தேர்தலின் கதை 2 - தாமரை மலர உதவிய கை!





Image result for narasimha rao caricature
Telegraph India



தேர்தலின் கதை 2

பதினேழாவது மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வருவார்கள்? மோடியா, ராகுலா என  விவாதங்கள் அனல் பறக்கின்றன. இதற்கு முன்னர் தேர்தலின் கதையில் மக்களவைத் தேர்தல் குறித்த வெற்றி, தோல்வி விவரங்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இதோ...


1989

பஞ்சாபில் தீவிரவாதத்தைத் தடுக்கும் முயற்சி, இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் விவகாரத்தை ராஜீவ் கையாண்ட விஷயங்கள் இத்தேர்தலின் போது பேசப்பட்டன. சோசலிஸ்டுகள் இம்முறையும் ஜனதா தள் கட்சியுடன் கூட்டணி அமைத்தனர். ஆனால் 143 சீட்டுகளை மட்டுமே பெற்றனர். விபி சிங்கின் தேசிய முன்னணி சிறுபான்மை அரசாக ஆட்சிக்கட்டிலில் ஏறியது.

இடதுசாரிகளும் பாஜகவும் இந்த அரசுக்கு உதவியாக இருந்தன. ஆனால் ஓராண்டில் இந்த ஆட்சி கவிழ, சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் ஆட்சி அமைத்தார்.


1991

இத்தேர்தலிலும் காங்கிரஸ் தன் பெரும்பான்மையை விட்டு கொடுத்துவிட்டது. இதனால் சிறுபான்மை அரசான காங்கிரஸ், நரசிம்மராவை ஆட்சித்தலைவராக கொண்டு ஆட்சி செய்தது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் பெரும்பான்மை பலமின்றி சமாளித்தே ஆட்சி செய்தது சிரிக்காத பிரதமர் நரசிம்மராவின் தன்னிகரற்ற பெருமை.

தாராளமயமாக்க கொள்கைகளை அன்றைய நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் மூலம் உருவாக்கி அமல்படுத்திய துணிச்சல்காரர். ஏராளமான ஊழல்கள்(ஹர்ஷத் மேத்தா, ஜேஎம்எம் ஊழல்கள்), பாபர் மசூதி இடிப்பு ஆகியவை இவரின் சாதனைகளுக்கு களங்கமான கரும்புள்ளி!


1996

தாமரை மலர்ந்துவிட்டது. ஆம். பாஜக, மென்மையான இந்துத்துவவாதியான அடல் பிஹாரி வாஜ்பாயை ஆட்சித்தலைவராக முன்வைத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிபலம் நிரூபிக்க முடியாமல் பதிமூன்றே நாட்களில் ஆட்சி கலைந்து போனது.

ஜனதா தள் கட்சியுடன் ஆட்சியமைக்க வாய்ப்பிருந்தும் காங்கிரஸ் பிகு செய்தது. ஒருவழியாக ஜனதா தள் கட்சிக்கு, வெளியிலிருந்து ஆதரவு தர ஒப்புக்கொள்ள 1996 ஆம் ஆண்டு ஜூன்  மாதம் ஹெச்.டி. தேவகௌடா பிரதமரானார். ஆனால் இவரின் ஆட்சியும் ஓராண்டுதான்.

 பின்னர், விராட் கோலி அவுட் ஆன இந்திய டீம் என்ன செய்யும்? அடுத்தடுத்த வீரர்கள் நம்பிக்கையிழந்து அணிவகுப்பு நடத்துவார்களே அதேதான் இந்தியாவிலும் நடந்தது. தேவகௌடாவுக்குப் பிறகு,  அடுத்த பிரதமராக ஐகே குஜ்ரால் வந்தார். அவரும் ஒராண்டுதான் பதவி வகித்தார்.


1998

தாமரை இம்முறை சரியான நீர்ப்புலத்தை  பிடித்து மலர்ந்து மணம் வீசியது. உதவியது, மாநிலக்கட்சிகள். இதனால் 126 சீட்டுகள் பிடித்து தேர்தலில் வெற்றி பெற்றது. வாஜ்பாயி பதிமூன்று கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதிமூன்று மாத ஆட்சிக்குப் பிறகு, அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளரான அமரத்தலைவி ஜெயலலிதாவின் குளறுபடியால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி பறிபோனது. பாஜக இன்று அதிமுகவை ஏன் கைப்புள்ளையாக நடத்துகிறது என்று தெரிகிறதா? யெஸ் இனிய பழிவாங்கல்தான்.

1999

162 சீட்டுகள் பெற்று வாக்குகளில் 29 சதவீதம் பெற்று உறுதியான கட்சியாக பாஜக மாறியது இந்த ஆண்டில்தான். வாஜ்பாயி பல்வேறு சதிகளைக் கடந்து தேசிய முன்னணி அரசைக் கூட்டணி உதவியுடன் அமைத்தார். அதோடு இல்லாமல் கருங்காலிகளை களைந்து ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆண்டது பாஜகவின் வெற்றி.

2009

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2004 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. 2004 ஆம் ஆண்டு இந்தியா - அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை செய்தவுடன் இடதுசாரிகளுக்கு கோபம் வரை கூட்டணி முறிந்துபோனது. அதற்கெல்லாம் கைக்கட்சி கவலையே படவில்லை. 206 சீட்டுகளுடன் வலுவாக சேரில் கர்ச்சீப் அல்ல  தேங்காய்ப்பூ துண்டு போட்டு இடம்பிடித்தது. ஏராளமான சீர்திருத்தங்களை அமல்படுத்தியது. நூறு நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கியது. ஆனாலும் பூதமாய் கிளம்பிய ஊழல்களை தடுக்க முடியவில்லை. இதற்கான விளைவை 2014ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சந்தித்தது.


2014

மோடி சூப்பராக பிளான் போட்டு ஊழலுக்கு எதிரானவன் என்று சொல்லியே வென்றார். குஜராத்தில் இவர் செய்த கொடூரங்கள் பின்னர்தான் தெரிய வந்தன. அடிப்படையில் தனியார் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றும் அனைத்து தகுதிகளும் கொண்டவர். 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜக முழு மெஜாரிட்டியுடன் ஜெயித்தது. காரணம், மிகச்சிறந்த விளம்பரம், மோடியின் கவர்ச்சி, வசீகரம் என்பதே உண்மை.

தாமரையின் எழுச்சியில் கைக்கட்சி காணாமல் போனது. அதன் அரசியல் வரலாற்றில் இப்படியொரு பின்னடைவை அது சந்தித்தே இருக்காது. வெறும் 44 சீட்டுகளைப் பெற்று தோற்றுப்போனது.

நன்றி: தி டைம்ஸ் ஆஃ ப் இந்தியா

மோடி தெளிவாக தன் லட்சியத்தில் ஏறத்தாழ 75 சதவீதம் சாதித்துவிட்டார். அடுத்து தேர்தலில் ஜெயிக்க, பன்மைத்துவம் கொண்ட இந்தியாவில் என்ன செய்யவேண்டும்? சாதி ரீதியாக, மதம் ரீதியாக பிரிக்க வேண்டும். ஊடகங்களை விலைக்கு வாங்க வேண்டும், குரல் கொடுக்கிறார்களா, மனித உரிமை ஆட்களா, சுரங்கம் தோண்ட எதிர்ப்பா உடனே தேசபக்தி பேச்சை கையில் எடுக்கவேண்டும். ஜனநாயகம் பேசுபவர்களை நடுத்தெருவில் சுட்டுத்தள்ள வேண்டும். அமைப்பிலிருந்து குரல் வருகிறதா? அதன் நிதி ஆதாரத்தை நசுக்க வேண்டும். 

வேலையில்லாத திண்டாட்டத்தைப் பற்றி பேசுகிறார்களா? உடனே கங்கைநீர் தூய்மை திட்டத்தை கையில் எடுத்து ஜப்பான் பிரதமரோடு நீருக்கு ஆரத்தி எடுக்கவேண்டும். கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யவேண்டும். குறிப்பாக மனதின் குரலை தனது ஒருவரின் குரலை  மட்டும் பிறர் கேட்பது போல செய்யவேண்டும். படித்தால் வேலைக்குத்தான் போகவேண்டும் என்பதில்லை; பக்கோடா விற்றால் கூட சம்பாதிக்கலாம் என்று காந்தியை மிஞ்சிய தற்சார்பு பொருளாதாரம் பேசும் மேக் இன் இந்தியா சூத்திரதாரி. அதற்காக வல்லபாய் படேல் சிலைக்கு சீனக்கம்பெனிக்கு டெண்டர் கொடுத்த விவகாரம் எல்லாம் பேசக்கூடாது. ஆன்டி இந்தியன் ஆயிருவீங்கஜி. 













பிரபலமான இடுகைகள்