் தான் அடகு வைக்கும் தன்மானம், சந்தோஷம் ஆகியவை பற்றிய கவனம் எப்போதும் அவருக்கு இருக்கிறது.

 ஒரு கேள்வி, வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு பணிந்தவரை(மணி) ஒரு கேள்வி வெடிக்கும் எரிமலையாக்குகிறது. அது மனதில் புதையுண்டு போனாலும் சிறிய கேள்வி, அவர் பெற்ற தோல்வியை நினைவில் காடுள்ள மிருகம் போல திரும்ப கிளறுகிறது. அனைவருக்கும் வாழ்க்கை இரண்டாவது வாய்ப்புகளை வழங்குவதில்லை.

கோபப்படுவது குறித்து அவர் சொல்லும் வார்த்தைகள் நித்ய சத்தியமானவை.

புதிய கோணங்கள், வாழ்க்கையின் பார்வையை மாற்றினால் எல்லாமே மாறும் என்பதை சொல்லிச்செல்கிறது. ஆபீஸ் போகும் கணவர், மனைவிக்காக தன் வேலையைத் துறந்து வீட்டில் ஹவுஸ் ஹஸ்பெண்டாக மாறுகிறார். இது அவர்களின் உறவைப் புதுப்பிப்பதோடு, குழந்தைகளுக்கு தந்தையின் நூறு சதவீத அன்பும் கிடைக்கிறது. தந்தை தங்கள் குழந்தைக்கு சொல்லித்தரவேண்டியது ஒன்றுண்டு, அது அவர்களின் தாயைக் காதலிப்பதுதான். அதுதான் கதை. அவ்வளவு நெகிழ்ச்சியாக புத்துணர்ச்சியாக படிக்க முடிகிறது.

வாக்கியங்கள், சொற்றொடர்கள் இழுக்காமல் சட்டென சொல்ல வந்ததை சொல்லி சில இடங்களில் சிந்திக்க வைத்து, சில இடங்களில் அக்கதாபாத்திரத்திற்காக பிரார்த்திக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர்.

அவ்வகையில் தீண்டா திருமேனியை கைகளால் தீண்டி வாசிப்பது, உங்களுக்கு சிறந்த வாசிப்பனுவத்தைத் தரும் என்பது நிச்சயம்.

- கோமாளிமேடை டீம்