லவ் இன்ஃபினிட்டி: என் ஆயுசுக்குமான தோழியடி நீ!



pinterest/behance




லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: சரஸ், வித்யா பாலன்

எனக்கு கவி எழுதிய கடிதங்கள் அனைத்தும் விசேஷமானவை. அவளின் அன்பு முழுக்க முழுக்க எனக்கே கிடைத்த காலம் அது. பயன் எதிர்பார்க்காத பாசம் சாதாரணமா என்ன? கவி எப்போதும் எனக்கு ஸ்பெஷல்தான். மணிரத்னம் எப்படி ஏ.ஆர். ரஹ்மானுக்கு முக்கியமோ அதேபோல்தான் என வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புத் தோழனுக்கு,
ப்ரியமுடன் தோழி எழுதிக்கொள்வது, நீ நலமாக உள்ளாயா? வீட்டில் எல்லோரும் நலமா? அப்பாவுக்கு இப்போது எப்படி உள்ளது?

நீ திடீர்னு உன்னைப் பத்தி கேட்டதும் எனக்கு செம Shock. எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியல. உன் பிரார்த்தனையில் கொஞ்சம் நிறைவேறியிருக்கு. குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டது. ஆனால் மனசுதான் என்னவோ பாரமா இருக்கு.. எனக்கே தெரியுது. எல்லார்கிட்டேயும் பேசறேன். சிரிக்கிறேன். ஆனா எதிலேயும் ஒட்டாம உள்ளுக்குள்ள நான் நார்மலா இல்ல. சந்தோஷப்படறதுக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயங்கள். ஆனா...

அதையெல்லாம் என்னால சந்தோஷமாக அனுபவிக்க முடியல. யோசிச்சுப் பார்த்தேண்டா.. இதைப்பத்தியெல்லாம் நான் உன்கிட்ட இதுவரைக்கும் பேசினதேயில்லை. எதையும் நான் மறைக்கணுங்கிறது காரணம் இல்லை. Just சொல்லல. நான் என் உணர்வுகளை நிறைய உங்கிட்ட Share பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். உன்னோட நேருக்கு நேரா பேசி ரொம்ப நாளாவுது. உன் மனசோட நான் எப்பவும் நெருக்கமாகவே இருக்கிறேன். அது நம்ம ரெண்டு பேருக்கும் இயல்பா நடக்குது.

உன்னைப் பார்க்கணும்போல இருக்கு. மனசுவிட்டு பேசணும். யாரும் உன்னைப் போல இல்லை. ஏற்கனவே இதையெல்லாம் சொல்லியிருக்கேன்.  ஆனா உனக்கு என்ன குழப்பம்?

படிக்கிறதைப் பத்தியா? நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. எதிர்காலம் பத்தி யோசிக்கணும். ஆனா இப்படித்தான் நடக்கணும்னு எதிர்பார்க்காதே. எதிர்பார்ப்புகள் தோத்தாலும் அதை தாங்கிக்கிற சக்தியை வளர்த்துக்கணும். இந்த வயசுலதான் சாதிக்க முடியும். கண்டிப்பா நீ சாதிப்பாய். இன்னும் Concentrate பண்ணு. மத்ததெல்லாம் கொஞ்சகாலம் ஒதுக்கி வை. உனக்குன்னு ஒரு Aim வெச்சுக்கோ. பிளான் பண்ணி படி. இதுக்குள்ள நான் இந்த வேலையை முடிச்சிரணும்னு அப்படின்னு நினை. அப்படி உன்னால செய்யமுடியாம போனால் அதுல உனக்கு ஈடுபாடு இல்லை or அதுல உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லைன்னு அர்த்தம்.

சாதிக்கணும்னு நினைச்சுட்டா மனசில் ஒரு வேகம் வெறி இருக்கணும் மத்ததெல்லாம் கண்ணுக்குத் தெரியக்கூடாது.

கவிதைப் போட்டிக்கு போயிருந்ததாக lr எழுதியிருந்தாய். தோல்வியாய் இருந்தால் என்ன? Don't worry கடவுள் உனக்காக பின்னாடி நிறைய பரிசுகள் கொடுக்கப்போகிறார் என்று நினைச்சுக்கோ. நீ உன்னுடைய திறமையை இன்னும் Update பண்ணிக்கோ. இதுதான் அதற்கான Chance. நிறைய Books `படி. நிறைய எழுது.

லெட்டரை மூடி வைத்தேன். கல்லூரி வாழ்க்கை சலிக்காமல் இருந்ததில் கவியின் பங்கு முக்கியமானது. இவள்தான் கொஞ்சம் என் இயல்பைப் புரிந்துகொண்டு பேசுவாள். ஈரோடு போனால் ஜாலியாக பேசியபடி அபிராமி, சண்டிகா என தியேட்டருக்கு போவோம். சிறந்த தோழி. சொந்தக்காரி அப்படிங்கிற முறையில்தான் அறிமுகம். எளிமையா பேசுவா. ஒவ்வொருமுறையும் பழகுற முறை, பாசம் எல்லாமே விண்டோஸ் மாதிரி அப்டேட் ஆகிக்கிட்டே இருக்கிறது Kavi ஸ்பெஷல்.

கவிதைப்போட்டிக்கு தலையணை சைசுக்கு புத்தகத்தை கொடுக்கிறதுக்கு ரொக்கப்பரிசு கொடுத்தா உதவியா இருக்கும். யோசிக்க மாட்டேங்கிறானுக. என் சட்டையைப் பார்த்தேன். லோகு, ரவி அண்ணன்கிட்ட சில சமயம் கடன் வாங்கிப் போடுவது வழக்கம். அதோடு அதை கவனமான அயர்ன் பண்ணி போடணும். நீட்டா இருக்கவேண்டாமா?

கந்தசாமி பையனா இருக்கிறதால, ஊரைவிட்டு தள்ளி வீடு இருக்கிறதால சட்டை கசங்கி கிடக்கணுமா? கவுண்டனுங்க புழுங்கிச் சாவட்டுமே. ஓசு வேலை செஞ்சிக்கிட்டு இவனுங்க காலை நக்கிட்டு கெடக்கணும்னு நினைக்கிறானுங்க. இப்பத்தான் ஊரில் மினிபஸ்கள் நிறைய ஒடிக்கொண்டிருக்கின்றன. வீட்டுக்கு பின்னாடி வல்லரசு, முன்னாடி சாலையில் திருமகள், அம்மன் என பெயரிட்ட பஸ்களில் எங்கள் ஊர் பெண்கள் மெல்லிய வெட்கத்துடன் பயணிப்பதை பார்க்கிறேன். என்ன அழகு!



(காதலையும் நட்பையும் பேசுவேன்)