பாலின பாகுபாடற்ற பள்ளிகள் - என்ன பயன்?





Related image
familiesmagazine.com.au




பாலின பாகுபாடற்ற சூழல் சாத்தியமா?

செய்தி: பாலின பாகுபாடற்ற குழந்தைகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கான பொம்மைகள், உடைகள் உலகெங்கும் விற்பனையாகத் தொடங்கியுள்ளன.
ஆண்களுக்கு ப்ளூ கலர், பெண்களுக்கு பிங்க் கலர் என பிரிக்கும் பாகுபாடு கூட இனி இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு கார், ரயில் பொம்மைகளும் பெண் குழந்தைகளுக்கு கரடி, பார்பி பொம்மைகளும் வாங்குவது கூட தற்போது குறைந்து வருகிறது. என்ன காரணம்? பாலின பாகுபாடு குறித்து உணர்வு பெற்றோர்களுக்கும் ஏற்பட்டதுதான்.

பாலின பேதமற்ற உடைகள்

பாலின பாகுபாடற்ற கலாசாரத்தில் ஆண், பெண் குழந்தைகளுக்கான பொம்மை, உடை என்பது தனித்தனியான தேர்வாக இருக்காது. பெண்குழந்தைகள் கிச்சன் செட் வைத்து விளையாடுவதும் கூட அவர்களின் தேர்வாகவே இருக்கும்.மேற்குலகில் தொடங்கிய இந்த கலாசாரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம், ஃபிளிப்கார்ட், தன்னுடைய வலைத்தளத்தில் பாலின பாகுபாடற்ற பொம்மைகளுக்கான ஃபில்டர் ஒன்றை உருவாக்கியுள்ளதுதான்.

இதனால் என்ன லாபம்? குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளும் துணிச்சலுடன் வளர்வார்கள். பெண் என்றால் சமையலுக்குத்தான் லாயக்கு, ஆண் என்றால் அலுவலக வேலை பார்ப்பான் என்பது போன்ற பிற்போக்குத்தனங்களை தவிர்க்கும் செயற்பாடு இது.

சுயமாக தேர்ந்தெடுங்கள்

”நவீன தலைமுறை குழந்தைகள் டெக்னாலஜியுடன் வளர்ந்தாலும் ஆண், பெண் என்ற பேதம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. ஆனால் எதிர்காலம் பாலின பாகுபாடற்ற குழந்தைகளை நம்பியே உள்ளது. குழந்தைகள் தங்கள் உடைகளை, பொம்மைகளை பெற்றோரின் தூண்டுதலின்றி சுயமாக தானே தேர்ந்தெடுப்பதில் தொடங்குகிறது” என்றார் உளவியலாளரான வர்ஷா மகிஜா.
வீட்டுவேலைகளை முந்தைய தலைமுறை ஆண்கள் மறுக்க காரணம், அவை பெண்களுக்கானவை என நம் மூளையில் பதிந்துவிட்ட நச்சு சிந்தனைகள்தான். அவரவர் திறனுக்கேற்ப வேலைகளை வீட்டிலும் பிரித்துக்கொண்டு செய்யலாம்.  அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் குழந்தைகளை ஆண், பெண் என பிரிக்காமல் தேபீஸ்(Thebies)என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

எப்படி பழகுவது?

ஸ்வீடனில் பாலின பாகுபாடற்ற பள்ளிகளை அரசு தொடங்கியுள்ளது. இதில் ஆசிரியர்கள் மாணவர்களை நண்பர்கள் என்றே அழைக்கின்றனர் என்பதும் குறிப்பிட்டத்தக்க முன்னேற்றம் ஆகும்.  ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பாலின பாகுபாடற்ற பொருட்கள், உடைகள் விற்பனையிலும் சாதனை படைத்து வருகின்றன.

வீட்டில் ஆண், பெண் குழந்தைகளுக்கு இந்த வேலை எனப் பிரிக்காமல் அனைத்து வேலைகளையும் சொல்லித் தரலாம்.  பிடித்த நிறத்தில் உடைகளை அணிவதை குழந்தைகளின் விருப்பத்திற்கே விட்டுவிடுங்கள். சமூகத்தை மாற்றிய ஆண்கள் மற்றும் பெண்களின் தன்னம்பிக்கைக் கதைகளைக் கூறலாம்.

பள்ளியில், 8 வயது வரை பாலின பாகுபாடற்ற உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதோடு, பள்ளிகளில் மாணவர்களை அழைக்கும் விதமும் மாறவேண்டிய தேவை உள்ளது. பாடத்திட்டம் வழியான மாற்றமும் இதில் முக்கியமானது.  குழந்தைகளுக்கு பாலின பாகுபாடற்ற உடைகளை பரிசளிக்கலாம். குழந்தைகளை ஆண், பெண் எனப் பிரித்து பார்ப்பதைத் தவிர்க்கலாம்.

”ஆண், பெண் வேறுபாடுகளை குழந்தைகள் சுயமாகத் தெரிந்துகொள்ள உதவுவதே பெற்றோரின் பணி” என்றார் பெங்களூருவைச் சேர்ந்த மார்க்கெட்டிங் நிபுணரான தீபிகா. இவர் பாலின பாகுபாடற்ற சூழலுக்காக இன்ஸ்டாகிராமில் செயற்பட்டு வருகிறார். பேபிசக்ரா என்ற வலைத்தளத்தில் 5 சதவீத பெற்றோர் பாலின பாகுபாடு பற்றி விவாதிக்கத் தொடங்கியுள்ளது நல்ல மாற்றம்.”பெண் குழந்தைகளைப் பற்றி பேசும்போது அழகு டிப்ஸ்களைத்தான் முதலில் கேட்டனர். பின்னர்தான், பெண் குழந்தைகளின் அறிவு மற்றும் உடல்நலன் பற்றி பேசினர்” என்றார் வலைத்தள நிறுவனரான நையா சாகி. 

தகவல்:ET Magazine