லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லப் போறேன்!
behance |
19
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: ராஜா தேசிங்கு, மியான் வாட்ஸ்
நாம எல்லாத்தையும் படிச்சிருப்போம் தெரியும்னு நினைப்போம். ஆனா, உண்மை என்னன்னா, தேவைப்படும்போது அதனை மறந்திருவோம். நம் அனுபவத்துல பதிஞ்ச விஷயங்கள் மட்டும்தான் நம்மை எப்போதுமே காப்பாத்தும்.
மத்த விஷயங்கள் எல்லாம் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நம்மை கைவிட்டுவிடும். இங்க அறிவுங்கறதும், அனுபவம்கிறதும் வேறுவேறு. நீங்க ஓஷோ, வேதாத்திரின்னு பல பண்டல் புத்தகங்கள ஷெட்யூல் போட்டு படிக்கலாம். இப்போ பாருங்க, காதலோ, காமமோ, ஒரு உறவு குறித்தோ நெருக்கடி வருது. அதில் எடுக்கிற முடிவு உங்க வாழ்க்கையை மாத்தப்போவுது. இதில நீங்க என்ன செய்ய முடியும்? உங்க அறிவு உதவும்னு நினைக்கிறீங்களா? நிச்சயம் இல்லை.
நான் சந்திச்ச எல்லா பெண்களிடம் நான் இந்த விஷயத்தைப் பார்த்தேன். அதாவது, நாம சாதிக்க முடியாததை இவன் சாதிக்கணும்னு ஒரு எண்ணம். தூண்டுதல் இருக்கு. ஆனால் அது ஏன்? அப்படி இருக்கணும்னு என்ன இருக்கு?
நான் அவங்களுக்கு எழுதின letter லேயும் அன்னைக்கு அப்படித்தான் எழுதியிருக்கேன். ஆகா வைரஸ் எப்படி பரவுது பாத்தீங்களா? ஓகே இப்போ, மைடியர் மைத்துவுக்கு எழுதின கடிதத்தை மறுபடியும் படிக்கப் போகிறேன். நீங்களும் என்னோட வாங்க!
டயரியிலிருந்து.....
உன் advise கேட்டு தெளிவாகினேன். எப்பவும் இந்த நிலைதான் நிரந்தரம்கிறது மட்டும் உண்மை. உன் அன்பிற்கு நன்றி சொல்லக்கூடாது. ஆதலால்ல, உன் அன்பை இன்பமாக ஏற்றுக்கொள்கிறேன்.
பிரிந்து இருப்பதால், நமக்குள் பிரிவோ, இடைவெளியோ இருக்க கூடாது. படிப்பில் நீ எப்படியும் ஜெயித்து விடுவாய். பெண்களை படிப்பில் மிஞ்சுபவன் எவனும் இன்னும் பிறக்கவில்லை. டைவர்ட் ஆகலீன்னா, பெண்களை எதிலும் டச் பண்ணவே முடியாது. டச் சேஸி சூடுடா நைனா ன்னு சவாலே விடலாம்.
ஆமாம். மறந்தே போனேன். நீயும் என்னை நினைத்துக்கொள்வாயா? இப்படிக் கேட்க கூடாதுதான். என்னமோ மனசில் ஒரு ஆசை. கேட்டுவிட்டேன். உனக்கு இருக்கும் எத்தனையோ Engagements இல் பரபரப்பில், சூழ்நிலையில் என்னையெல்லாம் நினைவில் கொள்ள உனக்கு நேரம் ஏது?
ஆனால் நான் அடிக்கடி உன்னை நினைச்சுக்குவேன். என்னைப் பார்த்து ஒரு புன்னகை கூட சிந்தக்கூடவா தோன்றாமல் போனது? பரவாயில்லை அதையெல்லாம் விடு.
நான் ஆனந்த விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் சேரலாம்னு இருக்கேன். நானும் ஸ்ரீராமும்தான். அதிர்ஷ்டமா, திறமையான்னு சோதிக்கப் போறேன்.. வாய்ப்பிருந்தால் ஜெயிக்கலாம்.
முடிக்க மனசே இல்லை. ஆனால் Paper முடிந்துவிட்டது. அனைத்தையும் ஒருநாள் முடித்துத்தானே ஆகவேண்டும் பேபி. ஒகே tatatata.....
25 ஆம் தேதி எழுதின கடிதத்தில் நிறைய Changes செய்து 26 ஆம் தேதி மறுபடியும் இந்த பேப்பரில் எழுதினேன். பிழை, காலதாமதம் பொறுப்பாய் என நம்புகிறேன்.
அன்புடன்
உன்
மோகன்
உண்மையில் இந்த கடிதத்தை அப்போது எப்படி எழுதியிருப்பேன்னு நினைச்சா, ஆச்சரியமாத்தான் இருக்கு. என்ன சிந்தனையில் என்ன மாதிரி ரியாக்ட் பண்ணேன்னு பார்த்தா எனக்கு வெட்கமாக கூட இருக்கு. ஆனால் கடிதத்தை ஒண்ணும் பண்ண முடியாது. அது காலத்தின் சாட்சி இல்லையா?
அப்போ எனக்கும் மைதிலிக்குமான உறவு நட்பா, காதலா எந்த நிலையில் இருந்ததுன்னு தெரியலை. அருணா மேட்டர் தெரிய வந்த திலிருந்தே அவ, அதிகமாக என்கூட பேசறதில்லை. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அவளுக்கு பிடிச்சிருந்தது, விரும்பினவனுக்கும் ஓகே. இருவரும் லக்சு சோப்பும் நுரையுமாக மாறியிருக்கிறார்கள். இதில் இவளுக்கென்ன பிரச்னையாமாம்.
அப்புறம், முக்கியமாக வாசு மாமா கல்யாணத்துக்கு போனேன். அப்பன் எப்பவும் கிடைச்ச வாய்ப்பை உடக்கூடாதுன்னு தங்க மோதிரம், கதர் வேட்டி, சட்டைன்னு மிடுக்கோட போய் அப்புறங்கண்ணுன்னு பேசி அட்டன்டன்ஸ் போட்டு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிட்டாரு. இந்த விஷயத்துல எங்கப்பனை ஜெயிக்கறது என்னாலேயே ஆகாது.
அது ஒரு கணக்கு இருக்கு. இவன் இந்த கல்யாணத்துக்கு வந்தான். நம்மளப் பார்த்தான், பேசுனான்கிறதோட. நம்மோட விசேஷத்துக்கு வந்தானா, சரியா பேசுனானா, ஃபர்ஸ்ட் ரெஸ்பெக்ட் கொடுத்தானாங்கிற விவகாரமெல்லாம் பின்னாடியே வரும். இப்படி பார்த்ததாலதான் மனுசன் இன்னைக்கும் ஊரு விவகாரம்னா சம்பான எங்கப்பா ன்னு பிரசிடெண்டு கூப்படறாரு. சும்மாவா.. ஆனால வூட்டுக்கு ஒண்ணுன்னா போய் பாத்துக்க போ அப்படிம்பாரு. அம்மா, என்னைப் பார்ப்பா. நான் பல்லக்கடிச்சிட்டு அந்தப் பக்கம் போய்ட்டு அவர் செய்யற வேலையை செய்வேன். கடமைகளை எப்பவும் பிடிச்சிருக்கிறதோ இல்லையோ செய்யணும். ஏன்னா அதனால்தான் அது பேரு கடமை. பிடிக்காத விஷயங்கள்னு மரம் தன்னோட வேரை ஒதுக்க முடியாது இல்லையா?
இந்த நேரத்துல பிருந்தா வேற பாத்துக்க விசேஷத்துல எல்லாம் ஏதோ ஒரு சிக்னல்ல காட்டறா. கல்யாணத்துக்கு போய்ட்டு சாப்பிட்டு வெளிய வரும்போது ஐஸ்க்ரீம் திடீர்னு கண்ணு முன்னால் வருது. மாயாபஜார் சினிமாவான்னு பாத்தா. பிருந்தா, இந்தா சாப்பிடு உனக்காகத்தான் வாங்குனேன்ங்கிறா. என்னமோ அனைக்கு கத்தரிப்பூ கலரும் வெள்ளையும் கலந்த சுடிதார் போட்டிருந்தா. எனக்கு கத்திரப்பூ கலர் ரொம்ப பிடிக்கும். பெரும்பாலான பள்ளிக்கூட போட்டோவுல அதே கலர் சட்டையிலதான் இருப்பேன். மாமா எப்படி இருக்காங்க, அத்தைன்னு விசாரிப்பு வேற. அவ, அரச்சலூர்ல நவரசத்துல படிச்சிட்டிருந்தா. நான்தான் ஆர்ட்ஸ். அவ பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ். நம்ப முடியுதா? காலம் செய்யுற ஆச்சரியத்துல இதுவும் ஒண்ணு.
காலேஜூல அவளுக்கு லவ் லெட்டர் குடுத்த பசங்களப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தா. பெரிய அழகி கிடையாது. மாநிறத்தில திருத்தமான முகமாக இருந்தது. சிரிச்சா தெத்துப்பல் வலது புறத்தில் அழகு காட்டும். படர்ந்த முகம். சிரிப்பு சுனாமி மாதிரி அடையாளம் காட்டாம திடீர்னு வந்து மோதும் பாருங்க.. வாவ் சொல்லுவீங்க.
ஏய், என்னப்பா அப்படி பார்க்கிறே?
ஆண்களோட பிரச்னையே. டக்குன்னு ஏதோ நினைவுகளுக்குள்ள மூழ்கறதுதான். ஆனா, பெண்களிடம் நான் பொய், மெய் என ரெண்டுல எது சரியோ சிச்சுவேஷனுக்கு பொருந்துதோ அதைச் சொல்லுவேன்.
இப்போ நான் என்ன பதில் சொல்ல?
(காதல் சொல்லுவேன்)